'யூடியூப் டூ ஹோட்டல்' - மதுரையை கலக்கும் 'டாடி ஆறுமுகம்' ஹோட்டல்!

யூட்யூப் சேனலாக தொடங்கிய டாடி ஆறுமுகம் இன்று அவரின் உணவுவகைகளை ருசிக்க ஹோட்டல் திறக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
3.1k CLAPS
0

'டாடி' ஆறுமுகம்... இந்தப் பெயரை நாம் எங்காவது கேட்டிருப்போம். இல்லை அவரின் வீடியோவை இன்றைய இணைய உலகில் அனைவரும் ஒருமுறையாவது பார்த்திருப்போம். 

திருப்பூரைச் சேர்ந்தவர்தான் இந்த 'டாடி' ஆறுமுகம். பெரிய கிடா மீசை, எளிமையான பேச்சு, யூடியூப்பை தாண்டி பறக்கும் இவரின் உணவின் சுவை, என கிராமிய உணவு வகைகளை சமைத்துக் காட்டி, யூடியூப் சூழ் இந்திய உணவுப் பிரியர்களை வெகுவாக வசீகரித்து வைத்திருக்கிறார் இந்த 'டாடி' ஆறுமுகம். தனது குடும்பத்தினர் உடன் இந்த வேலையை செய்து வருகிறார் ஆறுமுகம்.

இணையக்களத்தில் போட்டி மிகுந்த யூடியூப் சேனல்களில் எளிமையான அணுகுமுறையால் இந்தக் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ள மவுசு வியக்கத்தக்கது. யூடியூப் களம் கண்டு சில மாதங்களிலேயே, உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆறுமுகம் டாடி-க்கு புகழ் வெளிச்சத்தைப் பரவவிட்டிருக்கிறது, 'விலேஜ் ஃபுட் ஃபாக்டரி'.

திருப்பூரில் வசிக்கும் ஆறுமுகம் - செல்வி தம்பதியின் முதல் மகன் கோபிநாத். இவர் பொறியியல் படிப்பை முடித்து சென்னையில் திரையுலகில் 2015ல் இருந்து 2016ம் ஆண்டு வரை உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் பணியாற்றிய திரைப்படங்கள் இன்றும் வெளிவராத நிலையில், சிறு வருவாயை எதிர்பார்த்து இவர் தொடங்கிய முதல் யூடியூப் சேனல் 'தமிழ் ஃபாக்டரி'.

முதலில் திரையுலகின் செய்திகளை மட்டுமே மக்களுக்கு அளித்து வந்த கோபிநாத், புதிதாகத் தனது குடும்பத்தினரை வைத்துத் துவங்கிய இரண்டாவது யூடியூப் சேனல்தான் 'தி வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி'.

முதலில் அடிப்படை வருவாய்க்காக இந்த சேனல் துவங்கப்பட்டாலும், பின்பு நாளடைவில் வியக்கத்தக்க அளவில் பெரும் பிரபலத்தை அடைந்தது. சானலை துவக்கியது வேண்டுமானால் கோபிநாத்தாக இருக்கலாம். ஆனால் ஹீரோ அவரின் தந்தை ஆறுமுகம்தான். 

வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி சானலில் வரும் அனைத்து வீடியோக்களிலும் கிராமிய உணவைச் சமைத்து அனைவரின் நாவிலும் செய்முறையிலேயே நாவில் எச்சிலூர வைப்பவர் ஆறுமுகம்.

தனது தனிப்பட்ட ஸ்டைல், சமையல் மூலம் இன்று உலகம் முழுவதும் இந்த ஆறுமுகத்தை 'டாடி' என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இதற்கிடையே, தனக்குக் கிடைத்த யூடுயூப் வெளிச்சத்தை வைத்து தற்போது நம்ம மதுரையில் உணவகம் ஒன்றை திறந்துள்ளார் ஆறுமுகம். ‘டாடி ஆறுமுகம்' என்றே கடைக்கு பெயரும் வைத்திருக்கிறார்.

மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகில் இந்த உணவகத்தை திறந்துள்ளார். ஹோட்டலில் ’டாடி ஆறுமுகம்' சமையல் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் யூடியூப் சேனலை போலவே இவரின் உணவகமும் தற்போது பிரபலமாகி வருகிறது. தென்னிந்திய சமையல் முறையில் உணவுகள் அருமையாக இருப்பதாகக் அங்கு உணவருந்தியவர்கள் கூறியுள்ளனர்.

12 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் தன் சொந்த ஊரான போடிநாயக்கனூரை விட்டுப் பிழைப்புக்காக திருச்சி வந்தவர் இந்த ஆறுமுகம். பெயின்டர், ஜவுளி வியாபாரம் போன்ற தொழில்களை செய்து வந்திருக்கிறார். 18 மொழிகள் அறிந்த இவருடன் பிறந்தவர்கள் 12 பேர்.

மேலும் இவருக்குச் சமையல் கலையில் அதிக ஆர்வம் உள்ளதாகவும், ஆறுமுகத்தின் உறவினர்களிடையே அவருக்குப் பெரிதாக மதிப்பு இல்லாததை அடுத்து தனது மகனின் உதவியுடன் தற்போது இவ்வளவு பெரிய நிலையை அடைந்துள்ளார். அவர் அடைந்த இந்த நிலை சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷன்தான்.

புதிய தொழிலிலும் கொடிகட்டி பறக்க வாழ்த்துக்கள் ’டாடி' ஆறுமுகம்!

Latest

Updates from around the world