Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து மேம்படுத்தும் ஸ்நாக் தயாரிப்பு நிறுவனம்!

முழுமையாக தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் Chaakri நிறுவனம் 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ராய்கட் பகுதியின் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி ஆதரவளிப்பதே இதன் நோக்கமாகும். இங்கு பெண்களுக்கு காக்ரா தயாரிக்க பயிற்சியளிக்கப்படுகிறது.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து மேம்படுத்தும் ஸ்நாக் தயாரிப்பு நிறுவனம்!

Friday June 21, 2019 , 4 min Read

33 வயது தேவி குப்தா மஹாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள சுதாகத் தாலுகாவின் பார்லி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 15 வயதில் திருமணம் முடிந்தது. 17 வயதில் முதல் குழந்தையும் பிறந்தது. அடுத்ததாக இரண்டாவது குழந்தை பிறந்தது. இவரது கணவருக்கு வேலை இல்லாத காரணத்தால் இவரால் குழந்தைகளை படிக்கவைக்க முடியவில்லை. இவரது கணவருக்குக் குடிப்பழக்கம் வேறு இருப்பதால் குடித்துவிட்டு தேவியை அடிப்பது வழக்கம். தேவி பல நாட்கள் பட்டினி இருந்துள்ளார். இவரது வாழ்க்கையே போராட்டமாக மாறியது.

1

தேவியின் கணவர் இறந்து போனார். அவர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களது கிராத்தில் உள்ள காக்ரா தயாரிப்பு யூனிட்டான சாக்ரி (Chaakri) நிறுவனத்தை தேவியின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் அவருக்கு அறிமுகம் செய்தார். அப்போதிருந்து தேவியின் வாழ்க்கை மாறியது.

”Chaakri என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. என்னுடைய பிரச்சனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. என்னுடைய வாழ்வாதாரத்தைப் பெற முடிகிறது. என்னுடைய இரு மகன்களையும் படிக்கவைக்க முடிகிறது. என்னுடைய மூத்த மகன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டான். தற்போது தொழில்முறை பயிற்சி பெற்று வருகிறான். நான் தற்போது பயிற்சியளிக்கிறேன். நான் புதிய நபர்களை பணியிலமர்த்தி காக்ராக்களை ரோல் செய்வதில் பயிற்சியளிக்கிறேன். இதற்கு முன்பு 100 ரூபாய் மதிப்பில் புடவை வாங்குவதுகூட இயலாத நிலை இருந்தது. பல இன்னல்களைக் கடந்து வந்துள்ளேன்,” என்றார் தேவி.

2005-ம் ஆண்டு துவங்கப்பட்ட Chaakri முழுமையாக தன்னார்வலர்களால் இயங்கும் நிறுவனமாகும். ராய்கட் மாவட்டத்தின் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பும் ஆதரவும் வழங்கும் நோக்கத்துடன் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தால் பலனடைந்த 100 பெண்களில் தேவியும் ஒருவர்.

Chaakri ஷ்ரமிக் நாரி சங் (Sa-Ni-Sa) என்கிற தொண்டு நிறுவனத்தின் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழுவால் நிறுவப்பட்டது. இது சமுதாயத்தின் அடிநிலை பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.

ஷ்ருதி ஷேத் பாலியின் ராஜ்நகர் கிராமத்தில் உள்ள Chaakri யூனிட்டிற்கு பொறுப்பு வகிக்கிறார். இவர் NMIMS பல்கலைக்கழகத்தில் மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஜேபி மார்கன் சேஸ் இண்டியா நிறுவனத்தின் வணிக ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றியுள்ளார். இணை துணைத் தலைவராக தனது பணியை விட்டு விலகி தனது மேலாண்மை அனுபவத்தையும் தொழில்முறை நிபுணத்துவத்தை Sa-Ni-Sa பணிகளுக்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.

ஷ்ருதி சமுதாயத்தின் அடிநிலையில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன் அந்தப் பகுதியில் பரவாகக் காணப்பட்ட குடும்ப வன்முறைக்கு எதிராக வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் மேற்கொண்டார்.

2

இந்தியப் பெண்களின் திறன்

”Chaakri இந்தியப் பெண்களிடம் இயல்பாகவே காணப்படும் ரொட்டி தயாரிக்கும் திறனை புதுமையாகப் பயன்படுத்திக்கொண்டது. காக்ரா தயாரிக்க ஒரு முழுமையான வணிக மாதிரியை வடிவமைத்தது. இதன் மூலம் நிலையான வேலைவாய்ப்பும் வருவாயும் வழங்கப்பட்டது,” என்று ஹெர்ஸ்டோரி உடன் தெரிவித்தார் ஷ்ருதி.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களும் கற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ள பெண்களும் Chaakri செயல்பாடுகளுடன் இணைந்துகொள்ள வரவேற்படுகின்றனர். பெண்களுக்கு தனிப்பட்ட சுகாதாரம், மாவு தயாரித்தல், ரோல் செய்தல், ரோஸ்ட் செய்தல், எடை போடுதல், வாக்யூம் பேக்கிங், பெறப்படும் ஆர்டர்களை தொகுத்தல், ஆர்டர்களுக்கு ஏற்றார்போல் அனுப்புதல், சரக்கு மேலாண்மை, பில்லிங் என அனைத்து அம்சங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு அவர்களது திறன் மேம்படுத்தப்படுகிறது. 

”மாற்றுத்திறனாளிகள் மரியாதையுடன் வாழ்க்கையை நடத்த உதவும் வகையில் நாங்கள் மாற்றுத்திறனாளிப் பெண்கள் சிலரையும் பணியிலமர்த்தியுள்ளோம். அவர்களது உடலில் உள்ள குறைபாடுகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சாத்தியப்படும் பணிகளை தனிக்கவனத்துடன் உருவாக்கிக் கொடுக்கிறோம்,” என்றார்.

பெண்கள் Chaakri-யின் Mahila Gruh Udyog-ல் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு பெண்ணும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6,000 ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். எனினும் இவர்கள் ஒரு நாளைக்கு காக்ராக்களை ரோல் செய்யும் அளவு, ரோஸ்ட் செய்யும் அளவு, பேக் செய்யும் அளவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இவர்களது வருவாய் அமையும்.

”ஊழியர்களின் திறனுக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படுவதால் கடுமையாக உழைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் மூலம் இவர்கள் நேரடியாகப் பலனடையலாம். இவ்வாறு செயல்படுவதால் புதிதாக சேர்ந்தவர்கள் அல்லது பழைய ஊழியர்கள் என்கிற பாகுபாடின்றி வருவாய் ஈட்டுவதற்கு நியாயமான வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அருகாமையில் உள்ள மற்ற முதலாளிகள் அல்லது சிறியளவில் செயல்படும் நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்திற்கு சமமாக இவர்களுக்கும் வழங்கப்படுகிறது,” என்றார் ஷ்ருதி.

மும்பை, புனே, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், ஜம்ஷெட்பூர், ஜபால்பூர், நாக்பூர், அஹ்மதாபாத், சூரத், தமன் போன்ற பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் காக்ராக்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பை மற்றும் புனேவில் பிக்பாஸ்கெட் வாயிலாக ஆன்லைனில் விற்பனை செய்து Chaakri விரிவடைந்துள்ளது. உள்ளூர் விற்பனை மட்டுமல்லாது Chaakri காக்ரா தற்போது அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மொரீஷீயஸ், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒட்டுமொத்த வளர்ச்சி

Chaakri பெண்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதுடன் பல்வேறு முயற்சிகள் மூலம் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதிசெய்கிறது. உதாரணத்திற்கு,

·        சுகாதாரம்-மருத்துவ பரிசோதனை, பெண்களுக்கான மருத்துவம் மற்றும் மார்பக புற்றுநோய் முகாம்கள், மாதந்தோறும் சானிட்டரி நாப்கின் விநியோகம், முதலுதவி பயிற்சி, புகையிலையின் மோசமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது,

·        ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் - மதிய வேளையில் புரதம் மிகுந்த இடைப்பட்ட உணவு, வைட்டமின் சப்ளிமெண்ட் ஆகியவை வழங்கப்படுகிறது. யோகா வகுப்புகள் நடத்தப்படுகிறது.

·        பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் கல்வி உதவி வழங்கப்படுகிறது.

·        தொடர்புகொள்ளும் திறன், வங்கிக் கணக்கை நிர்வகித்தல், நேர்மறை எண்ணங்கள், சுயவெளிப்பாடு, குழுவாக செயல்படுதல், தலைமைப்பண்பு உள்ளிட்ட வாழ்க்கைத் திறன்களும் வழங்கப்படுகிறது.

இருபத்தி நான்கு வயது தனஸ்ரீ தால்வி பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டார். ஏனெனில் அவரது சமூகத்தினர் மேற்கொண்டு படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவரது கிராமத்தில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததாலும் அவரது சமூகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாலும் அவர் வேறு வழியின்றி கட்டுமானப் பணியில் சேர்ந்தார். சில மாதங்கள் தொழிலாளியாக இருந்தார். ஊட்டச்சத்து குறைபாடும் கடுமையான பணியும் அவரது ஆரோக்கியத்தை பாதித்தது. கட்டுமானப் பணியிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இவர் 2014-ம் ஆண்டு Chaakri நிறுவனத்தில் சேர்ந்து பில்லிங் மற்றும் டேட்டா எண்ட்ரி கற்றுக்கொண்டார். இத்தனை ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு மேற்பார்வையாளர் பொறுப்பை அடைந்துள்ளார். சம்பளம், எம்ஐஎஸ் அறிக்கைகள், நிர்வாகப் பணிகள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கிறார். இவரது அப்பா இறந்த பிறகு இவரது அம்மாவும் மருத்துவ ரீதியாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இவரே குடும்பப் பொறுப்புகளை சுமந்து வருகிறார். தனஸ்ரீ தனது உடன்பிறந்தவர்கள் படிப்பை முடிக்கவும் உதவியுள்ளார். தற்போது அஞ்சல்வழியில் படித்து வருகிறார்.

”இத்தனை ஆண்டுகளில் Chaakri என்னை இவ்வாறு உருவாக்கியுள்ளது. Chaakri மூலம் இத்தகைய ஆதரவும் அன்பும் ஊக்கமும் கிடைக்காமல் போயிருந்தால் என் வாழ்க்கை மோசமாகியிருக்கும்,” என்றார்.

நலிந்த பிரிவினைச் சேர்ந்த பெண்களும் மற்றவர்களுடன் அதிகம் பழகாத பெண்களும் இன்று தங்களது விருப்பப்படி செயல்படுகின்றனர். தற்சார்புடன் உள்ளனர். மரியாதையுடன் பணிபுரிகின்றனர். சிறப்பான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். குழந்தைகளுக்காக மிகப்பெரிய கனவுகளைக் கொண்டுள்ளனர்.

”Chaakri 2005-ம் ஆண்டு இரண்டு பெண்களுடன் துவங்கப்பட்டது. இன்று 90-க்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்கள் தற்சார்புடனும் மரியாதையுடனும் பாதுகாப்பான, நேர்மறையான பணிச்சூழலில் பணிபுரிகின்றனர். இந்த வெற்றிகரமான மாதிரியுடன் அதிகளவிலான பெண்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம், ஆனால் அதற்குத் தேவையான கட்டமைப்பும் இடவசதியும் இல்லை. புதிய தொழிற்சாலைக்கு நிதி உயர்த்தி வருகிறோம்,” என்றார் ஷ்ருதி.

ஒரு பெண்ணில் நிலையை மேம்படுத்தினால் ஒரு குடும்பத்தையும் கிராமத்தையும் நகரத்தையும் நாட்டையும் ஒட்டுமொத்த உலகையும் மேம்படுத்தியதற்கு இணையாகும். Chaakri-யில் இணைந்துள்ள பெண்கள் உலகை மாற்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா