பதின்ம வயதினர் மனம் திறப்பதற்கான ஓர் இடம் 'அட்வைஸ்அட்டா.காம்'
அலை பாயும் பருவத்தில் உள்ள இளைஞர்கள் தங்களுக்கு எழும் எதைப் பற்றிய கேள்விகளையும் தயங்காமல் கேட்டு பதில் பெற துவக்கப்பட்டுள்ள இணைய தளம்
அட்வைஸ்அட்டா. காம் (AdviceAdda.com) நிறுவனர் விவேக் மித்ரம் தன் மனக் கதவை அகலத் திறந்து வைத்திருக்கிறார். இந்த தளம் மூலம் வாழ்க்கையில் இரண்டும் கெட்டானாகிய பதின்ம பருவத்தில் இருப்போருக்குத் தோன்றும் எண்ணற்றப் பிரச்சனைகளுக்கு பல்வேறு தலைப்புகளில் கட்டணம் பெறாமல் ஆலோசனைகளை வழங்குகிறார். பிடிஐ, ஸ்டார் நியூஸ், சகாரா சமாய், இந்தியா நியூஸ், என் டபிள்யூ எஸ் போன்ற பல ஊடகங்களில் நிருபராக, செய்தியாளராக, துறைத் தலைவராக பல பொறுப்புகளை வகித்து வந்தவர் விவேக். தனது பணியில் வெற்றிப் பயணத்தை முடித்துக் கொண்டு, சேவையில் இறங்குவதென்று முடிவெடுத்த அவர் "இறுதியாகத் எனக்குப் பிடித்தது என் நாட்டில், என் தலைமுறையைச் சேர்ந்த என் மக்களுக்காக சமூகப் பணி செய்வதே என தீர்மானித்தார். இளைஞர்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு விடையளித்து அவர்களைச் சுதந்திரமானவர்களாக்குவதே என் விருப்பம்’’ என்கிறார்.
பெரும்பாலான இளைஞர்கள் ஒரே விதமான உடலியல், உணர்வியல், உளவியல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு இன்று வரை விடையளிக்கப்படாமலே உள்ளது’’ என்று விளக்குகிறார் விவேக். அவர்களது கேள்வி நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருந்தால் காலப்போக்கில் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாக நேரிடும். அதுவே இறுதியில் அவர்களது சொந்த வாழ்க்கையையும், பெரியவர்களான பின் தொழிலையும் பாதிக்கக் கூடும் என்கிறார்.
"இந்தியாவில் பாலியல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றாலும் இப்போதும் கூட யாரும் பாலுணர்வு குறித்து வெளிப்படையாகப் பேசுவதில்லை. பதின்ம பருவத்தின் முக்கியமான பகுதியாக இருக்கக் கூடிய பாலியலின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அட்வைஸ்அட்டா.காம் பேசுகிறது. பாலியல் குறித்து பேசும் அதே நேரத்தில் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய அம்சங்கள் குறித்தும் பேசாமல் இருப்பதில்லை. இளமை என்பது களித்துத் துய்ப்பதற்கான பருவம் மட்டுமேயல்ல’’ என்கிறார் விவேக்.
அவருடைய அட்வைஸ்அட்டா.காமின் இணைய தளத்தில் உளவியலாளர்கள், பாலியலாளர்கள், உடலியலாளர்கள், மகப்பேறு மருத்துவர்கள், தோல்நோய் நிபுணர்கள், வாழ்க்கைத் தொழில் ஆலோசகர்கள், தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள், அழகுக் குறிப்பு நிபுணர்கள், கட்டுடல் பயிற்சியாளர்கள், நிதி ஆலோசகர்கள், வக்கீல்கள் போன்ற பலர் மனநல உதவிக் குறிப்புகள் வழங்குகின்றனர். "பல்வேறு துறை நிபுணர்களிடம் இணைய தளத்தை அணுகும் பயன்பாட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துத் துறை தகவல்களையும் மெய்நிகராகப் பெறலாம்’’ என்கிறார் விவேக்.
அதற்கான சேவை கட்டணம் கிடையாது. பயன்பாட்டாளர்களைப் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும். விவேக் கூற்றின்படி பார்க்கப்போனால் இத்தகைய சேவையை இந்தியாவில் வழங்கும் அமைப்பில் அட்வைஸ்அட்டா.காம் தான் முதலாவதாக உள்ளது. இத்தகைய சேவையை வழங்கக் கூடிய வேறு அமைப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை வியாபார ரீதியாக பயன்பாட்டாளர்களிடம் கட்டணம் வசூலித்து வெறுப்பேற்றி விடுகிறார்கள். அதனால் நாங்கள் வழங்கும் இணைய தளச் சேவையை எப்போதும் இனாமாகவே வைத்திருப்பது என்று முடிவு செய்து விட்டேன்’’ என்கிறார் விவேக்.
தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதும் வெளிப்படுத்திக் கொள்வதும் அவரவர் விருப்பம் ஆனால் எங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சுதந்திரமாகக் கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பலாம். "கேள்வி எங்களிடம் கேட்கப்பட்டதும் அது துறைசார்ந்த நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களிடம் பதில் பெற்று 24 மணி நேரத்திற்குள்ளாக எங்களது இணைய தளத்தில் வெளியிடப்படுவதால் அதே போன்ற கேள்வி உடையவர்களும் அந்தப் பதிலில் தெளிவு பெற முடிகிறது’’ என்று விளக்குகிறார் விவேக்.
அட்வைஸ்அட்டா.காமிடம் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் கல்வி, வாழ்க்கைப் பாதை, உறவான்மை, மன அழுத்தம், பாலியல், ஆரோக்கியம் ஆகியன பற்றியதாக இருக்கிறது. இணைய தளப் பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் 18 வயதில் இருந்து 25 க்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் 60 சதவீதம், பெண்கள் 40 சதவீதம். "இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் எங்கள் பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கேள்வியைக் கேட்டு பதில் பெற்ற பின் மீண்டும் இன்னொரு சந்தேகத்துடன் எங்களை அணுகுகிறார்’’ என்கிறார் விவேக்.
பயன்பாட்டாளர்களின் விசுவாசமே தங்களுக்குத் தூண்டுகோலாக இருகிறது என்று ஒப்புக் கொள்கிறார் விவேக். ‘’ஐந்து மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட எங்களது இணையதளத்தில் இதுவரை 300,000 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அன்றாடம் 5000 இல் இருந்து 7000 பேர்வரை எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுகின்றனர். 2000க்கும் மேற்பட்டோர் எங்களிடம் பதிவு பெற்றுள்ளனர்’’ என்கிறார் விவேக். எவ்வித விளம்பரமும் இல்லாமலே வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறுகிறார் விவேக்.
இந்த நிமிடம் வரை வலைத்தளம் பணம் திரட்டியதில்லை. ஆனாலும் தங்களது அமைப்பை மேன்படுத்துவது குறித்து குழுவினர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், பெருநிறுவனங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தும் வேறு இரண்டு முக்கிய திட்டங்களும் களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட சிலருக்கு தொழில் ஆலோசனைக்குரிய குறிப்புகள் இணையத்தில் வழங்கப்படுகிறது. உறவான்மை குறித்தும், உளவியல் குறித்தும் அடிக்கடி கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன என்கிறார் விவேக்.
ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தனி நபர்கள் ஆகியவற்றிடமிருந்து நிதியாதரவை எதிர்பார்க்கிறோம் என்கிறார் விவேக். பயன்பாட்டாளர்களின் தேவைக்கு ஈடு செய்ய அதிக ஆற்றல் மிகுந்த இணையச் சேவை இணைப்பைப் பெற நிறைய பணம் செலவாகிறது என்கிறார் விவேக்.
ஒரு நல்ல தொழில் முனைவோருக்கு இருப்பது போலவே விவேக்கிற்கும் பெரிய கனவு இருக்கிறது. "தங்கள் மனதில் எழும் கேள்வியை யாரிடமும் கேட்க முடியாமல் தவிக்கும் 75% இந்தியர்களுக்கு உதவும் நோக்கத்துடனே அட்வைஸ்அட்டா.காம் இணையத் தளத்தைத் துவக்கினேன். இப்போது எமது அட்வைஸ்அட்டா.காம் முகநூலைக் காட்டிலும், வலைப்பூவைக் காட்டிலும், ட்விட்டரைக் காட்டிலும் மிகவும் பிரபலமாக விளங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது உணர்வுகளைப் பகிரக் கூடிய இடம் மட்டுமல்ல, தங்களது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டு அதற்கான தீர்வையும் பெறக்கூடிய இடமாகும்’’ என்று கூறுகிறார்.
விரிவான சித்திரத்தின் மீது கவனத்தைக் குவிக்கும் விதமாக விவேக் முடிவில் கூறியது –
‘’உலகில் மிக இளமையான நாடாக இந்தியா விளங்கப் போகிறது. அதிக மனித வளமிக்க இந்தியா தன்னிடம் முதலீடு செய்யுமாறு பிற நாடுகளை அழைக்கிறது என்று பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆண்டிற்கு 50000 த்திற்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் தங்களது மன உணர்வைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள இயலாமல் (குறிப்பாக குடும்பப் பிரச்சனை, பொருளாதார நெருக்கடி, காதல் விவகாரம் ஆகியவற்றால் ஏற்படும்) மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வார்களானால் நமது மனித வளத்தை எப்படிக் கட்டிக் காக்க முடியும். நம்முடைய இளைஞர்ளை வாழ்வில் சுதந்திர மனதுடையவர்களாக மாற்றுவோம். அப்போது தான் நமது நாட்டை விஸ்வ குருவாக மாற்றுவதற்கான பங்களிப்பை இளைஞர்களால் அளிக்க முடியும்’’
இணையதள முகவரி: AdviceAdda