Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நகரவாசிகளே வாங்க விவசாயம் பழகலாம்: இயற்கை காய்கறிகள் விநியோகிக்கும் ’மை ஹார்வெஸ்ட்’

வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் என இயற்கை விவசாயத்திற்கு புத்துயிர் தந்த இயற்கைக் காதலி அர்ச்சனா ஸ்டாலின், வயலுக்கே சென்று விதைப்போம் என்பதை அடிப்படையாக வைத்து ’மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ என்ற புதிய பிரிவை தொடங்கியுள்ளார். 

நகரவாசிகளே வாங்க விவசாயம் பழகலாம்: இயற்கை காய்கறிகள் விநியோகிக்கும் ’மை ஹார்வெஸ்ட்’

Tuesday October 09, 2018 , 6 min Read

"

அப்பச்சியும், ஆத்தாவும் வயலுக்கு களை எடுக்க சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வருகிற வழியில் பிடுங்கி எடுத்து வரும் பயத்தங்காயும், உளுத்தங்காயும் அடுப்பில் போட்டு வேகவைக்கும் போது மணம் பக்கத்து தெருக்கள் வரை வீசும். இது போக வருகிற வழியில் ஆற்றோரம், குளக்கரையோரம் வயல்வெளியோரம் தழையதழைய தொங்கிய மரக்கிளைகளில் இருந்து இலந்தைப்பழம், நாவல்பழம், கொடுக்காப்புளி, புளியங்காய் என்று சும்மாடு துணியில் சுற்றி எடுத்து வந்து தின்பதெல்லாம் இன்று ஒரு சுகமான நினைவுகளாக மட்டுமே இருக்கின்றன.

இன்றும் இவை அனைத்தும் சந்தைகளில் கொள்ளை காசிற்கு கிடைக்கின்றன ஆனால் இயற்கையாக விளையும் காய், கனிகளில் இருக்கும் மணமும், சுவையும் கிடைக்கவே இல்லை.

\"மை

மை ஹார்வெஸ்ட் பார்ம் நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின்


விளைச்சல் விளைச்சல் என்று உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் அள்ளி தெளித்ததை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட வயல்தாய் இன்று விளைச்சலை தர முடியாத மலடியாகிவிட்டாள். விவசாயம் செய்தவர்களும் லாபமில்லை என்று விவசாயத்தை அவர்கள் தலைமுறையோடு நிறுத்திக் கொள்ள தொடங்கிவிட்டனர். இதன் விளைவைத் தான் இப்போதே நாம் சந்திக்கிறோம். 

பருவத்தில் மட்டுமே கிடைக்கும் காய், கனிகள் இன்று எல்லா நாட்களிலும் கிடைக்கிறது என்றால் எல்லாம் ஹைபிரிட் மற்றும் உரங்களின் மாயாஜாலம் தவிர வேறெதுவும் இல்லை. ஆரோக்கியமான உணவு பொருட்கள் குறைவான விலையில் கிடைத்த போது அதனை உதாசினப்படுத்தி விட்டு இன்று மலிந்து விட்ட நோய்கள், சத்துக்கள் குறைபாட்டில் இருந்து தப்பிய அதே இயற்கை விவசாயப் பொருட்களை நாடி ஒடிக்கொண்டிருக்கிறோம்.

பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா அக்மார்க் சென்னைப்பெண்ணாக வளர்ந்தாலும் பூர்வீகமான தேனியின் மண்மணம் அவருக்குள் இருந்தே வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ ஜியோ இன்பர்மேடிக்ஸ் படித்த போதே நண்பர்களுடன் இணைந்து கிராமங்களுக்கு புத்துயிரூட்டுவதற்காக BUDS என்ற தன்னார்வ அமைப்பை உருவாக்கி செயலாற்றி வந்துள்ளார். 

படிப்பை முடித்த கையோடு தன்னுடன் படித்த ஸ்டாலின் என்பவரையே கரம் பிடித்த அர்ச்சனா பிரபல மென்பொருள் நிறுவனமான டிசஎஸ்சில் பணியாற்றி வந்துள்ளார். அர்ச்சனாவின் கணவர் ஸ்டாலின் தொழில்முனைவு கனவோடு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

2 ஆண்டுகள் இப்படியே நகர அலுவலகப் பணி வேண்டாம் கணவன், மனைவி இருவரும் இணைந்து தொழில்முனைவராகலாம் என்று எண்ணி ஸ்டாலினின் சொந்த ஊரான விருதுநகருக்கே திரும்பியுள்ளனர். 

கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரின் விருப்பமாக இருந்ததால் நகரத்து வாழ்க்கையை விட்டு விட்டு சொந்த ஊர் சென்றோம் என்கிறார் அர்ச்சனா.
\"மை

மை ஹார்வெஸ்ட் பார்ம் குழ


விருதுநகரில் 3 ஆண்டுகள் ஜியோ இன்பர்மேடிக்ஸை அடிப்படையாக வைத்து ஒரு நிறுவனம் தொடங்கிசெயல்பட்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் விருதுநகர் மக்கள் சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை கையில் எடுத்துள்ளனர் இவர்கள். அங்கு தண்ணீர் மிகப்பெரிய பிரச்னையாக இருந்ததால் ஊரணிகளை சீரமைப்பது, சீமைக்கருவேல மரங்களை அழிப்பது, மரங்களை நடுவது, சீமைக்கருவேல மரத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளனர். இயற்கையை நேசிக்கும் நண்பர்களாக மாறிப்போன அர்ச்சனா, ஸ்டாலினிற்கு இயற்கை விவசாயம் பற்றிய ஆர்வமும் அப்போது தான் ஊற்றெடுத்திருக்கிறது.

விருதுநகரில் எங்கள் வீட்டின் மாடியிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினோம். விதையை மண்ணில் பதித்து பார்த்து பார்த்து நீர் விட்டு வளர்க்கும் போது விதையில் இருந்து வெளிவரும் செடி வளர்ந்து பூ பூத்து காய் காய்த்து அதை நம் ஸ்பரிசம் தொடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார் அர்ச்சனா. 

தொழில்முனைவு காரணமாக நாங்கள் மீண்டும் சென்னைக்கே இடம்பெயர்ந்து விட்டோம் ஆனால் இன்றும் என்னுடைய மாமனார், மாமியார் மாடித்தோட்டத்தில் விளையும் 80 சதவீத காய்கறிகளையே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் அர்ச்சனா.

சென்னையில் வாழும் பலருக்கும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும், விவசாய அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே சமயம் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்கள் என்று ஆர்கானிக் கடைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கி இருந்தன. இவை உண்மையிலேயே இயற்கை முறையில் விளைவிக்கப்படுபவை தானா என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தது, இந்த சந்தேகத்தை போக்க நீங்களே காய்கறி செடிகளை வளர்த்துப் பாருங்கள் என்ற எண்ணத்தை ‘மை ஹார்வெஸ்ட்’ என்ற தனது ஸ்டார்ட் அப் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் அர்ச்சனா.

கடந்த ஆண்டு ‘மை ஹார்வெஸ்ட்’ தொடங்கிய போது சென்னைவாசிகளிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. சொந்தமாக காய்கறி செடி வளர்க்க விரும்புபவர்களுக்கு நாங்களே மாடித்தோட்டம் அமைத்து தருவது, மாடித்தோட்டத்திற்கான பொருட்களை வழங்குவது உள்ளிட்டவற்றை செய்து வந்தோம். 

அடுத்தது என்ன என்ற கேள்வியில் தான் ஒரு புள்ளியில் தொடங்கும் கோலம் முழுமைபெறுகிறது. நகரத்தில் இடவசதி இல்லாததால் மாடியில் விவசாயம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதன் அடுத்த கட்டமாகவே நேரடியாக விளைநிலத்திலேயே விவசாயம் என்பதை தொடங்கினோம் என்கிறார் அர்ச்சனா. 

விவசாயிகளுடன் கைகோர்த்து காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து நாங்களே கடைகளுக்குக் கொண்டு விற்பனைக்கு கொடுத்தோம். ஆனால் அதிலும் சில அசவுகரியங்கள் இருந்தன, கடைக்காரர்கள் காய்கறி வேண்டாம் என கூறிவிட்டால் சிரமம், விலையில் ஏற்ற இறக்கங்கள் என பல சவால்களை சந்தித்தோம். இந்த முறை கைகொடுக்காது என்பதால் கூட்டு விவசாய முறையை அடிப்படை தாத்பரியமாக வைத்து ’மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸ்’ என்பதை தொடங்கியதாக கூறுகிறார் அர்ச்சனா.

கடந்த ஜூன் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மை ஹார்வெஸ்ட் ஃபார்மிஸ்-ன் முக்கிய நோக்கமே நகர வாசிகளை விவசாயத்தோடு ஒருங்கிணைப்பது, ரசாயனம் தெளிக்கப்படாத உணவை அவர்கள் உட்கொள்ள வேண்டும், ரசாயன கலப்பில்லாத காய்கறிகள் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் நேரடியாக உணர்வதற்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கும். 

மற்றொரு புறம் பல ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு சரியான வருமானம் கிடைப்பதில்லை. முப்போகம் விளைவித்த நிலை மாறி தற்போது 2 போகம் மட்டுமே விளையும் விவசாயப் பொருட்களை விற்று கிடைக்கும் சொர்ப்ப தொகையை வைத்து குடும்பம் நடத்த முடியாத சூழலில் உள்ளனர். 

சில விவசாயிகள் இயற்கை முறை விவசாயம் செய்ய விரும்புகின்றனர் ஆனால் அந்த விவசாயப் பொருட்களுக்கான விற்பனை சந்தையில் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி அவர்களுக்கு இருக்கிறது. எனவே விவசாயிகள், பயன்பெறும் மக்கள் இருவரையும் இணைக்கும் ஒரு திட்டமாகவே மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் உருவாக்கப்பட்டது என்கிறார்.
\"படஉதவி

படஉதவி : முகநூல்


ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 35 குடும்பங்களுக்கான காய்கறிகளை விளைவிக்க முடியும் இதனால் விவசாயிக்கும் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும், நகரவாசிகளுக்கு விவசாய அனுபவத்தோடு புத்துணர்ச்சியான இயற்கை காய்கறிகள் கிடைக்கும் என்பதே மை ஹார்வெஸ்ட் பார்மிசின் ஆணிவேர் என்கிறார் அர்ச்சனா.

மை ஹார்வெஸ்ட் ஃபார்மில் எப்படி சேரலாம்?

நிலத்தில் நீங்களே விவசாயம் செய்து பாருங்கள் என்ற இந்த திட்டத்தில் சேர மாத சந்தாவாக ரூ.3000 செலுத்த வேண்டும். திட்டத்தில் சேர்ந்த குடும்பம் ஒவ்வொன்றிற்கும் சுமார் 1000 சதுர அடியில் நிலம் ஒதுக்கப்படும் இந்த நிலத்தில் என்னென்ன இயற்கை காய்கறிகள், கீரை வகைகளை விளைவிக்க முடியும் என்ற ஒரு பட்டியல் கொடுக்கப்படும். 

அந்தப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் காய்கறி மற்றும் கீரைகளின் விதைகளை விதைத்து வாரந்தோறும் சந்தாதாரர்களின் வீடுகளுக்கே விளைப்பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதில் நல்ல விஷயங்கள் என்னவென்றால் விதையை விதைப்பது பராமரிப்பது போன்றவற்றையும் அந்த குடும்பத்தினரே செய்யலாம். 

தினமும் பார்த்து கொள்ள முடியாதே என்ற கவலை வேண்டாம், விவசாயி அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்கள் தோட்டத்தை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்து பராமரித்து விளைச்சலை கொடுப்பார். அதே போன்று இங்கு விளைவிக்க முடியாத இயற்கை காய்கறிகளை சந்தாதாரர்கள் விரும்பும் பட்சத்தில் இயற்கை விவசாயிகளிடம் இருந்து ‘மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸ்’ 'My Harvest Farms' கொள்முதல் செய்து வாரம் அனுப்பும் காய்கறிகளோடு சேர்த்து வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடும். விதை முதல் வீடு வரை எங்கள் பொறுப்பு என்கிறார் அர்ச்சனா.

நகரத்து விவசாயிகளை உருவாக்க வேண்டும், நகர மக்கள் சேற்றில் கை வைத்து மண்ணோடு உறவாட வேண்டும் என்ற முதல் திட்டமே வெற்றி பெற்றுள்ளது. சென்னையைச் சேர்ந்த 35 குடும்பங்கள்ள சந்தா செலுத்தி மை ஹார்வெஸ்ட் பார்மிசில் இணைந்துள்ளனர் அவர்களுக்கான காய்கறி மற்றும் கீரை வகைகள் விதைக்கப்பட்டுள்ளன என்கிறார் அர்ச்சனா. 

இயற்கை விவசாயம் என்பதால் எங்களின் விவசாயத் தோட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் இயற்கை சார்ந்தே பெயர் வைத்துள்ளோம். திருவள்ளூர் அருகே ஒரு கிராமத்தில் சுமார் 2.5 ஏக்கரில் தொடங்கப்பட்டுள்ள முதல் பண்ணைக்கு வேம்பு என்று பெயரிட்டுள்ளோம், அடுத்து மகிழம் திட்டம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறார் அர்ச்சனா. 

சென்னை புறநகர் பகுதியில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் விவசாயப் பண்ணை வார இறுதி நாட்களிலோ அல்லது விரும்பும் நேரங்களிலோ சந்தாதாரர்கள் நேரில் வந்து தங்களது தோட்டத்தை பார்த்து வேலை செய்துவிட்டு செல்லலாம் என்பதை மையமாக வைத்து அடுத்தடுத்து பண்ணைத் தோட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் அர்ச்சனா.

விவசாயத்தில் பிழைக்க வழியில்லை என்று விவசாயத்திற்கு தங்கள் தலைமுறையோடு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் விவசாயிகளுக்கு மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் நிரந்தர மாத வருமானத்தை கொடுக்கிறது என்கிறார். சந்தா தொகையில் இருந்தே விவசாயிகளுக்கும் பங்கு அளிக்கப்படுவதால் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 12 ஆயிரம் அவர்களால் சம்பாதிக்க முடியும் மேலும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளும் உருவாகும். இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் விவசாய நிலம் ரசாயனம் தெளிக்கப்படாமல் மண்வளமும் காக்கப்படுகிறது.

\"படஉதவி

படஉதவி : முகநூல்


நண்பர்கள் நிதியுதவி மற்றும் சுயமுதலீட்டு முறையில் தொடங்கப்பட்டுள்ள மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்சை மிகப்பெரிய திட்டமாக கொண்டு செல்ல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் அர்ச்சனா. ஆயிரம் விவசாயிகளையாவது இயற்கை முறை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறது மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்.

விளைநிலம் வைத்துக் கொண்டு விளைச்சல் செய்ய முடியாத நிலையில் உள்ள விவசாயிகளை அணுகி அவர்கள் நிலத்தை மீண்டும் விளைநிலமாக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர் இவர்கள்.

விவசாயம் பற்றிய புரிதல் இல்லாமலே இந்த தலைமுறை மண்ணோடு உள்ள தொடர்பற்று போய்விடக்கூடாது என்பதற்காக அர்ச்சனா, ஸ்டாலினின் மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் எடுத்துள்ள புதிய முயற்சி நகர வாசிகளுக்கும் கிராமம் என்றால் எப்படி இருக்கும் விவசாயம் எப்படி நடக்கிறது, விவசாயத்திற்கு என்ன தேவை உள்ளிட்டவற்றை நேரடியாக அறியும் அனுபவத்தையும் தருகிறது. 

விவசாயம் மட்டுமின்றி கால்நடைகள் பராமரிப்பையும் கண்கூடாக பார்க்க முடியும் சுருக்கமாக சொன்னால் உங்களை கிராமத்திற்கே கொண்டு சென்று இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ வைப்போம் என்று உறுதி அளிக்கிறார் அர்ச்சனா.

மகாத்மா காந்தி கூறியது போல “தன்நிறைவு கிராமங்களை உருவாக்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்து செயல்பட்டு வருகிறார் அர்ச்சனா ஸ்டாலின். கிராமங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்றால் விவசாயம் இல்லாமல் அதை செய்ய முடியாது அதே போன்று கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் கிராமங்களுக்கே அழைத்து செல்ல வேண்டும் என்று கூறுகிறார் இந்த இயற்கை காதலி.

"