9 வயதில் முதல் கண்டுபிடிப்பு; இளம் விஞ்ஞானிகளின் இன்ஸ்பிரேஷன் நாகர்கோயில் ‘மாஷா நசீம்'
9 வயதில் மாஷா நசீம் தொடங்கிய அந்த கண்டுபிடிப்புப் பயணம் நீண்டுகொண்டே செல்கிறது. யார் இந்த இளம் விஞ்ஞானி மாஷா நசீம்..?
தான் பார்க்கும் பிரச்னைகளுக்குத் தீர்வை ஏற்படுத்தும் திசையை நோக்கி தனது கண்டுபிடிப்புகளை நகர்த்தியவர் மாஷா நசீம். 9-வயதில் தொடங்கிய அந்த கண்டுபிடிப்பு பயணம் நீண்டுகொண்டே செல்கிறது. யார் இந்த இளம் விஞ்ஞானி மாஷா நசீம்..?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்தவர் மாஷா நசீம். பள்ளி பருவத்திலிருந்தே கண்டுபிடிப்புகளில் அதீத ஆர்வம் கொண்டவர். இளம் விஞ்ஞானியான மாஷா, தனது சிறுவயதிலே பல்வேறு கருவிகளை கண்டுபிடித்து, விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். தனது 9-ஆவது வயதில் முதல் கருவியைக்கண்டுபிடித்து அசத்தியுள்ளார் மாஷா.
9 வயதிருக்கும் போது குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் சாப்பிட சென்ற அவர், கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாயைப் பார்த்துள்ளார். அதன்மூலம் அவருக்கு உதயமான ஒரு யோசனைதான் திருடர்களைச் சிக்க வைக்கும் ‘பர்க்லர் அலாரம்’.
"என்னுடைய முதல் கண்டுபிடிப்பான பர்க்லர் அலாரம், எனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்விற்காக நான் வடிவமைத்தது. உணவு விடுதிக்கு சென்ற போது கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாய், ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் செயல்படுகிறது என என் தந்தை சொன்னார். அந்த சமயத்தில் திருடர்கள் குறித்த செய்திகளை நான் அதிகம் கேட்டேன். எனவே இந்த ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் நாம் ஏன் ஒரு பர்க்லர் அலாரம் செய்யலாமே,” என எனக்குத் தோன்றியது.
அந்த கண்டுபிடிப்பிற்காகப் பள்ளியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த சமயத்தில் நடனம், பாட்டு, விளையாட்டு போன்ற துறைகளைத்தான் மாணவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அறிவியல் துறை என்பது அந்த சமயத்தில் பலராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு துறையாக இருந்தது. எனவே அதில் முதல் பரிசு கிடைத்தவுடன் அதுவே எனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது" என்கிறார் மாஷா.
"ஒரு போட்டியில் கலந்து கொண்டு எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் நான் விட்டுவிடமாட்டேன். அதில் என்ன குறை அதை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என யோசித்து முயற்சிப்பேன். நமது முயற்சியின்மீது நமக்கு நம்பிக்கை வேண்டும் அப்போதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும்," என்று தான் கடந்து வந்த பாதை குறித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் தனது 5 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார் மாஷா.
தனது 14ஆவது வயதில் மாவட்ட அளவு அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்குபெற, ‘ரயில் கழிப்பறை மாதிரி’ ஐ (ஹைடெக் ட்ரைன் டாய்லெட் பிராஜக்ட்) உருவாக்கியுள்ளார், இதன்மூலம் தண்டவாளங்களில் கழிவுகள் விழாமல் சேகரிக்கப்பட்டு சாக்கடையில் விடப்படும். இந்த கண்டுபிடிப்பால் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 46 நாடுகள் கலந்து கொண்ட, 'உலக கழிவறை கூட்டத்தில்' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பையும் பெற்றார் மாஷா. இதுவரை 14க்கும் அதிகமான கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பின் காரணமாக பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் பாராட்டுக்களையும் இவர் பெற்றார். மேலும் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றுள்ளார்.
'மாஷா ஆக்கத்திறன் மையம்' என்ற ஒன்றைத் தொடங்கி பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறார். இது குறித்து பேசும்போது,
“பல மாணவர்கள் அறிவியல் யோசனைகளுடன் என்னை தொடர்பு கொண்டனர், அவ்வாறு என்னை அணுகியவர்களுக்கு நான் உத்வேகமளித்து பணியாற்றியதில் ஒரே வருடத்தில் இரு மாணவர்கள் தேசிய அளவில் விருதுகளை பெற்றனர்," என்கிறார்.
இதுவரை இந்த ஆக்கத்திறன் மையத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் ஏழு பேர் தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளனர். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் திட்டங்கள் செய்வதற்கான நிதி உதவி பெறுவதற்கும் இந்த மையம் உதவி செய்து வருகிறது.
மேலும் இந்த ஆக்கத்திறன் மையத்தை நேஷனல் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' ஆக மாற்ற வேண்டும் என்பதுதான் தன்னுடைய லட்சியம் என்று கூறும் மாஷா, இந்த ஆக்கத்திறன் மூலம் ஆற்றிய சமூக சேவைக்காக 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மாநில இளைஞர் விருது பெற்றுள்ளார்.
பெண் என்றாலே பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதையெல்லாம் கடந்து, பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின், அயராது உழைத்து தனது வெற்றியை சாத்தியமாக்கியுள்ள மாஷா நசீம், மற்ற இளம் விஞ்ஞானிகளுக்கு இன்ஸ்பிரேஷன்!
படங்கள் உதவி: பிபிசி | கட்டுரை தொகுப்பு: மலையரசு