களை கட்டும் ஆவின் விற்பனை: அமோக வரவேற்பு பெறும் ஐஸ்கிரீம்கள்; குறிப்பாக அந்த குல்ஃபி!
ஆவின் ஐஸ்கிரீம்கள் இந்க கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி இருக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மார்க்கெட்டிங் வேலை பார்ப்பவர்களில் தொடங்கி பகல் நேரங்களில் வெளிப்புறத்தில் பயணிக்கும் பெரும்பாலானோரும் குளிர்பான கடைகளை நோக்கி படை எடுக்கின்றனர்.
தொடந்து ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகரித்து இருக்கிறது. பால் தயாரிப்பு பொருட்களை பல நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தாலும் ஆவின் என்ற பெயருக்கு தனி மதிப்பு இருக்கத் தான் செய்கிறது.

Aavin ice cream
ஆளுங்கட்சியின் தொடர் அறிவிப்பு
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆவின் பால் விலையை குறைத்து அறிவித்தது. இதன் காரணமாக 1.5 லட்சம் லிட்டர் வரையிலான ஆவின் பால் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்தது.
மறுபுறம் கோடை காலத்தை கருத்தில் கொண்டு கடந்த மாதம் ஆவினில் கூடுதலாக 10 பொருட்கள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் வெளியிட்டார். இதில் செட்டார் சீஸ், பலாப்பழ ஐஸ்க்ரீம், பாசந்தி, வைட் சாக்லெட் மற்றும் கூல் காபி உள்ளிட்டவைகள் இடம்பெற்றன.
மக்களின் இயல்பு உணவாக மாறும் ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் ஆனது கோடைத் தாக்கத்துக்கு மட்டுமின்றி பலரின் இயல்பு உணவாகவே மாறி இருக்கிறது. ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையானது வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
தமிழக கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் ஆவின் தயாரிப்புகள் திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு எட்டு மணிநேரத்துக்கும் 40,000 ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரையில் ஆவின் தயாரிப்புகளுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. தெப்பக்குளம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் பயணிக்கும் பெரும்பாலானோர்கள் ஆவின் பூத்திற்கு செல்லாமல் திரும்ப மாட்டார்கள்.
மதுரையில் அமோக வரவேற்பு
மதுரை ஆலையில் பல்வேறு ஆவின் தயாரிப்புகளும் தயாரிக்கப்பட்டு வருவதால் அனைத்தும் ஃப்ரெஷ் ஆக கிடைக்கும் என எதிர்பார்ப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களிடையே இருக்கிறது.
இதன்காரணமாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதலாக 1 லட்சம் ஐஸ்கிரீம்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் தினசரி சுமார் 50,000 ஐஸ்கிரீம்கள் வரை கூடுதலாக உற்பத்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் வரையிலான ஐஸ்கிரீம்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
குல்ஃபியை விரும்பும் மக்கள்
குறிப்பாக திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட ஏழு யூனிட்களில் தயாரிக்கப்படும் குல்ஃபி ஐஸ்கிரீம்கள் ஆவின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. தினசரி சுமார் 10,000 முதல் 15,000 வரையிலான குல்பி ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆவின் உற்பத்தி செய்யும் ரூ.10 மதிப்புள்ள வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ ஐஸ்கிரீம், சாக்கோ பார் உள்ளிட்டவைகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அனைத்து பகுதிகளிலும் கிடைக்க ஏற்பாடு
ஆவின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பதையடுத்து, அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஐஸ்கிரீம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தேவைக்கேற்ப ஐஸ்கிரீம்களை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்ல, டீப் ஃப்ரீசர் வசதியுடன் கூடிய வேன்கள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆவின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருவது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
தொகுப்பு: துர்கா

