ரூ.100 கோடி சம்பளம்: இந்தியாவில் இனி அதிக சம்பளம் வாங்கும் நிறுவனர்கள் இவர்கள்தானா?

கவனம் ஈர்க்கும் ஜீரோதா!
0 CLAPS
0

கொரோனா, லாக்டவுன் என கடந்த ஆண்டு முழுவதும் உலக மக்கள் திணறி போயிருந்தாலும் ஒருபுறம் பிஸினஸ்மேன்கள் காட்டில் அடை மழைதான். ஊரடங்கு காலகட்டத்திலும் அவர்கள் பல கோடிகளை சம்பாதித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021ன் பட்டியலில் இடம்பிடித்தவர் ஜீரோதா Zerodha நிறுவனத்தின் நிகில் காமத். 2010ம் ஆண்டு தனது சகோதரர் நிதினுடன் இணைந்து நிகில் காமத் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக தரகு நிறுவனமான ஜீரோதாவை தொடங்கினார். ஜீரோ மற்றும் ரோதா ஆகியவற்றின் இணைப்புச் சொல்தான் ஜீரோதா. இதற்கு சமஸ்கிருத்ததில் தடை என்று பொருள்.

கொரோனா பெருந்தொற்றின்போது இந்த நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. அதுமட்டுமல்லாமல் தினசரி 10 பில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்திடம் 50 லட்சத்துக்கும் மேல் பயனாளர்கள் உள்ளனர். 

நிதின் காமத்

வர்த்தக தரகு துறையில் நடக்கும் மொத்த பரிவர்த்தனையில் 15 சதவீதம் அளவுக்கு ஜீரோதா வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 கோடி டாலருக்கு அதிகம் என்றும், 2020-ம் நிதி ஆண்டில் ரூ.1000 கோடி வருமானத்தை பெற்றுள்ளது என்றும் இதன், நிகர லாபம் 442 கோடி ரூபாயாக இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கிடையே, இந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் நிதின் காமத், நிகில் காமத் மற்றும் முழு நேர இயக்குநர் சீமா பாட்டீல் (நிதின் காமத் மனைவி) ஆகியோரின் ஆண்டு சம்பளம் தலா ரூ.100 கோடியாக நிறுவனத்தின் இயக்குநர் குழு நிர்ணயம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதன்மூலம், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர்களாக இவர்கள் மூவரும் உயர்ந்துள்ளார்கள் என்ற விஷயம் வைரலானது.

இது குறித்து விளக்கம் அளித்த ஜிரோதா நிறுவனர் நிதின் காமத்,

"எங்களின் சம்பளத் தொகுப்புப் பற்றிய செய்தி இத்தனை வேகமாக பரவியதில் ஆச்சரியப்படுகிறேன். மேலும், செய்திகளில் குறிப்பிடுவது போல் எங்கள் மூவருக்கும் சேர்த்து ரூ.100 கோடி சம்பளம் என்று சொல்லப்படுவது சரியான தொகை அல்ல. அதற்குக் கீழ் தான் எங்களுக்கு சம்பளம் வரவாய்ப்புள்ளது. எனினும் அது சந்தையில் உள்ளதைவிட அதிகம் என்பதால் தற்போது பேசப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் லிக்விடிட்டியை பொறுத்து சம்பளத்தொகை மாறும்,” என்று விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக இந்த சாதனையானது சன் டிவி நிறுவனத்தின் கலாநிதி மாறன் மற்றும் அவரின் மனைவி காவேரி மாறன் ஆகியோர் வசம் இருந்தது. அவர்கள் அதிகபட்சமாக தலா ரூ.88 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருந்தார்கள். இதனை தற்போது ஜீரோதா நிறுவனர்கள் மாற்றியுள்ளார்கள்.

நிறுவனர்களுக்கு புதிய சம்பள அறிவிப்பை வெளியிட்டிருக்கும் இந்நிறுவனம், பணியாளர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது, நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படும் அறிவிப்பு தான். தற்போது ஜீரோதாவில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன என நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு வரை நிறுவனத்தின் 6.5 சதவீத பங்குகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போதும் பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பணியாளர்கள் வசம் மட்டும் மொத்தம் 8 சதவீத ஜீரோதா பங்குகள் உள்ளன. 

தகவல் உதவி: யுவர்ஸ்டோரி, டிவிட்டர் | தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world