நெல்லை கிராமம், வயல்வெளி நடுவில் தொழில்நுட்பம் பழகும் ஸ்ரீதர் வேம்பு!

தமிழகம் முழுவதும் 10 கிராமங்களில் அலுவலகம் அமைத்து ஊழியர்களை சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் பரிசோதனை முயற்சியை தொடங்கியுள்ளார் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.

27th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தமிழகத்தின் தெற்குப் பகுதியில் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கும் தென்காசி மற்றும் திருநெல்வேலி நகருக்கும் அருகே அமைந்துள்ள கிராமம். ஒன்றில் இருந்து தற்போது செயல்பட்டு வருகிறார் ஜோஹோ கார்ப் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.


பொறியாளர்களை கிராமப்புறங்களிலோ தங்களது சொந்த ஊர்களுக்கு அருகிலேயோ பணிபுரியவைக்கவேண்டும் என்பதே ஸ்ரீதர் வேம்புவின் பல ஆண்டுகால கனவு. கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஸ்ரீதர் வேம்புவின் இத்திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளது.


தற்சமயம் இந்த SaaS நிறுவனம் தமிழகத்தின் 10 கிராமங்களில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி இந்த 10 கிராமங்கள் ஒன்வொன்றிலும் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 20 பொறியாளர்கள் என 200 பொறியாளர்கள் ஒருங்கிணைந்து மென்பொருள் உருவாக்கி வருகின்றனர். இந்த அலுவலகங்கள் அவர்களது சொந்த ஊரில் இருந்து 20-30 கி.மீட்டர் தொலைவிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

1

நெல்லை கிராமத்தில் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு தங்கியுள்ள கிராமத்தில் இருந்து யுவர்ஸ்டோரி உடனான வீடியோ கால் அழைப்பில் உரையாடினார். அந்த கிராமத்தின் பெயரை அவர் வெளியிடவில்லை. அங்குள்ள பள்ளி ஒன்றில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கார்பனால் ஆனவை என்றும் தன் மாணவர்களுக்கு விவரிக்கிறார்.


வகுப்பு முடிந்ததும் வயல் வெளியில் வேலை செய்துவிட்டு வந்த விவசாயி போல் ஸ்ரீதர் வேம்பு மரத்தடியில் உட்கார்ந்து கொள்கிறார்.

“ஜோஹோவின் ஒவ்வொரு பொறியாளரும் விவசாயம் மற்றும் கற்பித்தலில் ஈடுபட ஊக்குவிக்கிறேன்,” என்றார்.

ஜோஹோ பரிசோதனை முயற்சி

ஜோஹோ கார்ப் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு எடுத்தது. அதை அடிப்படையாகக் கொண்டே தமிழக கிராமங்களில் பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் (சுமார் 3,500 பேர்) தங்களது சொந்த ஊருக்கு அருகிலேயே பணிபுரிய விருப்பம் தெரிவித்தனர். இதை ஆய்வு முடிவுகள் மூலம் இந்நிறுவனம் தெரிந்துகொண்டது.


தனது ஊழியர்களை அவர்களது கிராமங்களுக்கு அருகிலேயே பணியமர்த்தவேண்டும் என்கிற ஸ்ரீதர் வேம்புவின் நீண்ட நாள் கனவை இது மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது. கடந்த இரண்டாண்டுகளில் இவர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டா நகரில் வாடிக்கையாளர் உதவி மையத்தை நிறுவியுள்ளார். இங்குள்ள 120 ஊழியர்கள் ரேணிகுண்டா நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.


கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு மற்றும் சென்னையில் பணிபுரியும் ஜோஹோ நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தீர்மானித்தனர். மார்ச் மாதம் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே இந்நிறுவனம் அதன் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்பி பணியாற்ற ஊக்குவித்தது.

“கிராமப்புறங்களில் இருப்போரின் திறன் உலகத் தரம் வாய்ந்ததாக இருப்பதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. நகர்புறங்களில் பணியாற்றும் பொறியாளர்கள் உட்பட அனைவருமே சிறு நகரங்கள் அல்லது கிராமங்களைச் சேர்ந்தவர்களே என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.

தற்போது உலகளாவிய பிராஜெக்டுகளில் பணியாற்றும் பொறியாளர் ஒருவர் தனது கிராமத்தில் இருந்து சேவையளிக்க முடியும். இது சாத்தியமானால் மக்கள் அதிகம் சேமிக்கமுடியும்; ஆரோக்கியமாக வாழமுடியும்; பணி வாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சிறப்பாக சமன்படுத்தமுடியும். குடும்பத்தினர்கள், நண்பர்கள் அருகிலேயெ இருப்பது மன நலனை மேம்படுத்தும். கிராமப்புறங்களுக்கு அருகே அமைக்கப்படும் இதுபோன்ற ஜோஹோ மையங்கள் மக்களை ஒன்றிணைத்து உலகளாவிய நிறுவனங்களுக்காக பணியாற்றும் வாய்ப்பினையும் வழங்கும்,” என்றார் ஸ்ரீதர். நெல் வயலுக்கு அருகே நடந்தவாறே,

“நாம் நமது பாரம்பரியத்தை கைவிட்டு நகர்புறங்களில் வாழ்வதற்காக ஆண்டுக்கணக்கில் அதிகக் கடன் சுமையை சுமந்துகொண்டே வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இது மிகப்பெரிய தவறு. தற்போது ஊழியர்கள் தங்களது பகுதிகளுக்கு அருகிலேயே வசிக்கமுடிந்தால் விவசாயத்தில் ஈடுபடுத்திக்கொள்வதுடன் கோயில், மசூதி, தேவாலயம் போன்ற இடங்களில் சேவை செய்துகொண்டே தங்களது வழக்கமான பணியையும் தொடரலாம். இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படத் தொடங்கினால் பள்ளிப்படிப்பு முறையிலும் மாற்றம் வந்துவிடும். இவர்களது குழந்தைகளும் வீட்டில் இருந்தபடியே படிப்பதும் வருங்காலங்களில் சாத்தியப்படலாம்,” என்றார்.

முதல் 10 கிராமங்களில் இத்தகைய மையங்கள் அமைக்கப்பட்டு அதன் வெற்றியைத் தொடர்ந்து கேரளாவில் இரண்டு கிராமங்களிலும் ஆந்திராவில் ஒரு கிராமத்திலும் இதேபோன்று அமைக்கப்படும். இந்த முயற்சியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மற்ற நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்றார் ஸ்ரீதர் வேம்பு.


இந்தியாவில் மட்டுமின்றி மெக்சிகோ, அமெரிக்கா, ஜப்பான் போன்ற பகுதிகளிலும் இதே மாதிரியைப் பின்பற்ற ஸ்ரீதர் திட்டமிட்டுள்ளார்.

“பே ஏரியாவிற்கு சென்றால் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அருகிலேயே பணிபுரிவதைப் பார்க்க முடியும். மக்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அருகிலேயே இருக்க விரும்புவார்கள் என்பதை இந்த பெருந்தொற்று உணர்த்தியுள்ளது,” என்றார் நிறுவனர்.

தத்துவம்

ஸ்ரீதர் அத்வைத தத்துவத்தைப் பின்பற்றுபவர். சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் வாழ்க்கை தொடர்ந்து ஒருவரது உள்மனதின் வலிமையை சோதனை செய்யும் என்பதையே இந்தத் தத்துவம் வலியுறுத்துகிறது.

“இன்று உலகமே செயற்கை நுண்ணறிவு குறித்து பேசி வருகிறது. மனிதர்களுக்கு மாற்று இருப்பதாக சிலர் நம்புவதே இதற்குக் காரணம். மனிதர்களின் இடத்தை வேறொன்றால் நிரப்பிவிடமுடியும் என்பது உங்களது நம்பிக்கையாக இருக்குமானால், உங்கள் நிறுவனத்திற்கு சமூகம் சார்ந்த நோக்கம் இல்லை என்பதே பொருள். இந்தியா அதன் கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. ஆத்மநிர்பார் திட்டம் பலனளிக்க வேண்டுமானால் இந்தியா அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி கவனம் செலுத்த வேண்டும். பெரு நகரங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் கொள்கைகளில் மாற்றம் தேவை,” என்றார்.

ஸ்ரீதர் வேம்பு தனது சிறிய அலுவலகத்தையும் தனது பொறியாளர்களுடன் இணைந்து பணிபுரிவதையும் உரையாடலின்போது பகிர்ந்துகொண்டார். இவர் கிராமத்தில் பணிபுரிவதுடன் அங்குள்ள குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடுவதாகவும் தெரிவித்தார்.


கிராமத்து பொருளாதாரம் செழிப்படையத் தொடங்கும் என்பதால் கிராம அலுவலகங்கள், வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று ஸ்ரீதர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: ஸ்ரீவித்யா

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India