'பெண்களால் முடியாது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கருவி’ – தேசிய அளவில் சாதித்த பள்ளி மாணவி!
இது பெண்களின் யுகம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். கானா பாடல் தொடங்கி விண்வெளியில் ராக்கெட்டை அனுப்பும் வரை எல்லா இடத்திலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது ஆண்களுக்கான வேலை என்று சமூகம் கட்டமைத்து வைத்த அனைத்தையும், பெண்களாலும் செய்ய முடியும் என்று நிரூபித்து, சம்பந்தப்பட்ட துறைகளில் கோலோச்சி வருகின்றனர்.
ஒருகாலத்தில் ஆண்களால் மட்டுமே நாதஸ்வரத்தை வாசிக்க முடியும் என்றிருந்தநிலை மாறி, இன்று பல பெண்கள் நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், நாதஸ்வரத்தோடு இணைந்த மேளத்தை வாசிக்க யாரும் முன்வரவில்லை. பலரும் இது தமக்கு ஒத்து வராது என்று நினைத்திருந்த நிலையில், திருவாரூரைச் சேர்ந்த சிறுமி, தேசிய அளவிலான இசைப்போட்டியில் தனித்தவில் வாசித்து முதல் பரிசை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் மணிசங்கர் – ஜெயந்தி தம்பதியினர். இவர்களின் குடும்பம், அடிப்படையில் இசைப்பாரம்பரியத்தைச் சேர்ந்தது. கோயில்களிலும், மங்கள நிகழ்ச்சிகளிலும் வாசிக்கப்படும் நாதஸ்வரத்துக்கு இணைந்த மேளத்தை வாசிக்க பெண்கள் இல்லையென்ற நிலையை மாற்ற நினைத்தார்கள் இந்த தம்பதியினர்.
இதன் எதிரொலியாக தனது மகள் அமிர்தவர்ஷினிக்கு மேளம் கற்றுக்கொடுக்க நினைத்தார்கள். அதன்படி, அமிர்தவர்ஷினி 4 வயது இருக்கும்போதே மேளம் வாசிப்பதை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தனர். காலப்போக்கில் ஆசான்கள் மூலம் மேளம் வாசிப்பதைக் கற்றுக்கொண்ட அமிர்தவர்ஷினி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் 200க்கும் மேற்பட்ட மேடைக்களில் பங்கேற்று இசைக்கச்சேரிகளில் மேளம் வாசித்து புகழ்பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பள்ளிக்கல்வித் துறையினரால் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடத்தபட்டன. இதில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, சேலத்தில் உள்ள சோனா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான இசைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் கலந்துகொண்ட அமிர்தவர்ஷினி முதல் இடம் பிடித்தார்.
அடுத்தகட்டமாக தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வான அவர், மத்திய பிரதேச மாநிலம், போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போபாலில், மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில் ‘கலா உத்சவ்’ கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய அளவிலான இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட அமிர்தவர்ஷினி, அங்கு தவில் இசைக்கருவியை வாசித்து முதல் பரிசை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பெண்களால் தவில் இசைக்கருவிகளை வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, மாணவியை பாராட்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் அமிர்தவர்ஷனிக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தார்.
மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாணவிக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
வாழ்த்துகள் அமிர்தவர்ஷனி!
படங்கள் உதவி - vikatan | தொகுப்பு: மலையரசு