Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

49 வயதில் ஸ்கூபா டைவர் ஆன திண்டுக்கல் பெண் - பவளப்பாறைகளை காக்கப் போராடும் உமா மணி!

தனது 49 வயதிலே முதன் முதலில் நீருக்கடியில் டைவ் செய்த உமா மணி, அன்றிலிருந்து, கடல் பாதுகாப்பிற்கு பவளப்பாறைகளின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் குறித்து இடைவிடாமல் போராடி வருகிறார். இறக்கும் பவளப்பாறைகளின் அவல நிலையைவெளிச்சம் போட்டுக் காட்டி இந்திய பவளமணியாக மாறிய அவரது கதை

49 வயதில் ஸ்கூபா டைவர் ஆன திண்டுக்கல் பெண் - பவளப்பாறைகளை காக்கப் போராடும் உமா மணி!

Tuesday March 12, 2024 , 5 min Read

தனது 49 வயதிலே முதன் முதலில் நீருக்கடியில் டைவ் செய்த உமா மணி, அன்றிலிருந்து, கடல் பாதுகாப்பிற்கு பவளப்பாறைகளின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் குறித்து இடைவிடாமல் போராடி வருகிறார். இறக்கும் பவளப்பாறைகளின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டி இந்திய பவளமணியாக மாறிய அவரது கதை.

அரைசத வயதை நெருங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு வரை சென்னையின் பழமைவாத குடும்பப் பின்னணியை கொண்ட உமா மணி, நல்ல குடும்பத் தலைவி, நல்ல மனைவி, நல்ல தாய், நல்ல மகள் ஆகிய பட்டங்களை சூட்டி கொண்டிருந்தார். மாறாக அவருக்கு நல்ல ஓவியராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனா இருந்தது.

அதனை நிறைவேற்ற எண்ணிய போதெல்லாம் அவருடைய பாட்டி, நல்ல குடும்பத் தலைவியாகக் கூடிய பெண்ணிற்கு எதற்கு ஓவியக் கலை என்று தடை போட்டு, பள்ளிக்கு சென்று படிக்க மட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். உமா மணியும் அதனை ஏற்றுக் கொண்டு, டாக்டர் கணவருடன் திருமண வாழ்வை தொடர மாலத்தீவுக்கு பயணித்தார். அத்துடன் அவரது கனவை நெஞ்சுக்குள்ளே புதைத்தார்.

uma mani

காலங்கள் ஓடின. கடமைகள் பாதியை முடித்து, மகன் கல்லுாரிக்கு செல்லும் வயதாகிய பின், உமாவுக்கு கனவினை நோக்கி பயணிக்கும் எண்ணம் பிறந்தது. அவருடைய 49வது வயதில் மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கினார். அப்போது அவர் வரைந்ததெல்லாம் பூக்களின் உலகத்தினை மட்டுமே.

"என் மகன் கல்லூரிக்கு செல்லத் தொடங்கியபின் தான், ஓவியம் வரையத் தொடங்கினேன். அவற்றில் சிலவற்றை பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொண்டிருந்த மாலத்தீவில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸின் இயக்குனர் முரியல் ஷ்மிட்டிடம் காட்டினேன். ஷ்மிட் ஒரே கருப்பொருளில் 30 கேன்வாஸ்களை வரைந்து கேட்டார். மேலும், எனது படைப்புகளை காட்சிப்படுத்துவதாகவும் உறுதியளித்தார். அதனால், தினமும் ரோஜாக்களை வரைய ஆரம்பித்தேன்.”

என் தோழியின் 50வது பிறந்தநாளுக்கு நான் வரைந்த ரோஜா பூ ஓவியத்தை பரிசாக கொடுத்தேன், என்று உமாமணி கூறினார்.

அதுநாள் வரை மாலத்தீவில் கடல் சூழ் பரப்பில் வசித்து வந்தாலும், அவருக்கு நீருக்குள் செல்வது என்பது பற்றிய எண்ணம் தோன்றியதே இல்லை. 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் போது, அவர் பிரான்சைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பாஸ்கேல் சாபோனெட்டினின் பவளப்பாறைகள் பற்றிய ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து நடந்த கேள்வி பதில் அமர்வில், பவளப்பாறைகளின் பயன்கள் பற்றியும், கடலுக்கு அவை செய்யும் நன்மைகள் பற்றியு கற்றுக்கொண்டார்.

அன்றிலிருந்து அவர் பூக்கள் வரைவதை கைவிட்டு, அதற்கு பதிலாக பவளப்பாறைகளை வரைவதற்கு முடிவு செய்தார். மாலத்தீவில் உள்ள மரைன் சென்டரில் அவரது ஓவியங்களை காட்சிப்படுத்தினார். நிறைய பேர் வரவில்லை. எனினும், ஓவியம் வரைவதை அவர் நிறுத்தவில்லை. ஓவியக்கலையில் எந்த அடிப்படைப் பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. அதனால், சென்னைக்கு விடுமுறைக்கு வந்திருந்தபோது, அவரது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தில் கலைப் படிப்பில் சேர்ந்தார்.

uma mani

உமாமணி பார்வையை மாற்றிய பார்வையாளர்!

விவாண்டா மாலத்தீவில் உமாமணியின் ஓவியக் கண்காட்சி நடந்த போது, ஒரு பார்வையாளரின் கருத்து அவரின் பார்வையை என்றென்றும் மாற்றியது.

"நீங்கள் பார்த்திராத ஒன்றை எப்படி கலை வடிவில் கொண்டு வர முடியும் என்று இந்திய பெண் ஒருவர் வெகு சாதாரணமாக என்னிடம் கேட்டார். அவர் சொன்ன விதத்தில் நான் கோபமடைந்தேன். ஆனால், அதில் நிறைய உண்மை இருப்பதை உணர்ந்தேன். நான் ஒருபோதும் நீந்தியதுமில்லை அல்லது நீருக்கடியில் சென்றதுமில்லை. நான் வரைந்த பவளப்பாறைகள் அனைத்தும் படங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து வந்தவையே..." என்று உமாமணி நினைவு கூர்ந்தார்.

அச்சம்பவத்திற்கு பிறகு அதைப் பற்றி தீவிரமாக சிந்தித்த அவர், அவரது நண்பரான டாக்டர் அமல் அலியிடம் டைவ்விங் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார். அவர் மாலத்தீவின் முதல் பெண் நீர்மூழ்கி வீராங்கனையான ஷஹீனா அலியிடம் உமா மணியை அறிமுகப்படுத்தினார். உமாமணிக்கு நீச்சல் கற்றுக்கொள்வது முதல் சவால். 2014ம் ஆண்டு, முதல் படியை கடக்க வேண்டும் என்ற உறுதியுடன், சென்னைக்கு வந்து 15 நாள் நீச்சல் பயிற்சியில் சேர்ந்தார். பயிற்சி முடிந்து அவர் மாலத்தீவுக்கு திரும்பியதும், அவரது மகன் உமாமணியின் 25வது திருமண ஆண்டு பரிசாக ஸ்கூபா-டைவிங் பயிற்சியில் சேர்த்துவிட்டார்.

"டைவ்விங்கின் முதல் நாள், நான் நன்றாக செய்யவில்லை. இரண்டாவது நாளில், முயற்சியை கைவிடலாம் என்று நினைத்தேன். பயிற்சியாளரான யாமின், முயற்சியை கைவிடுவது தவறான முடிவு என்றும், தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும், அப்படியும் முடியவில்லை என்றால், நீங்கள் வெளியேறலாம் என்று ஆலோசனை கூறி ஊக்குவித்தார். மனதளவில் தயாராக வேண்டும் என்பதால், ஒரு மாதம் பயிற்சி எடுத்து கொண்டேன்.”

”முதல் டைவிங்கில், நீருக்கடியில் கண்ட காட்சிகள் மனதை மகிழ்வித்தன. பவளப்பாறைகளும் நிறைய மீன்களும், ஒரு கடல் பாம்பும், ஒரு சுறா குட்டியையும் பார்த்தேன்," என்ற உமாமணி அவர் கண்ட கடலின் மாயாஜால உலகத்தை கேன்வாசுக்கு மொழிபெயர்க்க தொடங்கினார்.

அவரது கலை இப்போது வெவ்வேறு பார்வைகளுடனும், நுண்ணறிவுகளுடன் உயிர்ப்பித்திருந்தாலும், மாலத்தீவு மரைன் சிம்போசியத்தில் அவரது ஓவியங்களை காட்சிப்படுத்தியது திருப்புமுனையை ஏற்படுத்தியது. பவளப்பாறைகளின் முக்கியத்துவம், கடல் ஆராய்ச்சியின் பல்வேறு அம்சங்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இறக்கும் திட்டுகளின் நிலை ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்களிடமிருந்து அவர் நேரடியாகப் புரிந்துகொண்டார். அப்போது, கிடைத்த வேகத்திலும், ஆசையிலும் அவரது மகன் பரிசளித்த கேமராவை எடுத்துக் கொண்டு தண்ணீருக்கு அடியில் படமெடுக்க முடிவு செய்தார். ஆனால், அதை அவரால் திறம்பட செய்து முடிக்க முடியவில்லை.

"எனக்கு திரைப்படத் தயாரிப்பு பற்றி எதுவும் தெரியாது. சொல்லபோனால், நான் சவுண்ட்டே இல்லாமல் படமெடுத்து வந்தேன். அது ஒரு பழைய சார்லி சாப்ளின் படம் போல இருந்தது," என்று சிரித்துக்கொண்டே பகிர்ந்தார்.

பவள பெண்மணியான உமா மணி!

அழிந்து கொண்டிருக்கும் பவளப்பாறைகள் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற அவருடைய முயற்சியில் தோல்வியில் முடிந்தது. இருப்பினும், மனம் தளராமல், பல ஆவணப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு உதவிக் கேட்டார். ஆனால், அவருக்கு எந்தவித உதவியும் கிட்டவில்லை. பின்னர், அவர் என்டிடிவி அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தார். அங்கு அவருக்கு திரைப்பட தயாரிப்பாளர் பிரியா துவாசேரியின் எண் வழங்கப்பட்டது. உமாமணி அவரைத் தொடர்புகொண்டு, பவளப் பாறைத் தோட்டங்களின் ஓவியக் கண்காட்சிகள் குறித்த ஆவணப்படத்தை எடுக்க முடியுமா என்று கேட்டார்.

அவர்களின் உரையாடல்கள் தொலைபேசியிலும் ஸ்கைப்பிலும் தொடர்ந்தன. பின், அவர்களது நேருக்கு நேர் சந்திப்பு 2017ம் ஆண்டு நடைபெற்றது.

"பவள பாறைகள் குறித்த ஆவணப்படம் எடுக்க பிரியாவிடம் கேட்டேன். ஆனால், பிரியாவுக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவர் என்னைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க விரும்பினார். என் கதையைக் கேட்ட நிமிடத்தில் அவர் என்னிடம் 'உங்களது கதையை ஆவணப்படுத்துவது முக்கியமானது. ஏனென்றால், என் வயதுடைய பெரும்பாலான பெண்கள் பல விஷயங்களைச் செய்வதில்லை' என்றார். பின், அவரது எண்ணம் சரியானது என்று உணர்ந்தேன்," என்றார்.

இருப்பினும், உமாமணி ஆவணப்படம் எடுக்க ஒப்புக்கொள்ள சிறிது நேரம் பிடித்தது. பவளப்பாறை தோட்டங்கள் பற்றிய ஆவணப்படமா? பவளப் பெண் குறித்த ஆவணப்படமா? என இரண்டு எண்ணங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால் இறுதியில், பிரியா வெற்றி பெற்றார். 2018ம் ஆண்டு கிழக்கு கடற்கரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் படப்பிடிப்பைத் தொடங்கினர்.

"கடலில் அதிக அளவு கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் ஒரே நாளில் நோய்வாய்ப்பட்டேன். ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், உரங்களுடன் பிளாஸ்டிக், மற்றும் கழிவுநீர் நிறைய கடலுடன் கலந்து இருக்கிறது. டூத் பிரஷ்ஷில் பெயர் எழுதி, குப்பைத் தொட்டியில் போட்டால் அது கடலில் போய் சேரும் என்று நினைக்கிறேன். பூமியில் வாழ்வதற்கு பவளப்பாறைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால், அவை இறந்துகொண்டிருக்கின்றன," என்று விவரித்தார் அவர்.

விழிப்புணர்வே தீர்வுக்கான திறவுக்கோல்!

நீருக்கடியில் வாழ்வதற்கான செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை பவளப்பாறைகள் வழங்குகின்றன. சக்திவாய்ந்த அலைகளிலிருந்து கடற்கரையை பாதுகாக்கின்றன. 2004ம் ஆண்டு சுனாமி இந்தியாவை பாதித்த அளவுக்கு மாலத்தீவினை பாதிக்கவில்லை என்பதை நினைவூட்டிய பகிர்ந்த உமாமணி, ஏனெனில் பவளப்பாறைகள் ஒரு தாங்கலாக செயல்பட்டு நீர் அழுத்தத்தை குறைத்தது என்றார். ஏற்கனவே, பவளப்பாறைகள் குறித்த புரிதல்களை கொண்டிருந்த அவர், பவளப்பெண்ணை உருவாக்கும் பணியில் இன்னும் அதிகம் கற்றுக்கொண்டுள்ளார். ஆவணப்பட தயாரிப்பின் போதே முதன்முதலில் உமாமணி இறந்து கொண்டிருக்கும் பவளப்பாறைகளை கேன்வாஸில் வரைந்தார்.

2019ம் ஆண்டு "பவளப்பெண்" ஆவணப்படம் வெளியான பிறகு, அவர் படம் மற்றும் அவரது அனுபவங்களைப் பற்றி பேச குழுவுடன் பயணம் செய்தார். தமிழ்நாட்டின் திண்டுக்கல்லை மையமாகக் கொண்ட உமாமணி, கடல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் பேசுகிறார். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை குறை சொல்லக்கூடாது என்றும் அவர் நம்புகிறார்.

uma mani
"தனிமனிதர்களாகிய நாம்தான் குப்பைகளை தண்ணீரில் வீசுகிறோம். நான் மாணவர்களுடன் பேசும்போது, அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருகிறார்கள். மேலும், அவர்கள் புவியை ஒரு சிறந்த கிரகமாக மாற்றுவதில் முக்கிய பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.”

கழிவுகளை பிரித்து, பொறுப்புடன் அகற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. கடலின் நிலைமைகளை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி முடிவில்லாமல் பேச முடியும். உங்கள் சொந்த வழியில், கடலின் நன்மைக்கென ஏதாவது செய்யுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

தமிழில்: ஜெயஸ்ரீ