9 வயது சிறுவன்; 217 கோடி ரூபாய் வருமானம்: டாப் யூடியூபரின் கதை!
அதிக வருமானம் ஈட்டிய யூடியூபர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த சிறுவன்
இன்று எல்லோரும் டிஜிட்டலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். காரணம், வருமானத்தின் அனைத்து வாயில்களையும் திறந்துவிட்டுள்ளது இணைய உலகம். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார், ரியான் காஜி.
வெறும் ஒன்பதே வயதான இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை நம்மை மலைக்க வைக்கிறது. ஆம்! வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் 2020ம் ஆண்டின் அதிக வருமானம் ஈட்டிய யூடியூபர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அண்மையில் போர்ப்ஸ், ‘அதிகம் வருமானமிட்டும் யூடியூப் நட்சத்திரங்கள் 2020’ (Highest Paid Youtube Star of 2020) என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார் ரியான். இவர்,
இந்தாண்டு 29.5 மில்லியன் டாலர், அதாவது 217 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். கேம்ஸ் மற்றும் பொம்மைகள் ரிவ்யூ மூலம் இந்த வருமானத்தைப் பெற்றுள்ளார். அவருக்கென தனி ரசிகர்களே இருக்கின்றனர். உலக அளவில் பிரதான யூடியூப் சானல்களில் ஒருவராக திகழ்கிறார் ரியான்.
இது தவிர, ரியான் தனது சேனலின் பிராண்டட் பொம்மைகள் மற்றும் ஆடைகளிலிருந்து மார்க்ஸ் & ஸ்பென்சர் பைஜாமாக்கள் போன்றவற்றிலிருந்து 200 மில்லியன் டாலர் (1472 கோடி) சம்பாதித்துள்ளார்.
ரியான் விரைவில் தனது சொந்தத் தொலைக்காட்சித் தொடரை நிக்கலோடியோனில் தயாரிக்க இருக்கிறார். இது ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட பல மில்லியன் டாலர் ஒப்பந்தமாகும். கோல்கேட், ரோகு, வால்மார்ட் போன்றவர்களுடன் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
ரியான் நெட்வொர்க்கிங் நிறுவனமான ஹுலுவுடன் ஊடக ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளார் ரியான். கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் தனது யூடியூப் சேனலை தொடங்கினார் ரியான். அது இப்போது,
27.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸூடன், பில்லியன் கணக்கான வியூஸ்களை அள்ளிக் குவித்துள்ளது. ரியான் குடும்பத்தினர், மேலும் 8 யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். அதில், மொத்தமாக சேர்த்து 41.7 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 12 பில்லியன்ஸ் வியூஸ் வரையிலான பார்வையாளர்களைக் கொண்டு அது இயங்கி வருகிறது.
ரியானுக்ககு அடுத்தபடி, இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஜிம்மி டொனால்ட்சன் 47.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன், 3 பில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளார். இவர், 24 மில்லியன் டாலர் (176.6 கோடி ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளார். மிஸ்டர் பீஸ்ட் என்னும் பெயரில் யூடியூப்பில் சேனல் நடத்தி வரும் இவர், நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றி வருகிறார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் இருக்கும் டியூட் பர்ஃபெக்ட் யூடியூப் சேனல் 5 நண்பர்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. அந்த சேனல் 23 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 169 கோடி. 57.5 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன், 2.77 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் உள்ள மற்றவர்கள் 4வது இடத்தில் ரெட், 5வது இடத்தில் மார்கிப்ளையர், 6வது இடத்தில் பிரஸ்டன் ஆர்ஸ்மென்ட், 7வது இடத்தில் ஆறு வயதான நாஸ்ட்யா ((Anastasia Radzinskaya) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், பிளிப்பி (ஸ்டீவின் ஜான்), டேவிட் டோப்ரிக் மற்றும் ஜெஃப்ரி ஸ்டார் முறையே 8, 9 மற்றும் 10வது இடங்களை பிடித்துள்ளனர்.
தகவல்: ஃபோர்ப்ஸ்