Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

‘குடும்பத்தைக் காக்க எந்த வேலையும் துச்சமில்லை’ - குப்பை வண்டி ஓட்டும் ‘நம்பிக்கை நாயகிகள்’

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் முன்னேற்றம் ஒன்றே இலக்கு என்பதில் பெண்களின் தன்நம்பிக்கைக்கு நிகராக வேறு எதையும் சொல்ல முடியாது.

‘குடும்பத்தைக் காக்க எந்த வேலையும் துச்சமில்லை’ - குப்பை வண்டி ஓட்டும் ‘நம்பிக்கை நாயகிகள்’

Tuesday March 08, 2022 , 3 min Read

கலங்கப் பிறந்தவள் அல்ல பெண், கதிரவன் போல ஒளி வீசப் பிறந்தவள்!

ஆணுக்குப் பின்னால் இருப்பவள் அல்ல பெண், ஆணுக்கு நிகரானவள்!

தன்னையும் செதுக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அடையாளம் கொடுப்பவள்!

எந்தத் துறையாக இருந்தாலும் என்ன சவாலாக இருந்தாலும் வாழ்க்கைப் போராட்டத்தில் நீந்தி தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் கரை சேரக் கடினமாக உழைப்பவள் பெண் என்பதை அன்றாட வாழ்வில் நிரூபித்து வருகின்றனர் சென்னையில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தை இயக்கும் பணியில் இருக்கும் குணவதியும், ஹேமலதாவும்.

இந்த மகளிர் தினத்தில் போற்றப்படவேண்டியவர்களாக இவர்களைத்தவிர யார் இருக்கமுடியும்...

மெலிந்த தேகம், படபடக்கும் பேச்சு, பட்டாம்பூச்சியின் சுறுசுறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்த குணவதி தனது வாழ்வின் போராட்டங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “எங்க அப்பா, அம்மா விழுப்புரத்தைச் சேர்ந்தவங்க தொழில் நிமித்தமாக சென்னை வந்து இங்கேயே வாழத் தொடங்கிவிட்டார்கள்.

குணவதி

குணவதி, துப்புரவுப் பணியாளர்

என் கூடப் பிறந்தவர்கள் 3 அக்கா, ஒரு அண்ணன் சின்ன வயசுலேயே அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க. என்னைத் தொடர்ந்து படிக்க வைக்க யாரும் முன்வராததால் 8ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. கல்யாணத்திற்குப் பிறகு குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குப் போகலாம்னு நெனைச்சேன்.

”எங்கள் பகுதியில் இருந்த தொண்டு நிறுவனம் ஒன்று பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி, லைசென்ஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி செய்தது. தவணைக்கு ஆட்டோ எடுத்து சென்ட்ரல் பகுதியில் ஓட்டி சம்பாதிக்கத் தொடங்கினேன்.”

எனக்கு 4 பெண் பிள்ளைகள் மற்றும் 1 ஆண் பிள்ளை. முதல் மகளை ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு டிப்ளமோ நர்சிங் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துவிட்டேன், இரண்டாவது மகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டேன், அவர் 10ம் வகுப்பு வரை படித்திருப்பதால் சொந்தமாக சிறுதொழில் செய்து வருகிறார்.

வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வாழும் சூழலை மாற்றிப் போட்டது.

கொரோனா காலத்தில் ஆட்டோ சவாரி இல்லாததால் வருமானம் பாதித்தது கணவருக்கு வேலை இல்லை 2 மகள்கள், மகன், கணவன் உள்பட நான்கு பேருக்கான தினசரி சாப்பாட்டிற்கு கூட கஷ்டமாகிவிட்டது. ஆட்டோவிற்கு தவணை செலுத்த முடியவில்லை வாழ்க்கையே இருண்டு போனதாக உணர்ந்தேன் என்கிறார் குணவதி.

செய்வதரியாது திகைத்து நின்றவர் சென்னை மாநகராட்சியின் குப்பை அள்ளும் ஒப்பந்த நிறுவனமான உர்பசேரில் சேர்ந்து வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் வாகனத்தை ஓட்டி வருகிறார்.

“உத்தண்டியில் மண்டலம் 15ல் பெண்கள் மட்டுமே துப்புரவுப் பணியாற்றும் வார்டில் எனக்குப் பணி ஒதுக்கப்பட்டது. இதனால் வீட்டையும் இந்த ஏரியாவிற்கே மாற்றி வந்துவிட்டோம். இந்தப் பணியில் சேர்ந்த பின்னர் நிரந்தர மாத வருமானம் கிடைக்கிறது, என்னைப் போலவே என் கணவரும் இப்போது இந்தப் பணியில் சேர்ந்திருப்பதால் வருமானத்திற்கு கவலை இல்லை,” என்று சொல்கிறார் குணவதி.

வறுமை ஒரு பக்கம் வாட்ட வாழ்வில் தோற்றுப் போய்விட்டோம், எல்லாமே முடிந்து விட்டது என்ற நிலையிலும் கலங்கிப் போகாமல் வாழ்க்கைச் சவாலை தளராத நம்பிக்கை, விடாமுயற்சி எனும் ஆயுதத்தால் வென்றதைப் போலவே புற்றுநோயையும் வென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார் குணவதி.

“தன்னார்வ அமைப்பு ஒன்றின் மூலம் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன் பரிசோதனைகளுக்காக இப்போதும் மருத்துவமனை சென்று வருகிறேன், நான் கஷ்டப்பட்டாலும் என் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்.”
குனா

இப்போது என்னுடைய மூன்றாவது மகள் 12ம் வகுப்பும், நான்காவது மகள் 10ம் வகுப்பும், மகன் 7ம் வகுப்பும் படிக்கிறார்கள். அவர்களை எப்படியாவது உயர்கல்வி படிக்க வைத்து வாழ்வில் சிறந்த இடத்திற்கு சென்று சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அதற்காகவே பல கஷ்டங்கள் வந்த போதும் அவற்றை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருகிறேன்.

மாத வருமானத்தில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து தவணை செலுத்துவதோடு, பழுதான ஆட்டோவையும் சரி செய்து வருகிறேன் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஆட்டோ ஓட்டியும் வருமானம் பெற முடியும் என்று சற்றும் சோர்வில்லாமல் பேசுகிறார் 38 வயது குணவதி.  

குணவதி மட்டுமல்ல ஹேமலதாவும் கூட தன்னுடைய குடும்பத்தின் ஒளி விளக்காக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். உர்பசேரின் குப்பை சேகரிக்கும் பேட்டரியால் இயங்கும் ஆட்டோவை இயக்கும் பணியில் இருக்கும் ஹேமலதா, சுமார் 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக இருந்து வருகிறார்.

hemalatha

ஹேமலதா

“நான் 10 வருஷத்துக்கும் மேலாக குப்பை அள்ளும் பணியில் இருந்து வருகிறேன், இப்போது வீடு வீடாகச் சென்று குப்பையை சேகரிக்கும் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். குப்பைகளை அள்ளுவதால் நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல. தவறான பாதையில் செல்லாமல் முழுக்க முழுக்க உடலுழைப்பை கொடுத்து நாங்கள் ஈட்டும் வருமானமானது எனது குடும்பப் பொருளாதார உயர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது, மேலும், என்னால் என்னுடைய பிள்ளைகளின் அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க முடிகிறது” என்கிறார் ஹேமலதா.

எனக்கு 3 பெண் பிள்ளைகள், என்னுடைய பெண்கள் மாறி வரும் இந்த உலக சூழலுக்கு ஏற்ப சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் அவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை மட்டும் எந்த விதத்திலும் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை.

இப்போ என்னுடைய மூத்த மகள் பிசியோதெரபி படித்து முடித்திருக்கிறார், இரண்டாவது மகள் பி.காம் படித்துக் கொண்டிருக்கிறார், மூன்றாவது மகள் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

“பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட கல்வியும், பணியும் அவசியம். அப்போது தான் எதிர்காலத்தில் அவர்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் சொந்தக் காலில் நிற்க முடியும் என்று தன் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார் ஹேமலதா.”

அடித்தட்டு பெண்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், அவற்றால் துவண்டு போய்விடாமல் நம்மாலும் ஜெயிக்க முடியும் என்று மற்றவர்களுக்கு ஊக்கம் தருகின்றனர் இவர்கள்.