44,000 புதிய ஸ்டார்ட்அப்கள்; 21 லட்சம் வேலைவாய்ப்புகள் - 2025 இந்தியாவின் மிகப்பெரிய புத்தாக்க ஆண்டு!
இந்தியா தனது தொழில்முனைவு பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 44,000 புதிய ஸ்டார்ட்அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா தனது தொழில்முனைவு பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 44,000 புதிய ஸ்டார்ட்அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2016ல் தொடங்கப்பட்ட Startup India முயற்சிக்குப் பிறகு இது ஒரே ஆண்டில் பதிவான மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
ஆண்டு முடிவை முன்னிட்டு, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த சாதனையை அறிவித்தார். வேலைவாய்ப்பு உருவாக்கம், புதுமை, மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் ஸ்டார்ட்அப் சூழல் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும், உள்ளடக்கிய ஸ்டார்ட்அப் சூழல்
இந்த வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாக பெண்கள் தொழில்முனைவோரின் அதிகரித்த பங்கேற்பு விளங்குகிறது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களில் சுமார் 48% நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் நிறுவனர் அல்லது இயக்குநர் உள்ளார். இது இந்தியாவின் புதுமை பொருளாதாரத்தில் பாலின சமத்துவம் வலுப்பெறுவதை வெளிப்படுத்துகிறது.
மேலும், இந்த ஸ்டார்ட்அப்கள் நாடு முழுவதும் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தேசிய தொழில்சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வலுவான கொள்கை ஆதரவும் நிதி ஊக்கமும்
ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னெடுத்த பல திட்டங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன:
- ஸ்டார்ட் அப்களுக்கான நிதியங்களின் நிதி (FFS): ₹25,320 கோடிக்கு மேல் முதலீடு, 1,350க்கும் அதிகமான ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவு
- ஸ்டார்ட் அப்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம்: ₹775 கோடிக்கு மேல் கடன் உத்தரவாதம்
- ஸ்டார்ட் அப்களுகான தொடக்க மூலதனம் (Startup India Seed Fund Scheme-SISFS): ₹585 கோடி ஒப்புதல், 3,200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு ஆதரவு.
- காப்புரிமை நடவடிக்கைகள்: 16,400க்கும் மேற்பட்ட புதிய காப்புரிமை விண்ணப்பங்கள்
- Government e-Marketplace (GeM): 34,800க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் பதிவு, அரசு கொள்முதல் வாய்ப்புகள்
இத்திட்டங்கள் Startup India Action Plan இன் ஒரு பகுதியாக, ஒழுங்குமுறை எளிமை, வரி சலுகைகள், வழிகாட்டுதல், நிதி அணுகல் ஆகியவற்றின் மூலம் ஸ்டார்ட்அப்களை யோசனை நிலை முதல் விரிவாக்கம் வரை ஊக்குவிக்கின்றன.
எதிர்காலக் கனவு
2026-ஐ நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆத்மநிர்பர் பாரத் மற்றும் விக்சித் பாரத் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கனவுகளுக்கு வலுவான ஆதாரமாக ஸ்டார்ட்அப் வளர்ச்சி திகழ்கிறது.
புத்தாக்கத்திற்கான ஊக்கம், தொழில்முனைவோரின் துடிப்பு, முதலீட்டாளர்களின் ஆதரவு ஆகியவை இணைந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் புதிய வாய்ப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை இந்த ஸ்டார்ட்அப் புரட்சி தொடர்ந்து உருவாக்கும்.

