ஃப்ளிப்கார்ட் மூலம் உலர் பழங்கள் விற்பனையில் 10 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ள பெண் தொழில்முனைவர்!

ஃப்ளிப்கார்ட் மூலம் காலணிகள் மற்றும் ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்த சித்ரா வியாஸ் கடந்த ஆண்டு Soft Art என்கிற உலர் பழங்கள் பிராண்ட் தொடங்கி வளர்ச்சியடைந்துள்ளார்.
10 CLAPS
0

சித்ரா வியாஸ்; பிகானர் பகுதியைச் சேர்ந்தவர். எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்டெக் முடித்தார். இன்போசிஸ் நிறுவனத்தில் சிறிது காலம் வேலை செய்தார்.

திருமணம் முடிந்ததும் ஹைதராபாத் மாற்றலானார். புகுந்த வீட்டில் அனைவரும் தொழில்முனைவில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர் வைத்திருந்தனர்.

ஏற்கெனவே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்கிற ஆர்வம் இருந்த சித்ராவிற்கு அந்த ஆர்வம் மேலும் அதிகரித்தது.

2011ம் ஆண்டு இந்தியாவில் மின்வணிகம் மக்களிடையே பிரபலமாகிக் கொண்டிருந்தது. எனவே ShoppingWhopping என்கிற மின்வணிக தளத்தைத் தொடங்கினார் சித்ரா. இந்தத் தளத்தின் மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமல்லாது நகைகள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றையும் விற்பனை செய்யத் தொடங்கினார்.

ஃப்ளிப்கார்ட் விற்பனை

சொந்த வலைதளத்தில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. சித்ரா 2016ம் ஆண்டு ஃப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்ய தளத்துடன் இணைந்துகொண்டார். ஒரே வாரம்தான். 10, 15 என்றிருந்த ஆர்டர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்தது.

ஃப்ளிப்கார்ட் ஆதரவுடன் மூன்று மாதங்களில் அந்தத் தளத்தில் அதிகளவில் விற்பனை செய்யும் விற்பனையாளர் ஆனார்.

”என் நண்பர் ஒருவர் காலணிகளை விற்பனை செய்யலாம் என பரிந்துரைத்தார். அதன்படி Relexo, Khadim, Lotto, Bata, Liberty என பிரபல பிராண்டுகளின் விற்பனை செய்யத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,500 ஆர்டர் வந்தது,” என்கிறார் சித்ரா.

உலர் பழங்கள் பிராண்ட் - Soft Art

2020ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது. ஃபேஷன் மற்றும் காலணி பிரிவிற்கான தேவை குறையும் என்பதை சித்ரா முன்னரே சரியாகக் கணித்திருந்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடிய உலர் பழங்களை (Dry fruits) விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தார். இவர் உலர் பழங்களுக்காக Soft Art என்கிற பிராண்டை உருவாக்கினார்.

ஆரம்பத்தில் விற்பனை அதிகம் இல்லை. நாள் ஒன்றிற்கு 20-30 ஆர்டர்கள் மட்டுமே வந்தன.

“நாங்கள் புதிதாக ஒவ்வொரு பிரிவை அறிமுகப்படுத்தும்போதும் ஃப்ளிப்கார்ட் எங்களுக்கு பயிற்சியளித்து உதவுவது வழக்கம். அதேபோல் வாடிக்கையாளர்களின் மதிப்பீடுகளையும் கருத்துகளையும் ஃப்ளிப்கார்ட் எங்களுடன் பகிர்ந்துகொண்டு உதவியது. அதன் பலனாக விற்பனை அதிகரித்தது,” என்கிறார் சித்ரா.

கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகமானதில் இருந்து Soft Art ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. 'பிக் பில்லியன் டேஸ்’ சமயத்தில் 1,000 ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

”ஆரம்பத்தில் உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே வாங்கினோம். ஆர்டர் அளவு அதிகரித்த பிறகு இந்தியா முழுவதும் உள்ள சிறந்த தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கத் தொடங்கினோம். மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மொத்த விற்பனையாளர்களும் இதில் அடங்குவார்கள்,” என்கிறார்.

ஹைதராபாத்தில் 7,000 சதுர அடி கொண்ட மூன்று மாடி கட்டிடத்தில் 25 பேர் கொண்ட குழுவுடன் சித்ரா செயல்பட்டு வருகிறார். உலர் பழங்கள் இவர்களது கிடங்கில் பிரிக்கப்பட்டு ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வகையில் பேக் செய்யப்படுகிறது. அதன் பிறகு டெலிவர் செய்யப்படுகிறது.

”ஜூலை மாதத்தில் வழக்கமாக விற்பனை அதிகரிக்கும். அனைத்து பிரிவுகளிலும் விற்பனை அதிகமாக இருக்கும் என நம்புகிறோம். ஐந்து மடங்கு வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கிறோம். வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார் சித்ரா.

சவால்கள் மற்றும் வருங்காலத் திட்டங்கள்

கொரோனா பெருந்தொற்று மட்டுமல்லாது பல சிக்கலான சூழல்களைக் கடந்தே சித்ரா வளர்ச்சியடைந்துள்ளார்.

”காலணிகளைப் பொருத்தவரை அவை ஏற்கெனவே பிரபல பிராண்ட். இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சுலபம். ஆனால் உலர் பழங்களைப் பொருத்தவரை ஒரு புதிய பிராண்டை உருவாக்கி மக்களிடம் நம்பகத்தன்மையை வரவழைப்பது அத்தனை சுலபம் அல்ல. உயர்தர உலர் பழங்களை நியாயமான விலையில் கொடுக்கவேண்டியது முக்கியம். வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தரத்தை உறுதிசெய்தோம்,” என்கிறார்.

உணவுப் பிரிவில் மற்ற பொருட்களையும் வருங்காலத்தில் இணைத்துக்கொண்டு விரிவடைய சித்ரா திட்டமிட்டுள்ளார். குறிப்பாக இவரது சொந்த ஊரான பிகானர் பகுதியில் கிடைக்கும் உணவு வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world