சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக களமிறங்கிய இளம் கலெக்டர்!

11th Jun 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

நவீன இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்றாக சாதியப் பாகுபாடு அமைந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நகர்ப்புற வாழ்க்கையில் சாதிய பாகுபாடுகளை அவ்வளவாக, பார்க்க முடியாது என்றாலும், கிராமப்புறங்களில் இன்றளவும் சாதி வேற்றுமை மறையாமல் இருப்பதை பார்க்கலாம்.

நாட்டின் பல்வேறு கிராமங்களில், சாதிய ஏற்றத்தாழ்வு காரணமாக மக்கள் மோசமாக நடத்தப்படுவது இன்னமும் தொடர் கதையாக இருக்கிறது. இது வேதனை அளிக்கும் விஷயம் என்றாலும், அண்மையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் பெண் கலெக்டர் ஒருவர், தீண்டாமை செயல்பாட்டை கண்ணெதிரே கண்ட போது மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கை வரவேற்கக் கூடியதாக அமைந்ததோடு, நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது.

நவீன கலெக்டர்

ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் நேஹா கிரி. இந்த இளம் அதிகாரி, அண்மையில், பெசடி ஊராட்சியில் நடைபெற்று வரும், 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகளை மேற்பார்வையிட சென்றிருந்தார். அப்போது காண நேர்ந்த காட்சி கலெக்டரை திகைப்பில் ஆழ்த்தியது.

கைக் குழந்தை வைத்திருந்த இளம் பெண் ஒருவர் கடினமான பணியை செய்து கொண்டிருந்த நிலையில், திடகாத்திரமான உடல்வாகு கொண்ட ஆண் ஒருவர், அனைவருக்கும் தண்ணீர் அளிக்கும் எளிதான பணியை செய்து கொண்டிருந்தார்.

இளம் பெண்ணுக்கு கடினமான பணி கொடுக்கப்பட்டதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியாத கலெக்டர் இது பற்றி கிராம மக்களிடம் கேட்டார். அப்போது அந்த பெண், வால்மிகி சமூகத்தை சேர்ந்தவர் என்றும், சமூக அடுக்கில் கீழ் நிலையில் இருப்பதாகக் கருதப்படும் சமூகம் என்பதால் அந்த பெண்மணி தண்ணீர் கொடுத்தால் ஒருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கிராமவாசிகள் பதில் அளித்துள்ளனர்.

கண் முன் சாதிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை பார்த்த கலெக்டர், இதற்காக கிராம மக்களை கடிந்து கொண்டார். அத்துடன் நிற்கவில்லை, அந்தப் பெண்ணை தண்ணீர் கொண்டு வரச்செய்து தானே அவரிடம் இருந்து தண்ணீர் வாங்கி பருகி சமத்துவத்தின் அருமையை உணர்த்தினார். மேலும் கிராம மக்களும் அவரிடம் இருந்து தண்ணீர் பருக்ச்ச்செய்தார்.

”எந்தவிதத்திலும் பாகுபாடு நல்ல விஷயம் அல்ல,” என கலெக்டர் நேஹா கிரி கூறியதாக தி நியூ இந்தியன் எஸ்க்பிரஸ் தெரிவிக்கிறது.

வால்மிகி சமூகத்தினர் தாழ்த்தப்பட்டவர்களிலேயே கீழ் நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. தீண்டாமையை ஒழிக்கும் சட்டம் இருந்தாலும், நடைமுறையில் அது செயல்படுத்தப்படுவதில்லை என்று வேதனை தெரிவிக்கும், தலித் செயல்பாட்டாளர் பன்வர் மேக்வன்ஷி,

“மதிய உணவுத் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், அங்கன்வாடி திட்டம் போன்றவற்றில் மேல் சாதி மக்களே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்தத் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேவையான மாற்றத்திற்கான முன்னுதாரணமாக இளம் கலெக்டர் கிரி செயல்பட்டுள்ளார்.

தமிழில் : சைபர்சிம்மன்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close