3 லட்ச முதலீட்டில் தொழில் தொடங்கி இன்று மாத விற்றுமுதலாக 8 லட்சம் ஈட்டும் திருச்சி நண்பர்கள்!

ஆர்கானிக் துறையில் காலடி எடுத்து வைத்து, ஆரம்பத்தில் பல தோல்விகளைச் சந்தித்த இரு இளைஞர்கள் இன்று தங்கள் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களால் வெற்றியை வசமாக்கி லாபகரமான தொழில் முனைவோர் ஆகியுள்ளனர்.

3 லட்ச முதலீட்டில் தொழில் தொடங்கி இன்று மாத விற்றுமுதலாக 8 லட்சம் ஈட்டும் திருச்சி நண்பர்கள்!

Friday March 09, 2018,

4 min Read

திருச்சியைச் சேர்ந்தவர்கள் பாலாவும், பாலாஜியும். கோவை வேளாண் கல்லூரியில் பாலா சீனியர், பாலாஜி ஜூனியர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு இன்று இருவரையும் தொழிலில் பார்ட்னர்கள் ஆக்கியுள்ளது.

இளங்கலை முடித்து மேற்படிப்புக்காக ஐரோப்பா பறந்தார் பாலா. தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக அவர் தேர்ந்தெடுத்தது தான் ஆர்கானிக் உணவுகள் குறித்த ஆய்வு. இதற்காக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பல விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் பாலா. அப்போது அவருக்குள் ஆர்கானிக் உணவுகள் குறித்த விழிப்புணர்வும், அதற்கான சந்தை வாய்ப்பு குறித்தும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.

“முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி முடிந்ததும் என் அண்ணன் தனக்கு ஆர்கானிக் உணவுகள் வேண்டும் எனக் கேட்டார். அவருக்காக சிறிய அளவில் இயற்கை முறையில் விளைவித்த உணவுப் பொருட்களைக் குறைந்த அளவில் வாங்கிக் கொடுத்தேன். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொண்ட, மருத்துவரான என் அண்ணன் ஆர்கானிக் பொருட்கள் மீது காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்து இதையே நமது தொழிலாக்கினால் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது,”

என இந்தத் துறையைத் தான் தேர்ந்தெடுத்த கதையை விவரிக்கிறார் டாக்டர் பாலா.

பாலா மற்றும் பாலாஜி

பாலா மற்றும் பாலாஜி


ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது என முடிவெடுத்ததும், தனது கல்லூரி ஜூனியரும், தனது நண்பருமான பாலாஜியுடன் இது குறித்துப் பேசியுள்ளார் பாலா. அப்போது பாலாஜி மாமரக்கன்றுகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பாலாவுக்கோ படிப்பு முடிந்ததும் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை ஒன்று ஐரோப்பாவில் காத்துக் கொண்டிருந்தது.

இதனால், ‘எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறீர்கள் பேசாமல் கை நிறைய சம்பளம் தரும் வேலையையே பாருங்கள். தொழில் தொடங்குவது எல்லாம் தேவையற்ற வேலை’ என குடும்பத்தார் உட்பட அனைவரும் பாலாவிற்கும், பாலாஜிக்கும் அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால், தாங்கள் படித்த துறையிலேயே தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என முடிவு செய்த இருவரும், துணிந்து தொழிலில் இறங்குவது என முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக பி&பி ஆர்கானிக்ஸ் (www.bnborganics.com) நிறுவனத்தை அவர்கள் ஆரம்பித்தனர். அப்போது அவர்களுக்குள் போட்டுக் கொண்ட முதல் வாய்வழி ஒப்பந்தம், 

‘வெற்றியோ தோல்வியோ இரண்டாண்டுகள் இதே துறையில் தொடர்ந்து உழைப்பது’ என்பது தான். அதன்படி எத்தனையோ பேர் அவநம்பிக்கையான வார்த்தைகள் கூறியபோதும், அதை மூளையில் ஏற்றிக் கொள்ளாமல், தங்கள் குறிக்கோளில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

‘முதல்கட்டமாக வெறும் 30 கிலோ இட்லி அரிசி வாங்கி விற்க எங்கள் தொழிலை நாங்கள் தொடங்கினோம். ஆனால், அதனை மூன்று மாதங்களாகியும் எங்களால் விற்க முடியவில்லை. கடைசியில் இரக்கப்பட்டு என் அம்மா தான் அந்த அரிசியை வாங்கினார். 

இதனால் தொழில் தொடங்கும் முயற்சியில் நாங்கள் தோற்று விட்டதாகவே எங்களைச் சுற்றியுள்ளவர்கள் நினைத்தனர். ஆனால், எங்கள் ஒப்பந்தப்படி இரண்டு வருடம் எப்படியும் இந்தத் துறையில் போராடிப் பார்த்து விடுவது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதனால் விடாமுயற்சியாக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தோம்,” என்கிறார் பாலா.

எதிர்பார்த்தது போலவே, அவர்களின் விடாமுயற்சி வீண் போகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வியாபாரம் பெருகத் தொடங்கியது. ஆரம்பத்தில் பாலாவும், பாலாஜியும் மட்டுமே முழுமையாக தங்கள் தொழிலை கவனித்து வந்தார்கள். ஆர்கானிக் உணவுப் பொருட்களைப் பற்றி அனைத்தும் தெரிந்து கொண்ட அவர்களுக்கு, தங்கள் பொருளை சந்தையில் விற்பனை செய்யத் தேவையான மார்க்கெட்டிங் யுக்தி மட்டும் உடனே வசப்பட்டுவிடவில்லை.

ஆனாலும், தங்களது தொடர் முயற்சியில் அதனையும் அவர்கள் வசப்படுத்தினர். அதன் பலன், இரண்டாண்டுகள் அவர்களின் தொழில் அபரிமித வளர்ச்சி அடைந்துள்ளது. 

கடந்தமாத கணக்கின்படி அவர்களின் விற்றுமுதல் (turnover) ரூ.8 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது இவர்களிடம் ஒன்பது பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் விற்பனை மற்றும் பொருட்கள் கொள்முதல் பணிகளை செய்ய திருச்சி, சேலம் உள்ளிட்ட சிறிய நகரங்களில், பெண்கள் பலரை பணிக்கு ஏற்ப அமர்த்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்துள்ளனர். 

தனியாக கடை வைத்து தங்களது வட்டத்தை சுருக்கிவிடக் கூடாது என்பதாலேயே ஆன்லைனில் வியாபாரத்தை தொடங்கியதாகக் கூறுகிறார் பாலா. தற்போது பிரபல ஆன்லைன் தளங்களான அமேசான் வாயிலாகவும், தங்களது வெப்சைட் மூலமாகவும் ஆர்கானிக் பொருட்களை இவர்கள் விற்று வருகின்றனர்.

image


“உணவே மருந்து என வாழ்ந்த வம்சத்தில் வந்த நாம், இன்று மருந்தே உணவாக வாழ்ந்து வருகிறோம். இதனால் தான் காலம் கடந்து நம் முன்னோர்களின் உணவுப்பழக்க வழக்கத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற தேடல் இன்று பெரும்பான்மையான மக்களிடையே உள்ளது. இதனை தங்கள் வியாபாரத்திற்கான களமாக்கிக் கொண்ட பலர், வீதிக்கு ஒரு ஆர்கானிக் கடைகளைத் திறந்துள்ளனர். ஆனால், அவற்றில் விற்பதெல்லாம் உண்மையிலேயே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை தானா என்றால் கேள்விக்குறி தான்.”

அதனால் தான் மக்களுக்கு எதையோ விற்று லாபம் பார்த்தோம் என்று இல்லாமல், நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல பொருளைக் கொடுத்தோம் என மனதிற்கும் நிம்மதி தருவதாக எங்கள் தொழில் இருக்க வேண்டும் என நினைத்தோம். அதனாலேயே நாங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருளையும் தரம் சரி பார்த்து, அதற்கென உள்ள ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பின்னரே விற்பனை செய்கிறோம்.

”தரமான பொருட்களை விற்பனை செய்வதாலேயே எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, எங்கள் வியாபாரமும் மாத வருமானமும் நல்ல முறையில் அதிகரித்து வருகிறது,” எனக் கூறுகிறார் பாலாஜி.

தனது முனைவர் பட்டத்திற்காக பல்வேறு இடங்களில் விவசாயிகளுடன் பேசிப் பழகியதால், எந்தெந்த இடங்களில் என்னென்ன பொருட்கள் தரமானதாகக் கிடைக்கும் எனத் தெரிந்து வைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. இது தவிர புதிதாக தங்களை அணுகும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை பாலாவும், பாலாஜியும் ஆய்வு செய்கின்றனர். பின்னர் அவற்றின் சாம்பிளை ஹரியானாவில் உள்ள ஆய்வகத்தில் கொடுத்து சரிபார்க்கின்றனர். இதற்கு அதிக செலவு ஆனபோதும், தரத்தில் சமரசம் செய்து கொள்ள விரும்பாத பி&பி ஆர்கானிக்ஸ், தரச் சான்றிதழ் பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர்.

சில பொருட்கள் ஆண்டுதோறும் ஆர்கானிக் முறையில் விளைவித்தால் கிடைக்காது. ஆனால், அதை அப்படியே வாடிக்கையாளர்களிடம் கூறிவிடுகின்றனர் இவர்கள். நல்ல பொருள் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் மாதக்கணக்கில்கூட காத்திருக்கத் தயாராக இருக்கின்றனராம். எனவே, வாடிக்கையாளர்களின் பொறுமையும், உற்பத்தியாளர்களின் உண்மையும், தங்கள் பொருட்களின் தரமுமே தங்களது வெற்றிக்கான அடிப்படை சூத்திரம் என்கிறார் பாலா.

B&B Organics பொருட்கள்

B&B Organics பொருட்கள்


“ஆரம்பத்தில் விற்பனை சூடு பிடிக்காத சமயங்களில் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் நாங்கள் முட்டாள்தனமான முடிவு எடுத்துவிட்டதாகக் கருதினர். பிழைக்கத் தெரியாதவர்கள் என காதுபடவே பேசினார்கள். இதனால், நாம் தப்பான முடிவை எடுத்து விட்டோமோ என்ற சந்தேகம் எங்களுக்கும் தோன்றியது. ஆனால், எப்படியும் போராடி இந்தத் தொழிலில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியே, அந்தக் காலகட்டத்தைத் தாண்டி வர எங்களுக்கு உதவியது. தற்போது தொழிலில் எங்கள் முன்னேற்றத்தைப் பார்த்து, அன்று எங்களை ஏளனமாகப் பேசியவர்கள் எல்லாம் வெட்கித் தலைகுனிந்துள்ளனர். நாங்கள் சோர்ந்திருந்த சமயத்தில் எங்கள் குடும்பம் தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்கள் தந்த நம்பிக்கையால் தான் எங்களால் தொழிலில் ஜெயிக்க முடிந்தது,” என்றார்.

வாய்வழி விளம்பரமும், சமூகவலைதளங்களும் தான் எங்கள் வியாபாரத்திற்கு பெரிதும் உதவியது. ஆரம்பத்தில் வெறும் அரிசியோடு ஆரம்பித்த எங்கள் நிறுவனத்தில் தற்போது பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வகைகள், ஹெல்த் மிக்ஸ், தேன் என 150-க்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதால் உலகம் முழுவதும் எங்களுக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதாலேயே பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட தரமான பொருட்களையே விற்பனை செய்கிறோம். 

“தரம் தான் எங்களது தாரக மந்திரம். அதுவே எங்களது வியாபாரத்தை மென்மேலும் விரிவடையச் செய்து வருகிறது,” என்கிறார் பாலா.

ஆரம்பத்தில் ரூ.3 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த இந்த தொழிலில் இதுவரை ரூ.12 லட்சம் வரை தான் முதலீடு செய்துள்ளனர் பாலாவும், பாலாஜியும். ஆனால், தற்போது மாதம் ரூ. 8 லட்சம் வரை விற்று முதல் (turn-over) கிடைப்பதாக இருவரும் பெருமையுடன் கூறுகின்றனர்.