வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் உதவித் தொகையுடன் 1 கோடி இளைஞர்களுக்கு மத்திய அரசின் பயிற்சித் திட்டம்!
இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து போர்ட்டலில் பதிவு செய்யலாம்.
ஐந்து ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 நிதியுதவி வழங்கும் இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
2024-25-ம் ஆண்டுக்கான இத்திட்டத்திற்கான மொத்த செலவீன ஒதுக்கீடு ரூ.800 கோடியாகும். இந்த நிதியாண்டில் 1.25 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்கப் பார்க்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பட்ஜெட் 2024-ல் அறிவிக்கப்பட்ட இந்த பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்திற்கு பயிற்சி எடுக்க வருபவர்களுக்கு முன்னணி நிறுவனங்களும் காப்பீட்டுத் தொகையை வழங்க முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 21 மற்றும் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்களாவார்கள். பயிற்சித் திட்டம் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து போர்ட்டலில் பதிவு செய்யலாம்.
திட்டத்தில் நிறுவனங்களின் பங்கேற்பு என்பது அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி 12 மாதங்களுக்கு வழங்கப்படும். இதில் ஒரு வேலைவாய்ப்பு வழங்கப்படும், குறைந்தபட்சம் பாதி காலத்தை உண்மையான வேலைச் சூழலில் செலவிட வேண்டுமே தவிர வகுப்பறையில் அல்ல என்பது கவனிக்கத்தக்கது.
மற்ற எந்த நிறுவனம், வங்கி அல்லது நிதி நிறுவனமும் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் திட்டத்தில் பங்கேற்க முடியும். பயிற்சிக்காக வருபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும், இதில் ரூ.4,500 அரசால் வழங்கப்படும், ரூ.500 நிறுவனம் அதன் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து அளிக்கும்.
மேலும், ஒருமுறை மானியமாக ரூ.6,000 பயிற்சி இடத்தில் சேர்ந்தவுடன், அமைச்சகத்தால் வழங்கப்படும். மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்களான பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையை அரசே வழங்கும்.
தகுதியின் ஒரு பகுதியாக, ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வித் திட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள், பாலிடெக்னிக் கல்வியில் டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் பிஏ, பிஎஸ்சி, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.பார்மா போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியானவர்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் போர்ட்டலில் பதிவு செய்யலாம், அங்கு அவர்களின் சுய விவரங்கள் வழி விண்ணப்பம் உருவாக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகள், ரோல்கள், மற்றும் இருப்பிடங்களின் அடிப்படையில் இன்டர்ன்ஷிப்பை பிரவுஸ் செய்யலாம். ஒருவர் ஐந்து வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.