சர்வதேச பாசுமதி அரிசி பிராண்டாக உருவான 58 வருட பழமையான பஞ்சாப் நிறுவனத்தின் வெற்றிக்கதை!
1967ல் துவக்கப்பட்ட டிஆர்.ஆர்கே ஃபுட்ஸ், உள்நாட்டில் வலுவான விநியோக அமைப்பை பெற்றுள்ள நிலையில், தனது கிரவுன் பிராண்ட் அரிசியை 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்திய பசுமை புரட்சி ஆரம்ப காலத்தில், 1967ல் தவுளத் ராம் மார்வா மற்றும் அவரது மகன் மொகிந்தர் பால், உருவாக்கிய நிறுவனம் பஞ்சாப்பின் நீடித்த அரிசி நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
அந்நிறுவனம் காலப்போக்கில் எளிய வர்த்தகத்தில் இருந்து டிஆர்ஆர்கே (தவுளத் ராம் ரமேஷ் குமார்) புட்ஸாக உருவாகியிருக்கிறது. இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் முழுவதும் சென்றடையும் பிரிமியம் பாசுமதி அரிசியான 'கிரவுன் ரைஸ்' பிராண்ட் பின்னணியில் உள்ள நிறுவனமாக திகழ்கிறது.
“என் தாத்தாவும், அப்பாவும், எல்லாவற்றையும் நம்பிக்கை அடிப்படையில் உருவாக்கினர். ஒவ்வொரு அரிசியையும் நாணயத்துடன் விற்றனர். அந்த மனநிலை தான் எங்களை வழிநடத்துகிறது,” என்கிறார் டிஆர்.ஆர்கே புட்ஸ் நிர்வாக இயக்குனரும், மூன்றாம் தலைமுறை உரிமையாளருமான விக்ரம் மார்வா.

இந்நிறுவனம் மொத்த வர்த்தகத்தில் 70 சதவிதம் ஏற்றுமதி மூலம் வருகிறது. நிறுவனம் தற்போது 14 சர்வதேச சந்தையில் செயல்படுகிறது. 200க்கும் மேலான பி2பி வாடிக்கயாளர்களை கொண்டுள்ளது.
லூலூ, மஜீத் அல் புட்டைம், ரமீஸ், அன்சார், நெஸ்டோ உள்ளிட்ட சர்வதேச வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
புதிய அத்தியாயம்
பஞ்சாபின் அமிர்தசரசைச் சேர்ந்த இந்நிறுவனம் கடந்த அறுபது ஆண்டுகளில் நான்கு தலைமுறை குடும்ப தலைமுறையை கண்டு வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் வர்த்தகத்தை தன் வழியில் வளர்த்துள்ளது.
2002ல் விக்ரம் மார்வா நிறுவனத்தில் இணைந்த போது, அமைப்பு சார்ந்த மற்றும் எதிர்கால நோக்கைக் கொண்டு வந்தார். குருநானக் பல்கலை பட்டதாரியும், ஐஐஎம் அகமாதாபாத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவருமான விக்ரம் செயல்பாடுகளை நவீனமயமாக்கி, சந்தை வீச்சை அதிகரித்து தொழில்முறை நிர்வாகத்தை கொண்டு வந்துள்ளார்.
நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகள், பிராண்ட் வளர்ச்சி, விநியோக உத்திகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, எதிர்கால வளர்ச்சியுடன் கிரவுன் ரைஸ் பாரம்பரியம் தக்க வைக்கப்படுவதை உறுதி செய்கிறார்.
“எங்கள் பயணம் எப்போதுமே சமநிலை சார்ந்தது. செயல்படுவதை தக்க வைத்து, செயல்படாததை நவீனமாக்கியிருக்கிறோம். பாரம்பரியம் நம்பகத்தன்மையை அளிக்கிறது, அமைப்பு வளர்ச்சிக்கு உதவுகிறது,” என்கிறார் விக்ரம்.
உற்பத்தி, உள்கட்டமைப்பு
நிறுவனம் மில்லிங், கிரேட்ங் மற்றும் பேகேஜிங்கிற்கான இரண்டு ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 300- 400 மெட்ரிக் டன் கையாள்கிறது.
ஏற்றுமதிக்காக கண்ட்லாவில் ஒரு பேக்கேஜிங் ஆலை கொண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேவைக்கு ஈடு கொடுக்க மத்திய பிரதேசத்தில் 20 டன் திறன் கொண்ட ஆலை ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
“பெரிய அளவில் உற்பத்திக்காக மட்டும் ஆலைகள் அமைக்கவில்லை, கொள்முதல், விநியோகம், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்டவற்றில் சிக்கல்களை நீக்கவும் தான்,” என்கிறார்.
பொருட்கள்
கிரவுன் ரைஸ் பிராண்ட் கீழ் பாரம்பரிய பாசுமதி அரிசி ரகங்கள் 1121 ,1509 இடம் பெற்றுள்ளன. இவை நுகர்வோர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கானவை. மேலும், கிரவுன் கிளாசிக், கிரவுன் ஓபல், கிரவுன் சபைர் கிரீம் செல்லா மற்றும் கிரவுன் ஆம்பர் கோல்டன் செல்லா ஆகிய ரகங்களையும் நுகர்வோர் பிரிவில் கொண்டுள்ளது.
ஓட்டல், ரெஸ்டாரண்ட், கேட்டரிங் பிரிவில் நிறுவனம் ஏழு அளவுகளில் 15 ரகங்களை கொண்டுள்ளது. ஜப்பானிய நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட குறைந்த மாவு சத்துகொண்ட கிரவுன் டயட் ரைஸ் இதன் புதிய அறிமுகங்களில் ஒன்று. ஆரோக்கியம் சார்ந்த உணவு பழக்கத்தை நாடுபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
உள்ளூர் சந்தை
வட மற்றும் மேற்கு இந்தியாவில் வலுவான இருப்பு கொண்ட பிராண்ட், இப்போது தென்னக சந்தையில் விரிவாக்கம் செய்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் விநியோகிஸ்தர் அமைப்பை 50 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
அமேசான், ஃபிளிப்கார்ட், பிக்பாஸ்கெட், ஜெப்டோ மற்றும் பிளின்கிட் மூலம் கிடைத்தாலும், உள்ளூர் விற்பனை மளிகை கடைகள் வாயிலாகவே அதிகம் நிகழ்கிறது.
“இந்தியா இன்னமும் ஒற்றை அரிசி சந்தை அல்ல. பல சிறிய சந்தைகள் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் ஒரு வித அரிசி அளவு, மணம், பக்குவம் நாடுபவை. இவற்றை புரிந்து கொள்வது முக்கியம்,” என்கிறார் மார்வா.
விலையை பொருத்தவரை, கிரவுன் சூப்பர் மெட்ரோக்களில் அதிகம் விற்பனயாகிறது (ரூ.150 -240). ரூ.100-120 விலை கொண்ட கிரவுன் டெய்லி, கிரவுன் ரோஜனா மத்திய பிரிவில் உள்ளது.
தொழில்நுட்பம்
நிறுவனத்தின் நவீனமய செயல்பாட்டில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜப்பானின் சாடகே நிறுவனத்துடனான் கூட்டு, ரகம் பிரித்தல், கிரேடிங்கில் துல்லியம் அளித்து தரத்திற்கு உறுதிசெய்கிறது,
“தானியங்கிமயம் ஊழியர்களுக்கான பதிலீடு அல்ல, அவர்கள் துல்லியத்தை அது கூராக்குகிறது. சீரான தன்மையை பெரிய அளவில் சாத்தியமாக்கும் அதே நேரத்தில் கைத்திறனை காப்பாற்றவும் வழி செய்கிறது,” என்கிறார் மார்வா.
இயந்திரங்கள் மேம்பாடு, வேர்ஹவுசிங், டிஜிட்டல் கையிருப்பு நிர்வாகம் ஆகியவற்றை வலுவாக்கி, செயல்முறை திறனை அதிகரிக்க நிறுவனம் ரூ.20 கோடி முதலீடு செய்துள்ளது.
செயல்முறை சவால்கள்
வலுவான அடித்தளத்தை மீறி, பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, போட்டி மிக்க நுகர்வோர் பிரிவைச் சேர்ந்தது என்பதை நிறுவன தலைமை உணர்ந்துள்ளது. ரீடைல் இருப்பு, விநியோக லாப விகிதம், குவிக் காமர்ஸ் சேனல்களில் இருப்புக்கான செலவுகள் உள்ளிட்ட சவால்கள் உள்ளன.
“கடைகளில் இடம் பிடிப்பது கடினமானது. ரீடைலர்கள் புதிய பிராண்ட்கள் எனில் தயங்குகின்றனர். எனவே, நம்பிக்கை மற்றும் சீரான தன்மை அவசியம், என்கிறார்.
இருப்பினும், நிறுவனம் தீவிர விரிவாக்கத்தைவிட, நிலையான நீடித்த வளர்ச்சியை நாடுகிறது.
அதன் வேளாண் வேர்களுக்கு உண்மையாக இருக்கும் வகையில் நிறுவனம் சமூதாயம் சார்ந்த வளர்ச்சிகளில் முதலீடு செய்து வருகிறது. ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் பிள்ளைகளுக்கான கல்வி, நலத்திட்டங்கள், ஆர்கானிக் விவசாயத்திற்கு ஆதரவு, அருகே உள்ள கிரமாங்களுக்கு தினசரி பால் விநியோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
“விவசாயம் சார்ந்த வர்த்தகம், அதற்குக் காரணமான நிலம் மற்றும் மக்களுக்கு திரும்ப ஏதேனும் செய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்கிறார்.
எதிர்கால திட்டம்
நிறுவனம் 152 ஊழியர்களை கொண்டுள்ளது. அண்மை ஆண்டுகளில் 20-25 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. 2027 நிதியாண்டில் ரூ.2,500 கோடி விற்றுமுதலை இலக்காகக் கொண்டுள்ளது.
“தேவை வருவதற்கு முன் கொள்திறனை உருவாக்குகிறோம். வேகமாக மாறும் சந்தையில் தரம் மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மக்கான கட்டுப்பாட்டை இது அளிக்கிறது,” என்கிறார்.
நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகும் நிலையில் அதன் கவனம் தெளிவாக உள்ளது. புதுமையாக்கத்தோடு, பாரம்பரியத்தை சமநிலை பெறச்செய்வது, பொறுப்பாக வளர்ச்சி அடைவது மற்றும் நான்கு தலைமுறை பாரம்பரியத்தை தொடர்வதில் உறுதியாக உள்ளது.
“அரிசி எங்களுக்கு வெறும் விற்பனை பொருள் மட்டும் அல்ல, அது ஒரு பாரம்பரியம். இதை கொண்டு நான்கு தலைமுறை வாழ்ந்திருக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்த பாரம்பரியத்தை பொருத்தமாக இருக்கச் செய்வதே எங்கள் பணி,” என்கிறார் விக்ரம் மார்வா.
ஆங்கிலத்தில்: பூஜா மாலிக், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

