திருச்சி அக்ரி ஸ்டார்ட்-அப் ‘வேளாண் மார்ட்’ Next Bharat Ventures இடமிருந்து ரூ.1.26 கோடி முதலீடு திரட்டியது!
மூன்று வேளாண் பட்டதாரிகளால் தொடங்கப்பட்ட வேளாண் மார்ட், விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களைப் பெற்று, கல்லூரிகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட நிறுவன மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு தரமான, புதிய விளைபொருட்களை வழங்குவதில் முனைப்பு காட்டி வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப (AgriTech) நிறுவனமான 'வேளாண் மார்ட்' (Velaan Mart) அக்ரிடெக் பிரைவேட் லிமிடெட், நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1.26 கோடி பங்கு முதலீட்டை திரட்டியுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தில் நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் 15 சதவீதப் பங்குகளைப் பெற்றுள்ளது.
ரமேஷ், புன்னியமூர்த்தி மற்றும் ஆரன் என்ற மூன்று வேளாண் பட்டதாரிகளால் தொடங்கப்பட்ட வேளாண் மார்ட், விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் விளைபொருட்களைப் பெற்று, கல்லூரிகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட நிறுவன மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு தரமான, புதிய விளைபொருட்களை வழங்கும் ‘வயலில் இருந்து நிறுவனங்கள்’ (Farm-to Institution) என்னும் ஒழுங்கமைக்கப்பட்ட விநியோகச் சங்கிலியை உருவாக்கி வருகிறது.
தற்போது திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி பகுதிகளில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த கொள்முதல் மற்றும் விநியோக வலையமைப்பு மூலம் கல்லூரிகள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது.
பாரம்பரிய வேளாண் விநியோகச் சங்கிலியில் விவசாயிகளுக்கும், விளைபொருட்களை மொத்தமாக வாங்கும் நிறுவனங்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு வேளான் மார்ட் உருவாக்கப்பட்டது. விவசாயிகள் நம்பகமான சந்தைகளைப் பெறுவதிலும், தங்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

அதே நேரத்தில், நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்கள் சீரற்ற தரம், பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் நடைபெறும் கொள்முதல் மற்றும் நிலையற்ற விநியோகம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த இடைவெளியைப் போக்கும் வகையில், விவசாயிகளையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் நிறுவனங்களையும் நேரடியாக இணைக்கும் பணியை வேளான் மார்ட் மேற்கொண்டு வருகிறது. விளைபொருட்கள் உற்பத்தியாகும் இடங்களுக்கு அருகிலேயே அவற்றைக் கொள்முதல் செய்து, தரப் பரிசோதனை, பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலி மூலம் நிறுவனம் நிர்வகிக்கிறது.
தேவையற்ற இடைத்தரகர்களைக் குறைத்து, விலை நிர்ணயம், தரம் மற்றும் விளைபொருட்களின் மூலாதாரம் ஆகியவற்றில் அதிக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதே நிறுவனத்தின் வணிக மாதிரியின் முக்கிய நோக்கமாகும்.
’வேளாண் மார்ட்’ தற்போது கல்லூரிகள், விடுதிகள், உணவகங்கள், ஓட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் பிற வர்த்தக சமையலறைகள் உள்ளிட்ட நிறுவன மற்றும் B2B வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தேவையை முன்கூட்டியே கணித்தல், கொள்முதல் திட்டமிடல், இருப்பு மேலாண்மை மற்றும் சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு புதிய விளைபொருட்களின் விநியோகத்தை மேலும் சீரானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் மாற்றி வருகிறது.

இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இந்நிறுவனம் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், 10,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செயல்பட்டு வரும் பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுடனும் உறவுகளை உருவாக்கியுள்ளது.
நேரடி கொள்முதல், தரப் பரிசோதனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விநியோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அதன் விநியோகச் சங்கிலி செயல்படுகிறது. மேலும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கொள்முதல் மையங்களை உருவாக்கவும், சரக்குப் போக்குவரத்தை மேலும் திறம்படச் செய்யவும் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் விளைபொருட்கள் வீணாவதைக் குறைத்து, விவசாயப் பண்ணையிலிருந்து நிறுவனங்களைச் சென்றடையும் வரையிலான விநியோகத்தை நம்பகமானதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
நெக்ஸ்ட் பாரத் வென்ச்சர்ஸ் இடமிருந்து கிடைத்துள்ள ரூ.1.26 கோடி முதலீடு, நிறுவனத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலித் திறன்களை மேம்படுத்துதல், புதிய சந்தைகளில் நுழைதல் மற்றும் வலுவான கொள்முதல் வலையமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முதலீட்டுத் தொகை பயன்படுத்தப்படும்.
இதன் உடனடி விரிவாக்கத் திட்டங்களில் கோயம்புத்தூர் முக்கிய இடம் பெறுகிறது. கோயம்புத்தூர் நிறுவனத்தின் முக்கிய செயல்பாட்டு சந்தையாக உருவாக்கப்பட உள்ளது.
மேலும், நீலகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதை வலுப்படுத்தவும், அப்பகுதியில் விளையும் உயர்தர வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஊட்டியில் சேகரிப்பு மையம் ஒன்றை அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் கொள்முதல் மற்றும் விநியோக வலையமைப்பை மேலும் திறம்பட அமைப்பதுடன், கூடுதல் விவசாயிகளையும் நிறுவன வாடிக்கையாளர்களையும் தனது வணிகச் சூழலுக்குள் கொண்டு வர முடியும், என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
தமிழகத்தின் ஸ்டார்ட்அப் சூழலியலும் வேளாண் மார்ட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் TANSEED திட்டத்தின் பயனாளியாக உள்ள இந்நிறுவனம், EDII-திருச்சிராப்பள்ளி அக்ரிபிசினஸ் இன்குபேஷன் ஃபோரம் (TABIF) அமைப்புடனும் இணைந்து செயல்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனம் தனது வணிகத்தை வளர்த்துக் கொள்ள தேவையான ஸ்டார்ட்அப் சூழலியல் ஆதரவைப் பெற்றுள்ளது.
நிறுவனம் முதலீடு திரட்டும் கட்டத்தை எட்டியபோது, Start Insights அதன் நிதி திரட்டும் பயணத்துக்கு ஆதரவளித்தது. குறிப்பாக, நிறுவனத்தின் முதலீட்டு முன்மொழிவை வலுப்படுத்துதல் மற்றும் நிதி திரட்டும் செயல்முறைக்கு தேவையான ஆதரவை வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஸ்டார்ட் இன்சைட்ஸ் உதவியுள்ளது.
ஆரம்ப கட்ட வேளாண் தொழில் முயற்சியாகத் தொடங்கிய வேளாண் மார்ட், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுவன வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட விநியோகச் சங்கிலி நிறுவனமாக வளர்ந்து வருகிறது.
வரும் காலத்தில் தென்னிந்தியா முழுவதும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த வேளாண் மார்ட் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, 10 நகரங்கள் மற்றும் 10 தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மையங்களை உருவாக்குவது நிறுவனத்தின் விரிவான வளர்ச்சித் திட்டமாகும். விவசாயிகளுக்கு வலுவான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதோடு, நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு புதிய வேளாண் விளைபொருட்களை நம்பகமான முறையில் கொள்முதல் செய்ய உதவும் ஒரு நம்பகமான வேளாண் விநியோகச் சங்கிலித் தளத்தை உருவாக்குவதே நிறுவனத்தின் நீண்டகால நோக்கமாகும்.
வேளாண் மார்ட்டைப் பொறுத்தவரை, ரூ.1.26 கோடி முதலீடு என்பது வெறும் நிதி திரட்டல் என்ற அளவில் மட்டும் இல்லாமல், இந்திய விவசாயிகளையும் அவர்களின் விளைபொருட்களைச் சார்ந்துள்ள வர்த்தக நிறுவனங்களையும் மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முறையில் இணைக்கும் அடுத்த கட்ட முயற்சியாக அமைந்துள்ளது.
புதிய சந்தைகளில் விரிவடைவவது, கொள்முதல் கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களின் வலையமைப்பை விரிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம், விவசாயிகளிடமிருந்து நிறுவனங்கள் வரை சிறப்பாகச் செயல்படும் ஒரு ஒருங்கிணைந்த வேளாண் விநியோகச் சூழலை உருவாக்க வேளாண் மார்ட் திட்டமிட்டுள்ளது.

