தன் கேன்சர் நோய் பற்றி மகனிடம் தெரிவித்த சோனாலி பிந்த்ரே...
மெட்டாஸ்டேட்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரே, தன் நோயை பற்றி மகன் ரன்வீரிடம் தெரிவித்த போது, அதை அவன் எவ்வளவு முதிர்ச்சியோடு எடுத்துக் கொண்டான் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே, சமீபத்தில், தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார் ட்விட்டரில் தெரிவித்தார்.
“சில வேளைகளில், நீங்கள் எதிர்பார்க்காத போது, வாழ்க்கை உங்களை புரட்டிப் போடும். சமீபத்தில், எனக்கு மெட்டாஸ்டேட்டிக் ஹை-கிரேடு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. உண்மையில், நாங்கள் இதை எதிர்பார்த்திருக்கவில்லை...” என்று பதிவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர்களும், அவருடைய ஃபேன்களும் சோனாலிக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் நிறைய பதிவுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் மகன் ரன்வீரிடம் பல தயக்கம், குழப்பங்களுடன் தனக்கு புற்றுநோய் இருப்பதைத் தெரிவித்திருக்கிறார் சோனாலி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த அவர் பின் வருமாறு எழுதியிருக்கிறார்.
“12 வருடங்கள், 11 மாதங்கள் மற்றும் எட்டு நாட்களுக்கு முன்னர், பிறந்த போதே என்னுடைய மகன் (@rockbehl) என் இதயத்தை எடுத்துக் கொண்டான். அப்போதிலிருந்து அவனுடைய சந்தோஷமும், நலனும் தான், நானும் என் கணவரும் செய்யும் எல்லா வேலைகளிலும் முதன்மையாக இருந்தது. இதனால் தான், புற்றுநோய் இருப்பது தெரிய வந்த போது, எங்களுக்கு இருந்த பெரிய குழப்பமே அதை, எப்படி அவனுக்கு சொல்லப் போகிறோம் என்பது தான்...”

Image courtesy : Indianexpress.com
எந்த அளவு அவனை பாதுகாக்க வேண்டும் என நினைத்தோமோ, அதே அளவு அவனிடம் உண்மையை சொல்ல வேண்டியது முக்கியம் என்பதையும் அறிந்தோம். நாங்கள் எப்போதுமே அவனிடம் திறந்த மனதோடு நேர்மையாகவே இருந்திருக்கிறோம் - அதை இம்முறை மாற்றவிரும்பவில்லை.
அவன் இந்த விஷயத்தை நல்ல முதிர்ச்சியோடு எடுத்துக் கொண்டான். உடனேயே, எனக்கு தேவைப்பட்ட ஆறுதலாகவும், பாசிட்டிவிட்டியாகவும் மாறினான். சில நேரங்கள் எங்கள் பாத்திரங்களை மாற்றிக்கொண்டு, அவன் பெற்றவன் ஆகி, நான் செய்ய வேண்டிய காரியங்களை நினைவுறுத்தினான்...!
இந்த மாதிரியான தருணங்களில் குழந்தைகளையும் ஈடுபடுத்துவது கட்டாயம் என நினைக்கிறேன். நாம் நினைப்பதை விட அவர்கள் அதிகம் திறமையானவர்கள். அவர்களை காக்க வைத்து, எல்லாம் தெரிந்துமே எதுவுமே சொல்லாமல் இருக்காமல், அவர்களோடு நேரம் செலவிட்டு, அவர்களை எல்லாவற்றிலும் ஈடுபடுத்துவது முக்கியம் என நான் நினைக்கிறேன்.
வாழ்க்கையின் வலிகளில் இருந்தும், யதார்த்தத்தில் இருந்தும் அவர்களை பாதுகாக்கிறோம் என்று முயற்சி செய்து, கடைசியில் அதற்கு நேர் எதிரான ஒன்றை செய்திருப்போம்.
ரன்வீர் அவனுடைய கோடைவிடுமுறையில் இருக்கும் இந்த வேளையில், நான் அவனோடு நேரம் செலவழிக்கிறேன். அவனுடைய குறும்பும், விளையாட்டும் தான் இப்போது வாழ்க்கைக்கு ஒளியூட்டுவதாக இருக்கிறது. பிறகு நாங்கள் இன்று, ஒருவரில் இருந்து ஒருவர் சக்தியை எடுத்துக் கொள்கிறோம்.

இந்த பதிவில் கமெண்ட் செய்துள்ள பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் “அவன் (ரன்வீர்) தனித்துவமானவன். நீயா அல்லது ரன்வீரா அல்லது கோல்டியா (சோனாலியின் கணவர்), யார் என்னை அதிகம் ஆச்சரியப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை...” என்று பதிவிட்டுள்ளார். புற்றுநோயை வென்ற பலரின் கதைகள் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சோனாலி பிந்த்ரே, புற்றுநோய்க்கு எதிரான தன் போராட்டத்தில் வெற்றி பெறுவார் என ப்ரார்த்திப்போம்.