Cricket World Cup Finals - இறுதிப் போட்டியில் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட நிகழ்வுகள்!
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோத உள்ள இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் இல்லாத வகையில் உலகநாடுகளை அசர வைக்கும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நம் நாட்டில் மற்ற விளையாட்டுகளைவிட கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகம்தான். அதனால்தான், கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து விட்டாலே திருவிழாவாக அதனைக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
அதிலும் இம்முறை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே சந்தித்து, இறுதிப் போட்டி வரை இந்தியா வந்துள்ளது என்றால் கேட்கவா வேண்டும். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா. இந்தப் போட்டியிலும் இந்தியா வென்று உலகக்கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கிரிக்கெட் ரசிகர்களிடம் உள்ளது.
எனவே, இறுதிப் போட்டியைக் காண ரசிகர்கள் ஒருபுறம் ஆர்வமாகத் தயாராகி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவை நிஜமாக்கிக் காட்டுவது என இந்திய அணி வீரர்களும் ஒருபுறம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்க, இந்த இறுதிப்போட்டி நடைபெற உள்ள மோடி ஸ்டேடியமும், கண்கவர் வான் சாகச நிகழ்ச்சிகளுடன் வேற லெவலில் தயாராகி வருகிறது.

இறுதிப் போட்டி நடைபெறும் மோடி ஸ்டேடியம்
உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த ஸ்டேடியமானது சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு பிரமாண்டமானது.
சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானம், 1982ம் ஆண்டு குஜராத்தில் கிரிக்கெட் விளையாடும் இளம் திறமைசாலிகளை வளர்க்கும் வகையில் கட்டப்பட்டது. இந்த மைதானத்திற்கு 1982 முதல் 2021ம் ஆண்டு வரை சர்தார் பட்டேல் மைதானம் என்ற பெயர்தான் இருந்தது. இந்த மைதானத்தில் 49,000 கிரிக்கெட் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது.
அக்டோபர் 2015ல், குஜராத் கிரிக்கெட் சங்கம், அப்போதைய குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்த மைதானத்தை புனரமைத்து உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக மாற்ற முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக சுமார் 1.3 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்கும் வகையில், கடந்த 2020 பிப்ரவரியில், மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
இதற்கு முன்னர் 90,000 பார்வையாளர்கள் பார்க்கும் திறன் கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்தான் உலகின் மிகப்பெரிய மைதானமாக இருந்தது. இந்தச் சாதனையை நரேந்திர மோடி மைதானம் முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள மைதானங்களில் மிகவும் முக்கியமான மைதானமாக இந்த மைதானம் இடம் பெற்றுள்ளது.

மைதானத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த மைதானமானது 63 ஏக்கர் பரப்பளவில் 4 நுழைவு வாயில்களைக் கொண்டுள்ளது. மைதானத்தின் அளவு 180 யார்டு X 150 யார்டு ஆகும். அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 4 அணிகள் பயன்படுத்தக்கூடிய ட்ரெஸ்ஸிங் ரூம்கள் உள்ளன. 6 உட்புற பயிற்சி மைதானங்கள் மற்றும் 3 வெளிப்புற பயிற்சி மைதானங்கள் அமைந்துள்ளன. 40 விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதியுடன் உள்ளரங்கு கிரிக்கெட் அகாடமி உள்ளது. தலா 25 பேர் அமர்ந்து போட்டியைக் காணும் அளவுக்கு 76 கார்ப்பரேட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
4 கட்ட நிகழ்ச்சிகள்
இவ்வளவு பிரமாண்டங்களை உள்ளடக்கிய இந்த மைதானத்தில், மேலும் பிரமாண்டத்தை சேர்ப்பதுபோல், உலகக்கோப்பை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சிறப்பு நிகழ்ச்சிகளை இந்த மைதானத்தில் இம்முறை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதன்படி, இந்த இறுதிப் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமான முறையில் 4 கட்டங்களாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், பிசிசிஐ-யும் மேற்கொண்டுள்ளன.
இறுதிப் போட்டியின் போது, பகல் 12 மணிக்கு இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளனர். சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் சுமார் 10 நிமிடங்கள் மைதானத்துக்கு மேலே உள்ள வான் பகுதியில் சாகசம் புரிய உள்ளது.
உலகக் கோப்பைவரலாற்றில் முதன்முறையாக விமானப்படையின் சாகசம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஒத்திகையில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றிநாயகன்களுக்கு மரியாதை
பிறகு, முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதற்கென அந்த கேப்டன்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆடையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் வெற்றிவாகை சூடிய தருணங்களையும், 20 நொடி ஒளிபரப்பாகக்கூடிய ரீல்ஸ்களாக பெரிய திரையில் ஒளிபரப்ப உள்ளனர். சுமார் 15 நிமிடங்கள் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 500 நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளனர்.
2-வது பேட்டிங்கின் போது 2-வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையின் போது 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது.
இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும்,வெற்றி கோப்பையை சாம்பியன் அணி கைகளில் ஏந்தும் போதும், 1,200 டிரோன்களைக் கொண்டு வானில் உலகக்கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்கவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனவு பலிக்குமா?
கடந்த 2003ம் ஆண்டிற்குப் பிறகு, தற்போதுதான் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் உலகக்கோப்பைக்காக இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. அப்போது கங்குலி தலைமையிலான இந்திய அணி பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. ஆனால், இம்முறை ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி அபாரமாக விளையாடி வருவதால், எப்படியும் இம்முறை கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
10 அணிகள் கலந்து கொண்ட இந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு, கடந்த மாதம் (அக்டோபர்) 5-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்திய அணி தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. தொடர் வெற்றிகளின் காரணமாக, 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஆனால், இறுதி ஆட்டத்தில் 5 முறை வாகை சூடிய ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது என்பதால், இந்த போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வருகை
இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் நேரில் காண உள்ளனர். அதோடு முன்னாள் சாம்பியன்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால், இந்திய ஜாம்பவான்களான கபில் தேவ், எம்எஸ் தோனி உள்ளிட்டோரும் அகமதாபாத் மைதானத்திற்கு நேரில் வரவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இறுதிப் போட்டியைப் பார்க்க நேரில் வர உள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களும் விறுவிறுப்பான இந்த ஆட்டத்தை நேரில் காண மோடி ஸ்டேடியத்திற்கு வருகை தர உள்ளனர். எனவே, மைதானத்திற்கான பாதுகாப்பு பணியில் சுமார் 4,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.