திருநெல்வேலி டூ சிலிகான்வேலி: ஜீரோவில் தொடங்கி 2 நிறுவனங்கள் நிறுவிய நெல்லை இளைஞர்!

நெல்லையில் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த தங்கவேல் புகழ், தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு அவர்களின் தொழிலை பதிவு செய்ய, லோகோ உருவாக்க, இணைய தள பக்கம் உருவாக்க, கணக்கு வழக்குகளை பராமரிக்க என வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.

திருநெல்வேலி டூ சிலிகான்வேலி: ஜீரோவில் தொடங்கி 2 நிறுவனங்கள் நிறுவிய நெல்லை இளைஞர்!

Saturday May 15, 2021,

5 min Read

"2012-13ல் நான் என் தினசரி செலவுகளுக்குக்கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். அது என் கல்லூரி நாட்கள். என் நண்பனுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் சமையல் குழுவுடன் பகுதி நேர ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஆள் இல்லாததால் சாப்பாடு பரிமாறும் பணியை செய்தேன். அப்போது பரிமாறும்போது சிறிதளவு சாம்பார் ஒருவர் மீது தெளித்துவிட்டது, அதற்கு அவர் ‘அறிவு இருக்கா...’ என கடுமையான சொற்களால் திட்டினார். அன்று இரவு முழுவதும் அழுதேன். ஆனால் அதோடு ஒரு முடிவையும் எடுத்தேன். ’இதுவே எனக்கு சிறந்த பாடம், எந்த ஒரு சூழலையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் வேண்டும், ஒரு நாள் என் கடும் முயற்சியால் நானும் ஒரு பில்லியனர் ஆவேன் என்ற கனவை காணத்தொடங்கினேன்...’


இப்படித் தன் முகநூலில் தன் வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தை விவரித்து எழுதியிருந்தவர் தங்கவேல் புகழ்.


திருநெல்வேலியில் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த 27 வயதான இளைஞர் தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு அவர்களின் தொழிலை பதிவு செய்ய, லோகோ உருவாக்க, இணைய தள பக்கம் உருவாக்க, அவர்களின் கணக்கு வழக்குகளை பராமரிக்க என வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.


திருநெல்வேலி டூ சிலிக்கான்வேலி என்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பயோ டெக் பொறியியல் பட்டதாரி தங்கவேல் புகழ்.


சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியால் தனது பொறியியல் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். சிறுவயதில் இறந்த தந்தை ஓர் தொழில் முனைவோர் ஆக விரும்பியதையும், அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் முன்னோடியாக இருந்து, உதவி புரிந்து அவர்களை வாழ்வில் உயர்த்துவதை லட்சியமாகக் கொண்டிருந்தார் என்பதை அறிந்த தங்கவேல் புகழ், தனது தந்தையின் கனவை நனவாக்குவதே தனது வாழ்நாள் லட்சியம் எனக் கொண்டார்.

புகழ்1

தங்கவேல் புகழ், நிறுவனர் DigiNadu.

இதுகுறித்து அவர் நம்மிடம் தெரிவித்ததாவது,

”நான் பட்டப் படிப்பை முடித்ததும், சென்னையில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் சில மாதங்கள் பணி புரிந்தேன். அப்போதுதான் இது எனக்கான பாதையல்ல என்பது புரிந்தது. அந்நேரத்தில் எனது உறவினரின் மூலம் எனது தந்தையின் லட்சியம் தெரியவந்தது. இதையடுத்து, நானும் ஓர் தொழில் முனைவோராக மாற வேண்டும் என முடிவு செய்தேன். மேலும், புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு ஓர் வழிகாட்டியாக மாறி, அவர்களின் தொழில் வெற்றியடைய வழிகாட்டியாக வாழ வேண்டும் எனவும் முடிவெடுத்தேன்,” என்கிறார்.

இதையடுத்து ஒரு சிறிய விளம்பர நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்த தங்கவேல், வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தொழில் நுணுக்கங்களைக் கற்றுள்ளார்.


வலைத்தளங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், விற்பனை பிராண்டிங், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை குறித்து நன்கு ஓர் புரிதல் ஏற்பட்டதால், பிசினஸ் கன்சல்ட்டண்ட் ஆக சென்னையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவரிடம் அப்போதே 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தொழில் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுச் சென்றுள்ளனர். இதையடுத்து, 2019ஆம் ஆண்டு தனது சொந்த ஊரில் தொழில் தொடங்க திட்டமிட்டு திருநெல்வேலியில் கால் பதித்துள்ளார்.


நெல்லையில் தொடங்கிய பயணம்

நான் எனது விளம்பர நிறுவனத்தைத் 2019-ல் திருநெல்வேலியில் தொடங்கினேன். 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன், எங்கள் வளர்ச்சிப் பயணம் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. எங்களை நாடி வந்த வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்கினோம். இந்நிலையில்தான் உலகையே உலுக்கிய கொரானோ எங்கள் தொழிலையும் முடக்கியது.

இந்த கொரானோ ஊரடங்கு நேரத்தில் எங்களின் கணக்கு வழக்குகளை பராமரிப்பதில் ஓர் பெரிய சுணக்கம் ஏற்பட்டது. நான் இதுகுறித்து எனது மற்ற தொழில்முனைவோர் நண்பர்களிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் இதேபோன்று ஓர் பிரச்னை இருந்தது தெரியவந்தது. உடனடியாக எனக்கு ஓர் புதிய சிந்தனை உதயமானது. நாம் ஏன் கணக்கியல் சேவைகளை வழங்கும் ஓர் புதிய நிறுவனத்தைத் தொடங்கக் கூடாது எனச் சிந்தித்தேன்.

சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையில் எனக்கு நல்ல வலுவான அனுபவம் இருந்ததால், கணக்கியல் பின்னணியுடன் ஓர் இணை நிறுவனரைத் தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் அதிர்ஷ்டவசமாக, வினோத் பாபுவை நான் சந்தித்தேன். அவர் ஏற்கனவே திருநெல்வேலியில் 600-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாக ஒரு கணக்கியல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


இதையடுத்து, இருவரும் இணைந்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, “Let’s Simplify” என்ற தாரக மந்திரத்தை இலக்காகக் கொண்டு, ஓரு கணக்கியல் மற்றும் வரி சேவைகளை வழங்கும் "TaxNadu.com" என்ற ஓரு நிறுவனத்தைத் தொடங்கினோம்.

puhal

TaxNadu நிறுவனர் வினோத் பாபுவுடன், இணை நிறுவனர் தங்கவேல் புகழ்.

வினோத்பாபு படிப்படியாக வாழ்வில் முன்னேறி, இன்று தொழில் முனைவோர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் ஒரு நல்ல நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். அவர் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காக நெல்லை கிங்க்ஸ் குரூப் நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர் திரு.முகமது ரியாஸ் அவர்களை குறிப்பிடுகிறார்.


பொதுவாக வினோத்பாபு ஒவ்வொரு வேலையை செயல்முறை படுத்துவதிலும், அதனை எளிமைப்படுத்துவதிலும் சிறந்தவர். நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு மிகத் தெளிவாக பயிற்சி அளிப்பார். பல குடும்பங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். TaxNadu.com வளர்ச்சிக்கு அவரே அடித்தளம், என்கிறார் தங்கவேல்.


நிறுவனத்துக்கு 3 முக்கியக் குறிக்கோள்களை உருவாக்கியுள்ளார் தங்கவேல்.


முதலாவதாக: "எளிமைப்படுத்தல்". ஆம், தொழில்முனைவோருக்கான கணக்கியல், வரி தாக்கல் மற்றும் நிறுவன பதிவு செயல்முறையை எளிமைப்படுத்துதல்.


இரண்டாவதாக: "திருநெல்வேலி 2 சிலிக்கான்வேலி" என்ற குறிக்கோளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி நகரங்களில் வாடிக்கையாளர்களை உருவாக்கி, இதன் மூலம் சிறந்த அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது,


மூன்றாவதாக: "நம்மா பசங்க மேல வாரணும்" என தென் மாவட்டங்களில் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள இளைஞர்களின் மனநிலையையும் வாழ்க்கை முறையையும் மாற்றியமைக்க வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளனர்.

புகழ்2

பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கிறார் வினோத்பாபு.

‘TaxNadu’ செயல்படுவது எப்படி?

நாங்கள் ‘TaxNadu’ திருநெல்வேலியில் தொடங்கியபோது, முதல் 60 நாட்களிலேயே எங்களுக்கு சென்னையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். எனவே நாங்கள் சென்னை தவிர கோவை, பெங்களூரூ போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களையும் குறி வைத்து எங்களின் பிசினஸை நகர்த்தி வருகிறோம்.

மேலும், புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர் தங்களுக்கு என ஓர் கணக்காளரை வைத்து தங்களின் கணக்குகளை பார்ப்பது மிகுந்த செலவளிக்கும் என்பதால் நாங்கள் மெய்நிகர் கணக்காளர் மற்றும் பகுதிநேர கணக்காளர் போன்ற புதுமையான சேவைகளை வழங்கினோம், என்றார் தங்கவேல்.

அப்போதுதான் எங்களைத் தேடி மற்றொரு தொழில் வாய்ப்பு வந்தது. எங்களிடம் தங்களின் தொழில் பதிவுக்காக வந்தவர்களுக்கு அவர்கள் நிறுவனத்துக்கான லோகோ மற்றும் வலைதளம் தேவைப்பட்டது. அதனையும் நாங்களே தயாரித்து வழங்கத் தொடங்கினோம். லோகோக்கள், வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்றவற்றுக்காக நாங்கள் "DigiNadu" என்ற நிறுவனத்தையும் தொடங்கினோம்.


மேலும், "DigiNadu. com" ன் மூலம் நாங்கள் அமேசான் விளம்பரங்கள், ஃபிளிப்கார்ட் விளம்பரங்கள், ரெடிமேட் இணையவழி வலைத்தளங்கள் மற்றும் தொழில் முனைவோருக்ககான பிற பயன்பாடுகள் போன்ற மைக்ரோ சர்வீஸ்களையும் தொடங்க உள்ளோம். தொழில் முனைவோருக்கான முழுமையான வழிகாட்டப்பட்ட அமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம், என்றார்.

புகழ்3

இவர்கள் "DigiNadu" தொடங்கிய 30 நாட்களிலேயே 10-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவித்தனர் நிறுவனர்கள். தற்போது, ​

எங்களின் ‘DigiNadu’, ’TaxNadu’ என்ற இரு நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் ஒரு அலுவலகமும், திருநெல்வேலியில் இரண்டு அலுவலகங்களும் செயல்படுகின்றன. விரைவில் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க திட்டமிட்டு வருகிறோம்.

தொழில் முனைவோர்களுக்கு உதவுவதற்காக ’Business Nadu’ என்ற யூடியூப் சேனலை மே 1 ஆம் தேதி நெல்லை மொகமது ரியாஸ் அவர்களை வைத்து தொடங்கியுள்ளதாக தெரிவித்தார் தங்கவேல்.


கல்லூரியில் பயிலும் காலத்திலேயே, ‘உன் உலகை உருவாக்கு’ ​​என்ற புத்தகத்தை எழுதியுள்ள தங்கவேல் புகழ், தற்போது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குறித்த தனது இரண்டாவது புத்தகத்தை எழுதி வருகிறார். தங்கவேல் சென்னையில் வசித்தபோது அவருக்கு தன்னம்பிக்கையூட்டிய தரணிதரன் மற்றும் தொழில் நுணுக்கங்களை கற்றுத் தந்த சுரேஷ்குமார் ஆகியோர் தான் தனது வாழ்க்கை மற்றும் தொழில் வெற்றிகளுக்கு முக்கியக் காரணம் என்கிறார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்களுக்கு திருநெல்வேலியில் இருந்தபடியே அனைத்து சேவைகளையும் வழங்கி, நெல்லையை ஓர் முக்கிய தொழில் மையமாக அமைக்கவேண்டும் என்பதே எனது வாழ்வின் லட்சியம் என்கிறார் தங்கவேல்.