மருத்துவ போக்குவரத்தில் eVTOL உடன் ஆய்வுக்காக இணையும் ஏர் இந்தியா, சுசூகி மற்றும் ஸ்கைடிரைவ்!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் மருத்துவப் போக்குவரத்தில் சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் மருத்துவ விமான சேவைக்காக செங்குத்தாக மேலெழுந்து செல்லும் 'இவிடால்' (eVTOL) விமானங்களை பயன்படுத்தும் சாத்தியம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள, சர்வதேச இவிடால் தயாரிப்பு நிறுவனம் ஸ்கைடிரைவ் மற்றும் ஜப்பானின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, மருத்துவ போக்குவரத்தில் பெரும் சவால்களை உருவாக்கியிருக்கும் சூழலில் இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கை டிரைவின் இவிடால் நுட்பம், ஏர் இந்தியாவின் செயல்பாட்டு அனுபவம் மற்றும் சுசூகி இந்தியாவின் சந்தை சார்ந்த புரிதல் ஆகியவை இணைந்து இந்த திட்டம், மருத்துவ லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான இறுதி மைல் சிக்கலுக்கு தீர்வு காண முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியா; உலகின் பெரிய மற்றும் வேகமாக வளரும் விமான போக்குவரத்து சந்தையாக இருக்கிறது. நாட்டின் தற்போதைய போக்குவரத்து அமைப்பின் விரிவாக்கமாக மேம்பட்ட விமான போக்குவரத்தை கருதுகிறோம். மருத்துவ விமான போக்குவரத்தில் இவிடால் விமானத்தின் பங்களிப்பு முக்கியமாக இருக்கும், ஏனெனில், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமாக அமையும் மருத்துவ போக்குவரத்தில் தொழில்நுட்பம் மற்றும் குறிக்கோள் இணைந்ததாக இது அமைகிறது,” என்று ஏர் இந்தியா கார்கோ பிரிவு தலைவர் ரமேஷ் மமிடாலா கூறியுள்ளார்.
இந்த ஆய்விற்கு ஏர் இந்தியா நிறுவனம் தனது செயல்பாடு அனுபவம், உள்கட்டமைப்பு சார்ந்த நுண்ணறிவு மற்றும் தொடர்புடைய பங்குதாரர்கள் உறவு ஆகிய பிரிவுகளில் பங்களிப்பு செலுத்தி, பாதுகாப்பான, நம்பகமான இவிடால் செயல்பாடுகளுக்கான கட்டமைப்பை உருவாக்கி, மதிப்பிட உதவும்.
"ஒவ்வொரு நொடியும் முக்கியமாக அமையும், உயிர் காக்கும் மருத்துவ போக்குவரத்து துறையை நோக்கி முன்னேற, ஏர் இந்தியா மற்றும் சுசூகியுடன் இணைந்து செயல்படுகிறோம். போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சனையாக இருக்கும் இந்தியாவில், மேம்பட்ட மருத்துவ போக்குவரத்திற்காக இவிடால் வாகனங்களை பயன்படுத்துவது மருத்துவ உள்கட்டமைப்பை மாற்றி அமைக்கக் கூடியது,” என ஸ்கைடிரைவ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. டோமோஹிரோ புகுஜவா கூறியுள்ளார்.
சுசூகி வர்த்தக மற்றும் தொழில்நுட்ப உறவு கொண்டிருக்கும் ஸ்கைடிரைவ் உருவாக்கியுள்ள இவிடால் விமானம், சுசூகியின் 'Sho-Sho-Kei-Tan-Bi போக்குவரத்து தத்துவம் சார்ந்து அமைகிறது என சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் செயல் பொது மேலாளர் மசாவோ புஜிடானி (Masao Fujitani) கூறியுள்ளார்.
"நகர் புற உள்கட்டமைப்பில் இதற்கு முக்கிய பங்கு இருப்பதை அறிவோம். வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ற போக்குவரத்து தீர்வுகளை அளித்து பிராந்திய வளர்ச்சிக்கு உதவ சுசூகி உறுதி கொண்டுள்ளது,” என அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan

