கட்டாயத் திருமணத்தை தவிர்க்க வீட்டை விட்டு ஓடி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆன சஞ்சு ராணி!
மீரட் பகுதியைச் சேர்ந்த சஞ்சு ராணி குடும்பத்தினர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறி பகுதி நேரமாக வேலை பார்த்து சிவில் சர்வீஸ் தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு ராணி வர்மா. 2013-ம் ஆண்டு இவரது அம்மா உயிரிழந்துள்ளார். அதன் பிறகு சஞ்சு ராணியின் படிப்பை நிறுத்திவிட்டு அவருக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவருக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. இருப்பினும் கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதிலிருந்து தப்பிக்க சஞ்சு ராணி வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுள்ளார்.
குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில், மேற்படிப்பு படிக்க அவரிடம் பணம் இல்லை. எனவே பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துள்ளார். அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு பட்டப்படிப்பு முடித்தார். அதுமட்டுமின்றி சிவில் சர்வீஸ் தேர்விற்கும் தயாராகி வந்தார்.
உத்திரப்பிரதேச சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய இவர் வெற்றி பெற்றுள்ளார். வணிக வரித் துறை அதிகாரியாக பணியில் சேர உள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது,
“நான் 2013ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். என் படிப்பையும் விட்டுவிட்டேன். என்னிடம் பணம் இல்லை. குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கத் தொடங்கினேன். தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றினேன். சிவில் சர்வீஸ் தேர்விற்கும் என்னைத் தயார்படுத்திக் கொண்டேன்,” என்று கூறியுள்ளார்.
சஞ்சு ராணி தனது இலக்கை எட்டுவதில் உறுதியாக இருந்தார். இதற்காக மிகவும் துணிச்சலான முடிவுகளை எடுத்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுள்ளார்.
தனது குடும்பத்தை சம்மதிக்கை வைக்க எவ்வளவோ முயன்றும் பலனில்லை என்கிறார்.
“என் அம்மா உயிரிழந்த பிறகு குடும்பத்தினர் என்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்கள். என்னுடைய லட்சியத்தை அவர்களுக்கு புரியவைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் பலனில்லை. என்னுடைய லட்சியத்தில் சமரசம் செய்துகொள்ள விரும்பாமல் என் வழியை நானே தேர்வு செய்தேன்,” என்கிறார் சஞ்சு ராணி.
தகவல் உதவி: டைம்ஸ் நௌவ் நியூஸ்