சவாலான பயோடெக் துறையில் சாதிக்கும் பெண் தொழில்முனைவர் டாக்டர். மேனகா மகேந்திரன்!
அறிவியல் உலகின் அற்புதமான துறையான பயோடெக்னாலஜியில் புதுமையான முயற்சி மூலம் தொழில்முனைவராக உயர்ந்து நிற்கிறார் டாக்டர். மேனகா மகேந்திரன். அவரின் சாதனை என்ன?
துறை புதிது, சவால் புதிது, முயற்சி புதிது, சிந்தனை புதிது என்று தனக்கிருந்த ஆர்வத்தால் உந்தப்பட்டு இன்று பயோடெக்னாலஜி துறையில் தமிழகத்தின் முதல் பெண் தொழில்முனைவராக தலை நிமிர்ந்து நிற்கிறார் இந்த புதுமைப் பெண்.
மேனகா மகேந்திரன், இவரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, M.Sc மைக்ரோபயாலஜி அதனைத் தொடர்ந்து M.Phil மைக்ரோ பயோ டெக்னாலஜி முடித்து விட்டு சென்னையில் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பேராசிரியராக இருந்தவர் எப்படி தொழில்முனைவரானார் என்று மேனகா மகேந்திரனிடம் பேசத் தொடங்கியதும் உற்சாகம் பொங்க அவர் பதிலளிக்கத் தொடங்கினார்.“
கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுவதில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை, தனித்துவம் தான் என்னுடைய அடையாளம் என்பதை எம்.எஸ்.சி படிக்கும் போதே நான் உணர்ந்திருந்தேன். வரையறைக்குட்பட்டதையே மற்ற மாணவர்கள் ப்ராஜெக்ட்டாக முயற்சிக்க நான் சற்றே வித்தியாசமாக ஃபுட் மைக்ரோபயாலஜியில் ஒயின் எப்படி தயாரிப்பது என்பதை ஆராய்ந்து அதைச் செய்து பார்த்தேன்.”
துறை மைக்ரோபயாலஜியாக இருந்தாலும் பொருட்களை மேம்படுத்துதலில் எனக்கு ஆர்வம் இருந்தது அப்போது தான் தெரிய வந்தது. புத்தகங்களைத் தேடிப்படித்து திராட்சையில் இருந்து ஒயின் எப்படி தயாரிப்பது என்று உற்பத்தி செய்து என்னுடைய துறைத் தலைவரிடம் கொடுத்த போது, அவர் அதனை சுவைத்துவிட்டு அசந்து போய்விட்டார்.
அப்போது முதல் அவர் என்னை ‘ஒயின் லேடி’ என்றே அழைக்கவும் தொடங்கியதாகக் கூறுகிறார் மேனகா. இப்படியாக கல்லூரி காலம் தொட்டே Product development பற்றிய எண்ணம் மேனகா மனதில் இருந்து கொண்டிருக்க 2003ம் ஆண்டில் பேராசிரியர் பணிக்கு வந்தவருக்கு திருமணமும் முடிந்த பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேப்ப மரம் மற்றும் அதன் எண்டோபைட்டுகள் சார்ந்த ஆராய்ச்சியை முன்னெடுத்து Ph.D பட்டம் பெற்றிருக்கிறார்.
வேப்ப மரத்தில் இருக்கக் கூடிய செயல் மூலக்கூறுகளை பிரித்தெடுத்து அவற்றை எண்டோபைட் நுண்பூஞ்சைகளாக வளர்த்து சில நோய் காரணிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்பதே மேனகாவின் முனைவர் ஆராய்ச்சி.
முனைவர் பட்டம் முடித்த பின்னர் எதேச்சையாக பெண்கள் பயோடெக் பூங்கா பற்றி பார்த்திருக்கிறார் மேனகா. இந்தத் திட்டமே புதிதாக இருக்கிறதே என்று அது குறித்து என்னுடைய தேடலை மேலும் விரிவாக்கம் செய்து பார்த்த போது, மேனகாவிற்கு மிகவும் உற்சாகமாக இருந்திருக்கிறது.
தொழில்முனைவுக்கான சரியான திட்டத்தை நிபுணர்கள் குழுவின் முன்னர் விளக்கி தொழில் தொடங்குவதற்கான அனுமதி பெற வேண்டும். ஒரு திட்டம் எப்படி தொழிலாக மாற்றப்படப் போகிறது, வருமானம் எப்படி ஈட்ட முடியும் என்று விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையால் ஆசியாவிலேயே முதன்முதலாக சிறுசேரியில் தொடங்கப்பட்டது தான் பெண்கள் பயோடெக் பூங்கா.
செடிகள் மற்றும் கல்சர்களில் இருந்து என்டோபைட்களை பிரித்தெடுத்தல், பயாப்ஸி மூலக்கூறுகளை கணக்கிடல் உள்ளிட்டவற்றோடு இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான கூடமாகவும் செயல்பட வைத்திருந்த திட்டத்தை எனது சார்பாக அனுப்பி வைத்தேன்.
இந்தத் திட்டத்திற்கு குழு ஒப்புதல் அளித்த நிலையில், 2014ம் ஆண்டில் பயோநீம்டெக் இந்தியா Bioneemtec India Private Limited. நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனராக மேனகா செயல்பட இயக்குனராக அவரது கணவர் மகேந்திரன் செயல்படுகிறார். மகேந்திரனும் வேதியியல் ஆராய்ச்சியாளராவார்.
பயோடெக் துறையில் தொழில் தொடங்கிய அனுபவம்
விடாமுயற்சி மற்றும் புத்திக் கூர்மையான செயல்பாட்டினால் வெற்றிகரமாக 8வது ஆண்டில் சிறந்த பெண் தொழில்முனைவராக பயணித்துக் கொண்டிருக்கிறார் மேனகா.
பயோநீம்டெக் தொடங்குவதற்கு ஒப்புதல் கிடைத்த பின்னர், பல இடங்களில் நிதி உயர்த்த முயற்சிகளை எடுத்தேன், ஆனால் அது எதுவும் கைகொடுக்காத நிலையில் சொந்த சேமிப்பு மற்றும் கணவர் தந்த நிதியான ரூ.3 லட்சத்தைக் கொண்டு தொழிலைத் தொடங்கினேன்.
தொடக்கத்தில் மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்குத் தேவையான compoundகளை பிரித்து அளித்தல், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலக்கூறுகளை வழங்குதல் என 3 ஆண்டுகளை கடுமையான சவால்களுக்கு மத்தியில் தான் இயக்கி வந்தேன். தொழில்முனைவராக ஓடிக்கொண்டிருந்த போது என்னுடைய கணவர் சீனாவில் பணியாற்றிக் கொண்டிருந்த பன்நாட்டு நிறுவனத்தில் மைக்ரோபயாலஜிஸ்ட் தேவை என்ற வாய்ப்பும் வர, ஒரு குழுவை இங்கே அமைத்துவிட்டு மேலும் அனுபவம் பெறுவதற்காக சீனாவிற்கு பறந்து விட்டேன் என்கிறார் மேனகா.
24 மணி நேரம் போதவில்லை என்று சுழன்று கொண்டிருந்த மேனகாவிற்கு சீனாவில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியது, மேலும் பல புதிய அனுபவங்கள் கிடைத்துள்ளது. சுமார் 3 ஆண்டுகள் அங்கே மேனகா பணியாற்றிய சமயத்தில் மருந்து தயாரிப்பில் மூலக்கூறுகளை எவ்வாறு பயன்படுத்துவது, அங்கீகாரம் பெறுவதற்காக சமர்பிக்கப்படும் பொருட்களை ஆவணப்படுத்துவதற்கென தனியாக இருந்த குழுவிலும் சேர்ந்து செயல்படுதல் என மேலும் மேலும் தன்னை மெருகேற்றிக் கொண்டிருந்திருக்கிறார். சீனாவில் அனுபவம் சென்னையில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் என சுழன்று கொண்டிருந்தவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் தமிழகம் திரும்பினார்.
பயோநீம்டெக் நிறுவனத்தை அதிக எண்ணிக்கையில் நிபுணர்களைக் கொண்டதாக விரிவாக்கம் செய்து தனக்குக் கிடைத்த வெளிநாட்டு தொடர்புகள் மூலம் புதிய திட்டங்கள் பலவற்றை வகுத்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக 2019ம் ஆண்டில் சீன நிறுவனம் ஒன்று பயோநீம் டெக்கின் திட்டத்தால் ஈர்க்கப்பட்டது.
புதிய புராஜெக்ட் கையெழுத்தான சமயத்தில் கொரோனா ஊரடங்கு வந்தது. கஷ்டப்பட்டு அந்த நாட்களைக் கடந்தோம். தளர்வுகள் அமல் படுத்தப்பட்டவுடன் 50% ஊழியர்களைக் கொண்டு வேலையைத் தொடங்கினோம்.
ரூ.45 லட்சம் மதிப்புள்ள புராஜெக்டை கோவிட் சமயத்திலும் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தோம். முதற்கட்டமாக ரத்த உறைவுக்கான மருந்துகளின் மூலப் பொருள்களை 500 கிராம் தயாரித்துக் கொடுத்தோம். வெற்றிகரமாக அதை முடித்துக் கொடுத்ததால் மேலும், சில புதிய புராஜெக்டுகள் கிடைத்தன. 2020 - 2021-ம் ஆண்டில் ரூ.1.5 கோடி வருவாய் கிடைத்தது. அடுத்த நிதியாண்டில் ரூ.3 கோடி இலக்கை எட்டுவோம் என்று நம்புகிறேன்.
ஏறத்தாழ ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழிலில் முதல் ஒன்றரை ஆண்டு காலம் கடுமையான போராட்டமாகவே இருந்தது. வரவு செலவு எதுவும் கிடையாது மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் கிடைக்கும் பணமும் கூட வாடகைக்கும், பொருள் செலவிற்குமே சரியாக இருந்தது. எனினும் மனம் தளரவில்லை டிஜிட்டல் மார்கெட்டிங், துண்டுப் பிரசுரம் விநியோகம் என்று தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாக டெல்லி, மும்பையில் செயல்பட்டு வந்த நிறுவனங்களுடன் தொழில் ஒப்பந்தம், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதனால் கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயோநீம்டெக் பிரபலமடையத் தொடங்கியது என்கிறார் மேனகா.
பயோநீம்டெக் சந்திக்கும் சவால்கள்
நிறுவனங்கள் கோரும் மூலக்கூறை அவர்களின் தேவைக்கு ஏற்ப அளிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான பணியல்ல. பரிசோதனைக் கூடத்தில் பலகட்ட சோதனைகள் முயற்சிகள் மற்றும் பலரின் கடினஉழைப்பும் தேவை. அதிர்ஷ்டவசமாக பயோநீம்டெக்கில் செயலாற்றும் அறிவியலாளர்கள் உழைப்பு என்று வந்துவிட்டால் லாபம், நஷ்டம் என்றெல்லாம் கணக்கு பார்க்காமல் விடாமுயற்சியோடு செயல்பட்டு நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் moleculesஐ கொடுப்பதே எங்களின் அடையாளம் என்று பெருமையாகச் சொல்கிறார் மேனகா.
மேனகா பிஎச்டி முடித்த காலகட்டத்தில் பயோடெக்னாலஜி துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருந்த போதிலும் ரிஸ்க் எடுத்து தொழில்முனைவுப் பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
“என்னுடைய தொழில் முன்னோடி என்றால் பயோகான் நிறுவனத்தில் மேலாண் இயக்குனர் கிரன் மஜூம்தார், கல்லூரி காலத்தில் விளையாட்டுத் தனமாக ஒரு மின்னஞ்சலை அவருக்கு அனுப்பி நானும் உங்களைப் போல ஆக வேண்டும் என்று கூறி இருந்தேன். மாயாஜாலம் போல 2 நாட்களில் அவரிடம் இருந்து வாழ்த்துகள் மேனகா என்று பதில் வந்திருந்தது அது எனக்கு மிகப்பெரும் சக்தியைத் தந்தது,” என்கிறார்.
வேதியியல் துறையிலும் பயோடெக்னாலஜியின் தேவை இப்போது அதிக அளவில் இருக்கிறது. மூலப்பொருள்களை உருவாக்குவதற்கு அபாயகரமான வேதிப்பொருள்கள், கரைப்பான்கள், துணைப் பொருள்கள், மனிதப் பாதுகாப்பு இவை யெல்லாம் மிகப்பெரிய சவால்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெற வேண்டிய சான்றிதழ் எனப் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டும். அதற்கான முதலீடும் மிக அதிகமாகத் தேவைப்படும். அதனாலேயே மூலப் பொருள்கள் தயாரிப்பதற்கு இந்திய நிறுவனங்கள் முன்வருவதில்லை.
இயற்கைவழி வேதியியல் ஆராய்ச்சிகள்
வேதியியல் சார் ஆராய்ச்சிகள் பல்வேறு பாதிப்புகளையும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகின்றன, இந்த நிலையில் ஆபத்தில்லா அறிவியலே தேவை, பயோநீம்டெக் “பசுமை வேதியியல்” வழியிலேயே பரிசோதனைகளைச் செய்கிறது என்று பெருமைப்படுகிறார் மேனகா.
வேப்ப மரம், கற்றாழை உள்ளிட்டவற்றில் இருக்கும் சில செயல் மூலக்கூறுகள் மருந்து தயாரிப்பிற்குப் பயன்படுகின்றன. இதற்காக தொடர்ந்து இயற்கை வளத்தை அழிக்கத் தொடங்கினால் ஒரு கட்டத்தில் இவ்வகை மருத்துவச் செடிகளே அழிந்து போகும் நிலை ஏற்படும். ஆனால் செடிகளை அழிக்காமல் விதை மற்றும் ஒரு இலையினை வைத்தே அவற்றின் அதே செயல் மூலக்கூறுகளை என்னால் பரிசோதனைக் கூடத்தில் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அளவில் compoundகளை கொடுக்க முடியும் என்கிறார் மேனகா.
இயற்கை சமநிலை என்பது ஒரு செடியை அழிக்கும் போது புதிதான ஒன்றை விதைத்தாலே சரியாகும். அன்றாடம் நாம் கண்டு வரும் பருவநிலை மாற்றத்தை சரிசெய்ய மரம் வளர்ப்பு குறித்து பல விழிப்புணர்வு செய்யப்படுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைக்கப் போகும் பலனைவிட இயற்கைக்கு உடனடியான தீர்வு தேவை எனவே மரம் வளர்ப்பை நவீன அறிவியலோடு சேர்த்து செயல்படுத்த வேண்டும், என்கிறார்.
அதாவது 15 ஆண்டுகளில் வளரும் மரத்தை 5 ஆண்டுகளில் வளர்க்க வேண்டும் அதுவே மியாவாக்கி காடுகள் உருவாக்கம். இது தொடர்பாக நாங்கள் பல ஆராய்ச்சிகளைச் செய்து சில ஊட்டச்சத்து நுண்பூஞ்சைகளை பரிசோதித்து பாதுகாத்து வைத்துள்ளோம்,
இவற்றின் உதவியோடு மரங்களை நடும்பட்சத்தில் 3 ஆண்டுகளில் மரம் வளர்ப்பு சாத்தியம் என்கிறார் மேனகா. மாநில அளவில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
தொழில்முனைவைத் தேர்ந்தெடுக்கும் போது Hard and Smart workerஆக இருக்க வேண்டும். மைக்ரோபயாலஜி படித்தால் ஆய்வகங்களில் பணியாற்றுவது மட்டுமே வாய்ப்பல்ல, அதிக முயற்சிகளும் மெனக்கெடல்களும் செய்தால் நிச்சயமாக தொழில்முனைவராக முடியும்.
மக்களுக்கு பயன்படும் எதையுமே அறிவியல் ரீதியில் தொழிலாக மாற்ற முடியும். உதாரணத்திற்கு செறிவூட்டப்பட்ட மூலிகைக் காளான் வளர்ப்பு, புரோபயோடிக் பானம் தயாரிப்பு, தேனை மதிப்பு கூட்டப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த பொருளாக உருவாக்குதல் என பல வாய்ப்புகள் இருக்கிறது. முறையான ஆராய்ச்சியுடன் திட்டம் தயார் என்றால் MSME, DPT, PIRCயின் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறலாம்.
ஒரு நேரத்தில் பல திட்டங்களில் கவனம் செலுத்தாமல் ஒரே ஒரு பொருளில் சரியாக கவனத்தை செலுத்தி ஆராய்ச்சி செய்தால் உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும் இலக்கு சரியாக இருந்தால் நிச்சயம் வெற்றிகாண முடியும். இதற்கு சரியான உதாரணம் எங்களது ஸ்டார்ட் அப் ஆன பயோ நீம் டெக் என்கிறார் மேனகா.
2 பேருடன் தொடங்கப்பட்ட இவரின் தொழில்முனைவுப் பயணம் இப்போது 23க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வாளர்களுடன் நல்லதொரு பெயரையும், இத்துறைசார்ந்தவர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளதாகக் கூறுகிறார். இன்று முதலீடு நாளை லாபம் என்றில்லாமல் பொறுமையோடு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என கூறுகிறார்.
பயோநீம்டெக் இயக்குனரான முனைவர். மகேந்திரன் பாலாச்சாரி, அண்மையில் கோவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான சில மூலக்கூறுகளை கண்டறிந்துள்ளார். பரிசோதனையில் கொரோனா வைரஸ் வீரியத்தை கட்டுப்படுத்துவதில் இது நல்ல பலனைத் தருவதைக் கண்டறிந்து அதற்கான காப்புரிமையையும் பெற்றிருக்கிறார்.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் மூலப்பொருட்களைக் காத்திருக்காமல் இந்தியாவிலேயே கோவிட்க்கான மருந்துகளை தயாரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்கிறார் மேனகா.