'கத்தி கொடுத்த வாழ்வு'; 1 மணி நேரத்தில் ஒரு ஆடு; கசாப்பு தொழிலில் சிறக்கும் பெண்களின் கதைகள்...!

By jayashree shree|21st Jan 2021
பெண் கசாப்புக் கடைக்காரர் நின்று கறி வெட்டுதல் என்பது கசாப்பு தொழிலில் அசாதாரணமான காட்சியாகும். இன்று, காட்சிகள் மாறத் துவங்கியுள்ளன. முழு ஆட்டை துண்டு துண்டாக்க பெண்களும் கத்தி பிடிக்க துவங்கிவிட்டனர். ஆம், உடல் வலிமை ஒருபுறம் இருக்க, ஆண் ஆதிக்கம் செலுத்தும் கசாப்பு தொழிலில் பெண்கள் கசாப்பு கடைக்க
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

நாவிற்கு மட்டுமின்றி கண்ணிரண்டிற்கும் விருந்தளிக்கும் ஓர் அழகிய கறித்துண்டினை ருசிக்கும் முன்னே ரசிக்கும் ஒரு அசைவப் பிரியராக நீங்களிருப்பின், அதில் ஒரு கசாப்பு கடைக்காரரின் பணிமகிமை எத்தகையது என்பதை உணர்ந்திருப்பீர்கள். ஒரு குறும்பாடோ அல்லது வெண்ணிற பிராய்லர் கோழியோ, லெக்பீஸ்சாகவும், சிறு கறித்துண்டுகளாகவும் மாற்றப்படுவது ஒரு கலை.


கலையுடன் தொடர்புடைய பணியாகினும், இறைச்சி வெட்டுவது எப்போதுமே ஒரு ஆணின் பணியாகவே கருதப்படுகிறது. பெண் கசாப்புக் கடைக்காரர் நின்று கறி வெட்டுதல் என்பது கசாப்பு தொழிலில் அசாதாரணமான காட்சியாகும். இன்று, காட்சிகள் மாறத் துவங்கியுள்ளன. முழு ஆட்டை துண்டு துண்டாக்க பெண்களும் கத்தி பிடிக்க துவங்கிவிட்டனர். ஆம், உடல் வலிமை ஒருபுறம் இருக்க, ஆண் ஆதிக்கம் செலுத்தும் கசாப்பு தொழிலில் பெண்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். உண்மையில், கசாப்பு தொழில் எத்தகையது? - கறி வெட்டும் பெண்களின் அனுபவப் பகிர்வு இதோ...!

butchers

'கம்ப்யூட்டர் டூ கசாப்புதொழில்' - சுடர்வாணி

Tendercuts எனும் இறைச்சி விற்பனை நிலையத்தில் சுடர்வாணி முதலில் செய்தது கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பில்லிங் போடும் பணி தான். ஆனால், கம்ப்யூட்டர் பட்டனின் சத்தங்களுக்கு இடையே கேட்ட மொடா சைஸ் கத்தி எழுப்பிய சத்தம் சுடர்வாணியை வெகுவாக கவர, கறிவெட்டும் தொழிலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

sudar vani

சுடர்வாணி

"12வது வரை படிச்சிட்டு, பியூட்டிஷியன் கோர்ஸ் முடித்தேன். முதலில் Tendercuts-ல் பில்லிங் வேலை தான் செய்திட்டு இருந்தேன். ஃப்ரீ டைமில் கறி எப்படி வெட்டுறாங்கனு பார்ப்பேன். அவங்க வெட்டுற ஸ்டைலை பார்க்க பார்க்க எனக்கும் ஆசை வந்தச்சு. சீனியர் புட்சர்சும் சொல்லிக் கொடுத்தாங்க. எல்லாரும் என்கிரேஜ் பண்ணாங்க. மேனேஜ்மென்ட்லையும் கறி வேஸ்ட் செய்தாலும் பரவாயில்லைனு கத்துக்க தான் சொன்னாங்க.


என் கணவர் தான் 'வேணாம்மா. உன்னால முடியுமா? கறி கவுலில் நின்றுவியா'னு கேட்டாரு. எனக்கும் முதல் நாள் வேலை செய்திட்டு, தொடர்ந்து வேலை செய்வேனானு சந்தேகம் வந்திருச்சு. ஏன்னா, மட்டன் பயங்கர வெயிட்டா இருக்கும். துாக்கிப்போட்டு வெட்டிறதால கையெல்லாம் வலிக்கும். ஒரு வாரத்துக்கு பயங்கரமாக கை வலிச்சது. அப்புறம் போக, போக அதுவா பழகிருச்சு.

”கறி வெட்டும் கட்டை, கத்தி, சிக்கன், மட்டனையெல்லாம் வெளிபுறமிருந்து பார்த்துவிட்டு, இறைச்சி வெட்டும் பணியை பெண்களால் செய்ய இயலாது அல்லது இறைச்சி வெட்டும் பணியை பெண்கள் செய்ய விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். உடல் திறன் அதிகம் தேவைப்படும் இத்தொழிலை ஆண்களால் மட்டுமே செய்ய இயலும் என்ற எண்ணமும் சமூகத்தில் நிலவி வருகிறது. அதனாலே, பெண்கள் அதிகம் இத்துறைக்கு வருவதில்லை. ஆனால், உண்மையிலேயே விரும்பினால் யார் வேண்டுமானாலும் கத்தி பிடித்து கறிவெட்ட முடியும்,” என்கிறார்.

நான் அதுக்கு முன்னாடி அவ்வளவு பெரிய கத்திய கூட பார்த்தது இல்லை. அந்த கத்திய என்னால துாக்கவே முடியல. கத்தியே முக்காக்கிலோ வெயிட் இருக்கும். ஆனா, இப்போ கத்தி விளையாடப் பழகிருச்சு.


கொடுவா மீனின் எலும்பு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும். வெட்டுவதற்கு கஷ்டமாயிருக்கும். அதை வெட்டுவதற்குனு சில டிரிக்ஸ் இருக்கு. என்னோட சீனியர் புட்சர்ஸ் (Butchers) அதை கரெக்ட்டா சொல்லிக் கொடுத்திட்டாங்க. கத்துக்கத் தொடங்கிய புதிதில் கரெக்டா வெட்டாமல் வஞ்சரம் மீன்லாம் வேஸ்ட் பண்ணிருக்கேன். வேலையில் கவனமாக இருக்கணும். இறால் சுத்தம் செய்யும்போது கவனமாக இருக்காவிட்டால், கையில் நறுக் நறுக்குனு குத்திரும்.

sudar vani

இப்போ எனக்கு கறிவெட்ட ரொம்ப பிடிச்சிருக்கு. அக்கம் பக்கத்துகாரங்க முதலில், கறிக்கடைக்கா வேலைக்கு போறனு ஒரு மாதிரி கேட்டாங்க. எங்க கடை பக்கா ஹைஜீனிக்கா இருக்கும். நீங்க வேணா கடைக்கு வந்து பாருங்கனு சொல்லுவேன்.


எனக்கே தெரியாமல் பக்கத்து வீட்டுகாரங்க கடைக்கு வந்து கறி வாங்கிட்டு போயிருகாங்க. இப்போ, அவங்களே என்கிட்ட வேலைக்கு சேர்த்துவிட கேட்கிறாங்க. ஏன், என் கணவரே இப்போ டெண்டர்கட்சில் தான் கறி வெட்டிட்டு இருக்காரு. அவரு டிரைவர். லாக்டவுன் சமயத்தில் சுத்தமா பிழைப்பு போயிருச்சு. அப்போ, லாக்டவுனில் மட்டும் வேலை பார்க்கிறதுக்காக சேர்ந்தாரு. இங்கேயே பிடிச்சு போய் ஒரு வருஷமா கறி வெட்டுறாரு.

” உண்மையா சொல்றேன் இந்த வேலைக்கு சேர்ந்த அப்புறம் ஒரு தன்னம்பிக்கைக் கிடைச்சது. முன்னாடிலாம் எங்கேயுமே தனியா போக பயப்படுவேன், போகவும் மாட்டேன். இப்போ, எனக்கு ஒரு தைரியம் கிடைச்ச மாதிரி இருக்கு,” என்று தலைநிமிர்ந்து பேசுகிறார் சுடர்வாணி.

அப்புறம், இந்த வேலையால் கிடைத்த முக்கியமான விஷயம், பிள்ளைகளுக்கு சிக்கன் லாலிபாப், போன்லெஸ்னு நானே வெட்டி வெரைட்டியா சமைச்சு கொடுக்குறேன். இப்போலாம், பிள்ளைகளுக்கு சமைச்சுட்டு மீன் முள்ளு எடுத்து கொடுக்கிறதுல்ல, மீன் முள்ள எடுத்திட்டு தான் சமைக்கவே செய்றேன்.

”நான் இதுக்கு முன்னாடி பாக்காத மீன்லாம் இங்க வந்து தான் பார்த்தேன். வஞ்சரம் மீன்லாம் என் உயரத்துக்கு பார்த்திருக்கேன். அது வெட்டுறதுக்கு முன்னாடி ஆசையா பக்கத்துல நிக்க வச்சு போட்டோலாம் எடுத்து வச்சிருக்கேன்," என்று படபடவென சுடர்வாணி உதிர்த்த வார்த்தைகளிலே வெளிப்பட்டது செய்யும் தொழிலில் அவருக்கிருக்கும் நேசிப்பு.

'கத்தி கொடுத்த வாழ்க்கை இது!' - சின்னப்பொண்ணு

கடலுார் மாவட்டம் பண்ருட்டி பக்கத்தில் வீரபெருமநல்லுார் தான் எங்கவூர். எங்க நைனா கறிக்கடை வச்சிருந்தாரு. வீடும், கடையும் பக்கம் பக்கம் தான். வீட்டைவிட கறிக்கடையில் தான் அதிகம் இருந்திருக்கேன். எங்க வீட்டில மூணு பேரும் பொம்பளை பிள்ளைங்க தான். என்னைய மட்டும் ஆம்பளை பிள்ளையா கூடவே வச்சுகிட்டாரு. எங்கயாச்சும் ஆடு பேரம் பேசிட்டு வந்திடுவாரு, என்னை தான் போய் ஆட்டை கட்டிட்டு வரச்சொல்லுவாரு. நானும் சைக்கிள எடுத்துபோய் டையர் டியூப்பை வச்சி இழுத்துகட்டி துாக்கிட்டு வந்துருவேன்.


கல்லாப்பெட்டியில் காசு வாங்கிப் போட, கறிய அலசி கொடுக்க, தலையை உறிச்சு கொடுக்கனு கடையே கதினு கடப்பேன்.

”நைனானுக்கு வயசாகி உடம்புக்கு முடியாமல் போயிட்டாரு. அப்பவே கொஞ்சம் கொஞ்சமா கறி வெட்ட சொல்லி கொடுத்துட்டாரு. நைனா இறந்தப்போ, அக்காக்குலாம் கல்யாணமாகிருச்சு. நானும், அம்மாவும் மட்டும் தான் வீட்டில் இருந்தோம். அப்போ இருந்த நிலைமைக்கு கறிக்கடைய விட்டா எங்களுக்கு வேற வழியில்ல. தொழிலை நான் செய்ய தொடங்கும்போது எனக்கு வயசு 16,” என்றார் சின்னப்பொண்ணு
chinna ponnu

சின்னப்பொண்ணு

ஆட்டுத்தோல் வாங்குற பாய்கிட்ட ரூ.1000 கடன் வாங்கி, கடைய போட்டேன். அப்போ ஒரு ஆடே ரூ.500 தான். இரண்டு ஆடு வாங்கி முதல் நாள் கடையைத் தொடங்கினேன். அப்போ தான் கறிக்காக, கோழி உற்பத்தி செய்ய சுகுணா கம்பெனி வியாபாரம் செய்த் தொடங்கினாங்க.


கோழிப் பெட்டி இறக்கி, சிக்கன் கடையும் போட்டேன். நைனாவை விட அதிக வியாபாரம் நடந்துச்சு. என்ன, உடம்பெல்லாம் வலிக்கும். ஒவ்வொரு நாள் ராத்திரியும் சுடுத்தண்ணில குளிச்சு வலிய போக்கிட்டு தான் துாங்குவேன். ஆனா, அதெல்லாம் எனக்கு பெரிசா தெரில. ஏன்னா, குடும்பச் சூழ்நிலை அந்த மாதிரி இருந்தது.

நைனா இறந்த அப்போ அக்காலாம் வந்தாங்க, அடக்கம் பண்ணாங்க, போயிட்டாங்க. சாப்டோமா, இல்லையானு கூட கேட்க ஆளு இல்ல. யாருமே ஆதரவா இல்ல. அந்த சமயத்தில் கத்தி பிடிச்சனால தான் என் வாழ்க்கையே ஆரம்பிச்சது. எங்க ஊருல உதவினு யாரு வீட்டுக்கும் போய் நின்னு, பச்ச தண்ணிகூட வாங்கி குடிச்சதில்ல. நாலு காசு சம்பாதிச்ச அப்புறம் தான் எல்லோரும் தேடி வந்தாங்க.

2000 வீடுகள் இருக்கிற பெரிய ஊரு நாங்க இருந்தது. கடை பக்கம் வண்டில போறவங்க, வர்றவங்க எல்லாரும் நான் கறி வெட்டுறதை நின்னு பாத்திட்டு போவாங்க. நான் கூச்சம்லாம் படமாட்டேன். நம்ம பிழைப்பைப் பாக்குறோம், கத்தி பிடிச்சதில் கிடைச்ச வாழ்க்கை இது.

கறி வெட்டுறதும் எல்லோராலயும் பண்ணிட முடியாது. வெட்டுறதும் ஒரு கலை தான். ஒவ்வொரு முறையும் கறிய வெட்ட கத்திய துாக்கும்போதும், கைல வெட்டிபோமோனு பாக்குறவங்களுக்கு பயமா இருக்கும். ஆனா, வெட்டுற எங்களுக்கு தெரியும் கத்தி எங்க விழுகும்னு. சிக்கன் நல்லா வியாபாரமாச்சு.
chinna ponnu

அதிகமா கோழி சேல்ஸ் பண்ணதுக்காக, சங்கத்தில் இருந்து கோழி உருவத்தில் கடிகாரம் பரிசா கொடுத்தாங்க. கணவர் சென்னையில் வேலை பார்த்திட்டு இருந்ததால பண்ருட்டியில் கடைய மூடிட்டு, சென்னைக்கு நாலு செட்டு துணிமணியோட வந்தேன். இங்க வந்ததும் வேலைக்கு போகணும்னு முடிவு பண்ணதும், என் கண் முன்னாடி வந்தது கறிக்கடைத் தொழில் தான். சிக்கன் கறிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒரு நாளுக்கு 40 பெட்டி கோழி என்கிற கணக்கில் 500 கோழிக்களை வெட்டுவேன். இந்த கறி தொழிலால் தான் மகன்களுக்கு கார் வாங்கி கொடுத்து, கால் டாக்ஸி ஓட்டுறாங்க. நிலம் வாங்கிப் போட்டேன். கத்தி கொடுத்த வாழ்க்கை இது" என்று ஆனந்தமாய் கூறி முடித்தார்.

'ஒரு மணிநேரத்தில் ஒரு ஆடு வெட்டிருவேன்' - ஹஜீரா இஸ்மாயில்

"என் சொந்த ஊர் சென்னை தான். தாத்தா, அப்பா, சித்தப்பானு எல்லோருமே கறிக்கடை தான் வச்சிருக்காங்க. எங்க பரம்பரைத் தொழில் இது. அதனால, இதை நான் கத்துக்கணும்னுலாம் கத்துக்கல. சின்ன வயசுலயே அப்பாக்கூட கடைக்கு போவேன். சின்ன சின்ன உதவிகள் செய்வேன். கணவரும் இந்த தொழில் தான். கல்யாணமாகின அப்பறம் அவர் தான் கறி வெட்டலாம் சொல்லிக் கொடுத்தாரு.

நினைச்ச அளவுக்கு கஷ்டமான வேலையலாம் இல்லை. மட்டன் மட்டும் தான் வெட்டுறதுக்கு கடுசா இருக்கும். மத்தப்படி சிக்கன்லாம் க்யூப் வடிவத்தில் வெட்ட சொன்னால் ஜாலியா வெட்டிட்டே இருப்பேன்.
hajeera

ஹஜீரா

முதலில் மெயின்ரோட்டிலே கடை வச்சிருந்தோம். கடைய ஒழுங்கா கொண்டு போகலை, சப் வே வேற கட்டிட்டு இருந்தனால கடைய எடுத்துட்டோம். அத்தோட அவரும் வேலைக்கு போயிட்டாரு. நானும் டெண்டர்கட்சில் வேலைக்கு சேர்ந்துட்டேன். ஆனா, இங்க வேலைக்கு சேர்ந்த அப்புறம் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

கறி வெட்டுறதுல இவ்வளோ நுணுக்கங்கள், இத்தனை நேர்த்தி இருக்கணும்னு இங்க தான் கத்துக்கிட்டேன். ஒரு கறி இவ்வளவு சுத்தமா இருக்கணும், கறி இந்த சைசில் வெட்டணும், இத்தனை வடிவங்களில் வெட்டலாம், இந்த மாதிரி நிறைய இருக்கு. தனியா கடை வச்சாலும் இவங்க பண்ற மாதிரி தான் செய்யனும். நிச்சயமா, நல்லா வியாபாரம் நடக்கும். இன்னும் நிறைய கத்துகனும்.”

கடைக்கு வருகிற கஸ்டமர்களும் சரி, கேட்கிறவங்களும் சரி, பரவாயில்லையே பொண்ணா இருந்துட்டு கறி வெட்டுறீங்களேனு சொல்லும் போதே கொஞ்சம் பெருமையா இருக்கும். சிலர் வேலைக்கு போகிறத பாத்துட்டு வேலை சேர்த்துவிட கேட்பாங்க. அப்பறம், கறி வெட்டுற வேலைக்கு போறேன் சொன்னதும், கறி வெட்டவா நாறுமேனு சொல்லுவாங்க. வேலை முடிஞ்சு ஆட்டோவில் போகும் போதும், பக்கத்துல இருக்கவங்க தெரிச்சு ஓடுவாங்க. மீன் வாங்கிட்டு போறீங்களானு கேட்பாங்க.


அப்பவும், இல்ல டெண்டர்கட்சில் வேலை பார்க்கிறேனு பெருமையா சொல்லிட்டு தான் இறங்குவேன். எல்லாமே வேலை தானே. காலையில் எழுந்து வேலைக்கு போயிட்டு வர்றது காசு சம்பாதிப்பதுடன், சுறுசுறுப்பா இருக்கு.

hajeera
”ஒரு முழு ஆடு கொடுத்தாலும் 1 மணி நேரத்தில் முழுசா வெட்டிருவேன். முதலெல்லாம், ஹஸ்பென்ட் சம்பளம் மட்டும் தான் வச்சு குடும்பத்தை ஓட்டணும். இப்போ அப்படி இல்ல, பிள்ளைகளோட ஸ்கூல் ஃபீசை நானும் இப்ப கட்டுறேன். கறித்தொழில் செய்வதில் இருக்கும் இன்னொரு பிளஸ், எங்க வீட்டில் எல்லா நாளும் ஞாயிற்றுகிழமை தான். சிக்கன், மட்டன் இல்லாத நாளில்லை," என்று சிரித்து கொண்டே கூறினார் ஹஜீரா இஸ்மாயில்.

'குடும்பமா கறி வெட்ட போறோம்' - பதுல்லா பீவி

"என் பேரு பதுல்லா பீவி. கறிக்கடை எங்கக் குடும்பத் தொழில். அப்பா, அண்ணன், தம்பி எல்லாரும் கறிக்கடை தான் வச்சிருக்காங்க. அதனால, எனக்கு கறிக்கடைய பத்தி எல்லாம் தெரியும். 10 வயசுலயே அப்பாக்கூட கறிக்கடைக்கு போவேன். அப்போலாம் சிக்கன் கிடையாது. மட்டன் மட்டும் தான் வியாபாரம் பண்ணாங்க. கறி எடுத்து போட கவர் பிடிப்பேன், சில்லறை மாத்தி கொடுப்பேன், அந்த மாதிரி சின்ன சின்ன வேலையெல்லாம் செய்வேன்.


அப்பா, அண்ணனெல்லாம் கத்தியில் கறி வெட்டுறதை பார்த்திட்டு, எனக்கும் கறி வெட்டனும்னு ஆசையா இருக்கும். அப்போ, அப்போ சின்ன சின்ன கறியும் வெட்டி பார்ப்பேன். எங்களலாம் படிக்க வைக்கல. நான் 5வது வரை தான் படிச்சிருக்கேன். பொம்பளை பிள்ளைங்க கல்யாணமாகிட்டு, சமைக்க தான போறீங்கனு எங்க அப்பா என்ன ஸ்கூல்ல விட்டு நிப்பாட்டிட்டாரு. ஆனா, எனக்கு படிக்க ஆசை. அவரு படிக்க வைக்கல. கறிக்கடைக்கு போயி எதாச்சும் ஹெல்ப் பண்ணுவேன்.

bathula beevi

பதுல்லா பீவி

எங்க அப்பாவுக்கு 2 மனைவி. மொத்தம் எங்க அப்பாவுக்கு 21 பிள்ளைங்க. 21 பிள்ளைகளையும் இந்த 1 கறிக்கடைய வச்சு தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாரு. 20 வயசுல எனக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. கல்யாணதுக்கு அப்புறம் எங்க வீட்டுகாரரு கடை போட்டப்ப தான் கத்தி பிடிச்சு கறி வெட்ட ஆரம்பிச்சேன்.


கறிக்கடையில 2 பேரும் தான் வியாபாரம் பார்ப்போம். அவரு எங்கயாச்சும் வெளில போயிட்டாருனா என்னை வெட்டி கொடுக்க சொல்லுவாரு. அப்படி கொஞ்சம் கொஞ்சமா தான் வேலைய கத்துகிட்டேன். ஆனா,

என் வீட்டுகாரருக்கு அவ்ளோ வியாபார திறமையில்ல. அவருக்கு 10 வயசு இருக்கும் போது, அவங்க அம்மா, அப்பா ஆக்சிடென்ட்டில் இறந்திட்டாங்க. அதில, மனசு பாதிச்ச மாதிரி ஆகிட்டாரு. கடையையும் ஒழுங்கா நடத்தாமல், ஒரே நட்டம். அப்புறம் என்னா பண்ண கடைய மூடிட்டு வேலைக்கு கிளம்பிட்டோம். இப்போ டெண்டர்கட்சில் வேலைக்கு சேர்ந்த அப்புறம் வருமானம் நல்லா வருது. அதனால, வேலையில இருக்கிற கஷ்டமோ, நாத்தமோ எதுவும் தெரியாது. நாங்க விரும்பி செய்கிற தொழில் இது.
bathula beevi

கறி வெட்டினதோட தான் வீட்டுக்குப் போவேன். பிள்ளைகளும் முகம் சுழிக்காதுங்க. பிள்ளைகளெல்லாம் படிக்கிறாங்க. ஆனா, அவங்களுக்கும் குடும்பக் கஷ்டம் தெரியும். அதனால, ஞாயித்துகிழமை ஆகினா கறிக் கடைக்கு வேலைக்கு போயி, 1000ரூவா கொண்டு வந்து கொடுப்பானுங்க. படிக்கவே இல்லனா கூட இந்த தொழில் அவங்கள பிழைக்க வச்சிரும்.


எந்த ஊருக்கு போனாலும், கறிக்கடையில வேலைக்குச் சேர்ந்திரலாம். நாலுக்கு நாலுவீட்டில ஒரு ரூமுக்குள்ள தான் இத்தனை வருஷம் இருந்தோம். இந்த கறித்தொழிலால் தான் 2 மாசம் முன்னாடி பெரிய வீடு வாடகைக்கு பிடிச்சோம்.

”வீட்டுல பிரச்சனை இருந்தாலும், இவ்வளோ சமாளிச்சு பிள்ளைகளை வளர்க்கிறேனா அதுக்குக் காரணம் கறிக்கடை தான். இது போதாதா?" என பெருமிதத்துடன் கூறினார் பதுல்லா பீவி.