யோகா உதவியால் புற்றுநோயில் இருந்து மீண்ட சென்னை விஜயா ராமச்சந்திரன்!

48 வயதாகும் பள்ளி ஆசிரியை விஜயா, தனது ஓய்வு நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச யோகா வகுப்புகளை எடுக்கிறார். குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கும் யோகா கற்றுக் கொடுத்து வருகிறார். இதுவரை 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு யோகா கற்றுக்கொடுத்து அதன் சிறப்பை பரப்பியுள்ளார்.
0 CLAPS
0

எந்தப் புள்ளியோடும் வாழ்க்கை நின்று விடுவதில்லை. அதன் அருகே மேலும் சில புள்ளிகள் வைத்தால், அடுத்த வாக்கியத்தை ஆரம்பிக்கலாம் என்பதற்கு முன்னுதாரமாக இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.

48 வயதாகும் விஜயா, சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் முக்கியப் பணியில் உள்ளார். தனது ஓய்வு நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று இலவசமாக யோகா வகுப்புகளை எடுக்கிறார். அதோடு, குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கும் யோகா கற்றுக் கொடுத்து வருகிறார்.

முன்பு மாதிரி இல்லை, இப்போதெல்லாம் மக்களுக்கு மருந்தில்லா ஆரோக்கிய வாழ்வு குறித்த விழிப்புணர்வு அதிகமாகி விட்டது. அப்படி இருக்கையில் தடுக்கி விழுந்தால் ஒரு யோகா வகுப்பை பார்க்க முடியும். அதிலும் மத்திய அரசு யோகா தினம் கொண்டாட ஆரம்பித்த பிறகு, அது பற்றிய விழிப்புணர்வு எல்லா தரப்பு மக்களிடமுமே அதிகமாக இருக்கிறது.

அப்படி இருக்கையில் இந்த யோகா டீச்சர் விஜயா மட்டும் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

காரணம் இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜயாவிற்கும் யோகா என்றால் என்னவென்றே தெரியாது. காலத்தின் கட்டாயத்தால் யோகா கற்றுக் கொண்டு இன்று யோகா டீச்சராக வலம் வருகிறார் இவர்.

“கடந்த 1999ம் ஆண்டு எனக்கு இரண்டாவது பிரசவத்தின் போது, ருமாட்டிக் பீவர் ஏற்பட்டது. அப்போது அதற்காக பின்விளைவுகளை ஏற்படுத்தும் பல மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். அப்போது தான் யோகா எனக்கு அறிமுகம் ஆனது. 2004ம் ஆண்டு யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக என் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மருந்து எடுத்துக் கொள்ளும் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, ஒரு கட்டத்தில் மருந்தே தேவையில்லை என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்தது யோகா,” என தன் கடந்தகாலம் பற்றிக் கூறுகிறார் விஜயா.

யோகா மூலம் தன் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை கண்கூடாக பார்த்த விஜயாவுக்கு, அதில் ஈடுபாடு அதிகரித்தது. இதனால் யோகாவை மேற்கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ஒன்பது குருக்களிடம் அவர் யோகா கற்றுக் கொண்டிருக்கிறார். யோகாவோடு ஜோதிடம், பிராணிக்ஹீலிங், ரேக்கி மற்றும் அக்குபிரஷர் போன்றவற்றையும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர் தான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்த விஜயா, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக அதனைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கும் வகுப்பு எடுத்தார்.

இப்படியாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் 2008ம் ஆண்டு மீண்டும் ஒரு புயல் வீசியது. அது வயிற்றில் கட்டி என ஆரம்பித்து, சில மருத்துவர்களின் அலட்சியத்தால் புற்றுநோயாக மாறியது. இதனால், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். கடினமான சிகிச்சை முறை என்றாலும், விஜயா சோர்ந்து போகவில்லை. எப்படியும் இதில் இருந்தும் வெளியே வருவோம் என்ற நம்பிக்கையில் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார். பின் மீண்டும் தன் யோகா வகுப்புகளுக்கு அவர் திரும்பினார்.

“அம்மா தான் ஒரு வீட்டைப் பார்த்துக் கொள்பவர். பெண்களுக்குத் தான் எல்லாப் பொறுப்புகளும் அதிகம். அதனால் அம்மா என்ற பெயரில் யோகா வகுப்பு ஒன்றை ஆரம்பித்தேன். பெண்களுக்கு சுலபமான முத்திரை மற்றும் ஆசனங்கள் மூலம் சக்தியை எப்படிப் பெறுவது என்பதைத் தான் முக்கியமாகச் சொல்லிக் கொடுக்கிறேன். தற்போதைய வாழ்க்கைச் சூழலில் அனைவருக்கும் மன அழுத்தம், உடல் பருமன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் பரவலாக உள்ளது. அவற்றிற்கு யோகா மூலம் எப்படி தீர்வு காண்பது என்பதை மற்றவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன்,” என்கிறார் விஜயா.

வியாதிகளால் முடங்கிப் போய் விடக் கூடாது என்பதை வைராக்கியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் விஜயா. தன் வீட்டிற்கு அருகில் மட்டுமல்ல, சென்னையின் புறநகர் பகுதிகளுக்கும் சென்று பெண்களுக்கு யோகா வகுப்பெடுக்கிறார். தனியார் பள்ளி ஒன்றில் பொறுப்பான பதவியில் இருந்தபடியே, பகுதிநேர வேலையாக யோகா வகுப்புகளும் அவர் எடுத்து வருகிறார்.

தான் நேரில் சந்திப்பவர்களுக்கு மட்டுமின்றி, முகம் தெரியாதவர்களுக்கும் யோகாவைக் கற்றுத் தரும் முயற்சியாக, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றையும் விஜயா ஆரம்பித்துள்ளார். புற்றுநோயால் தன் தலைமுடியை இழந்தபோதும், வெறும் தலையில் துணியால் முக்காடிட்டவாறு அந்த வீடியோவில் பேசுகிறார் அவர்.

இலவச யோகா வகுப்பு எடுக்க வேண்டும் என முடிவு செய்ததும், முதலில் தான் படித்த ஓசூர் பள்ளி மாணவர்களை அவர் சந்தித்துள்ளார். அவர்களுக்கு எளிய ஆசனங்களை சொல்லிக் கொடுத்துள்ளார். அதன்மூலம், அம்முறை பொதுத்தேர்வில் அம்மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜயா.

இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா வகுப்பெடுத்துள்ளாராம் இவர். யோகாவை முடிந்த வரை வியாபாரமாக்கி விடக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். அதனால் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு இலவசமாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டும் சிறிய அளவில் கட்டணமும் வசூலிக்கிறார்.

யோகா மூலம் அனைத்து விதமான உடல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜயா. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள், முடி உதிர்வு, சுகப் பிரசவம் நடைபெற, பிரசவத்திற்குப் பின் மீண்டும் பழைய உடலைப் பெற எனப் பல்வேறு ஆசனங்களை இவர் சொல்லித் தருகிறார்.

“இன்றைய சூழலில் பலர் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்கின்றனர். ஆனால், அங்கு சொல்லித் தரப்படும் பயிற்சிகளால் தசை கடினமாகும் வாய்ப்புகள் அதிகம். அதோடு, அதிரடியாக அப்படி எடையைக் குறைக்கவும் கூடாது. அதனால் வயசான தோற்றம் ஏற்பட்டு விடும். யோகா தான் உடல் பருமனுக்கு நல்ல தீர்வு. மெதுவாக எடை குறைந்தாலும், அதனால் எவ்வித பின்விளைவுகளும் ஏற்படாது. மூச்சுப்பயிற்சி செய்வது எல்லோருக்குமே நல்லது,” என யோகாவின் பெருமைகள் பற்றி பேசிக் கொண்டே செல்கிறார் விஜயா.

காதல் திருமணம், அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், உடல்நலக் குறைபாடு என வாழ்வின் பல தடைகளை தனது மன உறுதியால் தாண்டி வந்த விஜயா, தன்னைப் போலவே மற்ற பெண்களும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சக்தியைப் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் யோகா வகுப்புகளை பகுதி நேரமாக எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச யோகா தினமான இன்று இவரின் ஊக்கமிகு கதை மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விஜயா ராமசந்திரனின் யூட்யூப் லின்க்: Amma Yoga

Latest

Updates from around the world