Year Ender 2022 : ‘PS - 1’ டூ ‘காந்தாரா’ - இந்திய சினிமாவில் தென்னிந்திய ஆதிக்கம்!
இந்தியத் திரையுலகில் வர்த்தக ரீதியிலும், மக்களை வசீகரித்த கன்டென்ட் ரீதியிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய தென்னிந்திய சினிமா கோலோச்சிய ஆண்டு என்றால், அது 2022 என்றால் மிகையல்ல.
கொரோனா பேரிடரின் பாதிப்புகள் வெகுவாகக் குறையத் தொடங்கியபோதும் பாலிவுட் திரைத்துறை 2022ம் ஆண்டில் கூட மீளவில்லை. ஒருபக்கம் ஓடிடியில் கிட்டும் உருப்படியான படைப்புகள், இன்னொரு பக்கம் மக்களின் புறக்கணிப்புப் போராட்டங்களால் பரிதவித்தது பாலிவுட். அதேவேளையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வர்த்தக வெற்றியிலும், படைப்புகளின் தன்மைகளிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது தென்னிந்திய சினிமா.
தலைதூக்கிய தமிழ் சினிமா
விக்ரம்:
தமிழ்த் திரைத்துறையும் ரசிகர்களுக்கும் பிரியாணி விருந்து படைத்தது ‘விக்ரம்’ (Vikram). லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான இப்படம், ரசிகர்களை சாரைசாரையாக தியேட்டருக்கு வரவழைத்தது.
தானே எதிர்பாராத மகத்தான வெற்றி என்பதால், திரைக்கு வெளிவந்த பிறகு நீண்ட நாட்களாக கமல்ஹாசன் கொண்டாட்டத்தில் திளைத்த படம் என்ற பெருமையும் கிடைத்தது.
சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘விக்ரம்’ உலக அளவில் கிட்டத்தட்ட ரூ.450 கோடி அளவில் கல்லா கட்டியது. வட இந்திய ரசிகர்களாலும் அதிகம் ஈர்க்கப்பட்ட தமிழ்ப் படம் ஆனது ‘விக்ரம்’. குறிப்பாக, ‘சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்பதை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதே இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான்.
பொன்னியின் செல்வன் பாகம் 1
காலத்தால் அழியாத கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை, அதே பெயரில் மணிரத்னம் இயக்கிய படைப்பு ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ (Ponniyin Selvan-1). கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததுடன், தியேட்டருக்கு ரிப்பீட் ஆடியன்ஸையும் வரவழைத்தது.
திரைக்கதையும் காட்சி அமைப்புகளும் ரசிகர்களை ரொம்பவே மிரளவைத்தது. இதன் எதிரொலியாக, பொன்னியின் செல்வன் நாவலின் புத்தக வடிவத்தின் விற்பனையும் இன்னொரு ரவுண்டு கூடியது வேறு கதை. இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் சேர்த்து ரூ.500 கோடி பட்ஜெட் எனத் தெரிகிறது. இந்தத் தொகையை முதல் பாகத்திலேயே வசூலித்துவிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.
திருச்சிற்றம்பலம் + லவ் டூடே
ஓடிடி யுகத்தில் பிரமாண்ட படைப்புகள்தான் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் என்ற கருத்தாக்கத்தை திருச்சிற்றம்பலம், லவ் டுடே ஆகிய படங்களை தகர்த்தன. இவ்விரு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் உருவான ரொமான்ட்டிக் டிராமாதான். ஆனால், தியேட்டரில் ரசிகர்கள் குவிந்து ரசித்தனர்.
தனுஷ் - நித்யா மேனன் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ (Thiruchitrambalam) எளிமையான காதல் கதையை இயல்பான திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு முழு திருப்தியை தந்தது.
நடுத்தர - மேல் நடுத்தர பொருளாதார வர்க்கப் பின்புலத்துடன் பெரும்பாலான மக்களுக்கு மிக நெருக்கமான அனுபவத்தைத் தந்தது. பாக்ஸ் ஆபிஸில் தனுஷை ரூ.100 கோடி வசூல் க்ளப்பில் இந்த ஆண்டு இணைத்ததும் கவனிக்கத்தக்கது.
இந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் ‘சர்ப்ரைஸ் ஸ்டார்’ என்றால், அது ‘லவ் டுடே’ (Love Today) படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் தான். இதுவும் நடுத்தர - மேல் நடுத்தர பொருளாதாரப் பின்புலம் கொண்டு கதை மாந்தர்களை மையமாகக் கொண்ட படைப்புதான். ஆனால், முழுக்க முழுக்க 2கே கிட்ஸின் காதல் போக்குகளையே களமாகக் கொண்ட திரைக்கதை. இந்தப் படத்தின் கருத்தாக்கம் என்பது விமர்சனத்துக்குரியது என்றாலும், மக்களை என்டர்டெயின் செய்த விதத்தில் ஜெயித்தது.
அட்டகாசமான வெற்றி இது. ஏனெனில், படத்தின் பட்ஜெட் என்பது ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரைதான். ஆனால், கல்லா கட்டியதோ கிட்டத்தட்ட ரூ.80 கோடி. இவ்விரண்டு படங்களும் ஒருவகையில் ட்ரெண்ட் செட்டராக ஆனாலும் வியப்பு இல்லை.
ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதையுடன் குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களுக்கு நிறைவு தரும் படங்கள் வரிசைகட்டுவதற்கு இவ்விரு படங்களும் வித்திட்டுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வழக்கம்போலவே இந்த ஆண்டும் அஜித்தின் ‘வலிமை’, விஜய்யின் ‘பீஸ்ட்’, கார்த்தியின் ‘விருமன்’, ‘சர்தார்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, சிவகார்த்திகேயனின் ‘டான்’, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு முதலான ஸ்டார் வேல்யூ படங்கள் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்டு குறிப்பிடத்தக்க வர்த்தகத்தில் பங்காற்றின.
இன்னொரு பக்கம் கடைசி விவசாயி, சாணி காயிதம், மாமனிதன், கார்கி, நட்சத்திரம் நகர்கிறது, நித்தம் ஒரு வானம், அனல் மேலே பனித்துளி, விட்னஸ் முதலான படங்கள் கவனத்துக்குரிய திரைப் படைப்புகள் வரிசையில் பேசப்பட்டன.
தெலுங்கு சினிமா
முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் பலவும் தோல்விகளைச் சந்தித்து, தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - நடிகர்கள் இடையே பிரச்சினைகளைத் தோற்றுவித்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் கவனிக்கத்தக்க இடத்தில்தான் தெலுங்கு சினிமா உலகம் இருக்கிறது. குறிப்பாக, ‘பான் இந்தியா’ படங்களை உற்பத்தி செய்வதிலும் முன்னிலை வகிக்கிறது.
ஆர்ஆர்ஆர் (RRR)
இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் கவனம் ஈர்த்து வசூலை வாரிக் குவித்தது, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் பின்னிப் பிணைந்து நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ (RRR). ராஜமெளலியின் டிபிகல் ‘ஃபார்முலா’ படம்தான் என்றாலும் உலக அளவில் ரூ.1200 கோடிகளை அள்ளியது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த சாகச சினிமா, வட இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வெகுவாக வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயா 2
‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு அடுத்தாக இந்தி ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் ‘கார்த்திகேயா 2’ (Karthikeya 2). இந்தியில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் வட இந்திய தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டது. நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்த இப்படம், புராண காலத்துப் பின்புலத்துடன் கூடிய ஆக்ஷன் - சாகச சினிமாவாகும்.
உலக அளவில் ரூ.120 கோடி அளவில் வசூலித்தது கவனத்துக்குரியது. இதேபோல், தெலுங்கில் ‘மேஜர்’ (Major), ‘பிம்பிசாரா’ (Bimbisara), ‘சீதா ராமம்’ (Sita Ramam), ‘ஒகே ஒகே ஜீவிதம்’ (Oke Oka Jeevitham), ‘சர்க்காரு வாரி பாட்டா’ (Sarkaru Vaari Paata), ‘பீம்லா நாயக்’ (Bheemla Nayak) முதலான படங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டின.
கன்னட சினிமா
கேஜிஎஃப்-2 (KGF - Chapter 2)
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளடக்கத்திலும் பிரமாண்ட வெற்றிகளிலும் 2022ல் அதிகம் கவனிக்கப்பட்டிருக்கிறது கன்னட சினிமா. இதற்கு முழுமுதற் காரணி ‘கேஜிஎஃப்-2’ (KGF-2).
கொரோனா எதிரொலியாக அவ்வப்போது தள்ளிப்போடப்பட்டு காலம் தாழ்த்தி வெளியானாலும் எதிர்பார்ப்பு மட்டும் குறையாது இருந்தது. அந்த எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்தது பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி, ரவீணா டாண்டன் நடித்த ‘கேஜிஎஃப்-2’.
முதல் பாகத்தை விட வர்த்தக ரீதியில் மகத்தான வெற்றிக் கொடி நாட்டிய கேஜிஎஃப்-2, உலக அளவில் ரூ.1,200 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்தப் படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் ரூ.400 கோடி வசூலித்து, பாலிவுட் ஸ்டார் படங்களுக்கே தண்ணிகாட்டியது.
காந்தாரா (Kantara)
இந்திய அளவில் வியத்தகு வரவாகவே பார்க்கப்பட்டது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ (Kantara). வனம், தொன்மம், ஆன்மிகம், த்ரில்லர் என மிரட்டலான கதையும் கதைக்களும் கொண்டு வெளியான இப்படம் சர்ச்சைகளைத் தாண்டி இந்திய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
வெறும் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவாகி, கிட்டத்தட்ட ரூ.400 கோடியை வசூலித்திருப்பதே இதற்குச் சான்று. இந்தி டப்பிங் வெர்ஷன் மட்டும் கிட்டத்தட்ட ரூ.75 கோடியை ஈட்டியது.
இதேபோல், கிரன்ராஜி கே இயக்கிய ‘சார்லி 777’ (Charlie 777) சர்ப்பைஸாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. புனீத் ராஜ்குமார் மறைவுக்குப் பின் வெளியான அவரது ‘ஜேம்ஸ்’, சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ ஆகிய படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தன. இதனிடையே, தரமான கன்டென்ட் ரீதியில் ‘காலிபட்டா 2’ (Gaalipatta 2), ‘டோல்லு’ (Dollu) போன்ற படங்களும் கன்னட திரையுலகை கவனிக்க வைத்தன.
மலையாள சினிமா
எந்த திரைத்துறை எப்படி மாறினாலும், தமது போக்கில் இருந்து சற்றும் விலகாமல் சின்ன பட்ஜெட், அழுத்தமான கதைக்களம், இயல்பான காட்சியமைப்புகளால் இந்த ஆண்டும் பயணித்திருக்கிறது மலையாள சினிமா. ஓடிடியின் வருகையால் நல்ல படைப்புகளை உலகுக்குக் கொடுப்பதில் மலையாள சினிமாதான் முன்னிலை வகிக்கிறது.
வர்த்தக ரீதியில் மெகா ஹிட் என்று பார்த்தால் மம்முட்டியின் டான் வகையறா படமான ‘பீஷ்ம பர்வம்’ (Bheeshma Parvam) ரூ.110 கோடிக்கும் மேலாக கல்லா கட்டி மலையாளத் திரையுலகில் புதிய சாதனை படைத்தது.
இங்கே ‘லவ் டுடே’ போல அங்கே வியத்தகு கவனம் ஈர்த்த ‘தள்ளுமாலா’ (Thallumaala) ரூ.70 கோடி அளவில் வசூலித்து புருவங்களை உயர்த்த வைத்தது.
இதேபோல், ‘ஹிர்தயம்’ (Hridayam), ‘ஜன கண மன’ (Jana Gana Mana), ‘கடுவா’ (Kaduva), ‘ஞான் தான் கேஸ் கொடு’ (Nna Thaan Case Kodu) ஆகிய படங்கள் ரூ.50 கோடி அளவிலும், ‘ரோர்ஷாக்’ (Rorschach), ‘பாப்பன்’ (Paappan) ஆகிய படங்கள் ரூ.40 கோடி அளவிலும் வசூலித்தன.
இந்தப் படங்கள் தமது உள்ளடக்கத்திலும் கவனம் ஈர்த்தன. குறிப்பாக, ‘தள்ளுமாலா’ மற்றும் ‘ரோர்ஷாக்’ ஆகிய படங்களின் மேக்கிங் வெகுவாக பாராட்டைப் பெற்றன. சாமானிய மனிதனின் அசாதாரண சட்டப் போராட்டத்தை பகடிகளுடன் காட்டிய ‘ஞான் தான் கேஸ் கொடு’ முதலான படங்கள் கேரள திரையரங்கில் மட்டுமின்றி ஓடிடியிலும் இதர மொழி ரசிகர்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டது.
ஜோ அண்ட் ஜோ (Jo & Jo), சூப்பர் ஷரண்யா (Super Sharanya), பால்து ஜான்வர் (Palthu Janwar) ‘ஜெய ஜெய ஜெய ஜய ஹே’ (Jaya Jaya Jaya Jaya Hey) முதலான படங்கள் மிக மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களின் வரவேற்புடன் லாபத்தையும் ஈட்டின.
இப்படியாக, இந்திய சினிமா சிம்மாசனத்தில் உறுதியாய் உட்கார்ந்திருக்கும் தென்னிந்திய சினிமாவின் இந்தப் போக்கு 2023ம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022: யூடியூப்பில் அதிகம் ட்ரென்ட் ஆகி பிரபலமான டாப் 10 கிரியேட்டர்கள் யார்?
Edited by Induja Raghunathan