Snap நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அஜித் மோகன் ராஜினாமா!
மெட்டா இந்தியாவின் முன்னாள் தலைவரான மோகன், தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்காக சிங்கப்பூருக்குத் திரும்புகிறார். ஸ்னாப் நிறுவனம், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா (EMEA) தலைவர் ரோனன் ஹாரிஸை தனது தலைமை வர்த்தக அதிகாரியாக நியமித்துள்ளது.
ஸ்னாப் என்னும் உலக வர்த்தக விளம்பர நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி அஜித் மோகன் தன் 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு ராஜினாமா செய்தார். இதனையடுத்து, ஸ்னாப் நிறுவனம் இதற்கு முன்பு நிறுவனத்தின் ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க வணிகங்களின் தலைவராகவும் இருந்த ரோனன் ஹாரிஸ் என்பவரை தலைமை வர்த்தக அதிகாரியாக நியமித்துள்ளது.
நிறுவனத்தின் இணை நிறுவனரும் சி.இ.ஓவுமான இவான் ஸ்பைஜெல்லு ஹாரிஸ் நேரடியாக ரிப்போர்ட் செய்வதோடு நிறுவனத்தின் விளம்பர விற்பனை மற்றும் சந்தைக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளைக் கவைத்துக் கொள்வார்.
தனிப்பட்ட காரணங்களே தனது பதவி விலகல் முடிவுக்குக் காரணம் என்று மோகன், LinkedIn பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது உலகளாவிய பொறுப்புகளுக்காக நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிங்கப்பூர் என அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்த நிலையில், அவரது குடும்பம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்தது.
“நான் வீடு திரும்புகிறேன். பசிபிக் கடல் கடந்த விமானப் பயணங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானக் குழுவினருடன் செலவிட்ட நேரத்தைவிட, என் மகன்களுடன் அதிக நேரம் செலவிட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஜனவரியில் ஸ்னாப் நிறுவனத்தில் ஆசிய-பசிபிக் பிராந்திய தலைவராக இணைந்த மோகன், அதற்கு முன்பு மெட்டா இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார். 2025 பிப்ரவரியில் ஸ்நாப் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை வணிக அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற அவர், விளம்பரத் துறை, விளம்பரத் தயாரிப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பொறியியல் பிரிவுகள் உள்ளிட்டவற்றை கவனித்து வந்தார்.
ஸ்னாப்பில் பணியாற்றிய காலத்தில், விளம்பரத் தளத்தை செயல்திறனை மையமாகக் கொண்டு மறுகட்டமைப்பதில் மோகன் கவனம் செலுத்தினார். நேரடி விற்பனை மற்றும் வாடிக்கையாளர் நடவடிக்கைகளைத் தூண்டும் விளம்பரங்களை நிறுவனத்தின் விளம்பர வர்த்தகத்தின் முக்கிய அங்கமாக மாற்றியதுடன், விளம்பரதாரர்களுக்கு அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தினார்.
அவரது தலைமைக் காலத்தில் இந்தியா, ஸ்நாப்சாட்டின் முக்கியமான வளர்ச்சிச் சந்தையாக உருவெடுத்தது. 2025-ல் இந்தியாவில் ஸ்நாப்சாட்டின் மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் 25 கோடியைத் தாண்டினர். அதே நேரத்தில், உலக அளவில் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) உருவாக்குநர்கள் அதிகம் உள்ள ஸ்நாப்பின் இரண்டாவது பெரிய சந்தையாகவும் இந்தியா உருவெடுத்தது.
இந்தத் தலைமை மாற்றம், ஸ்நாப் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்படும் விரிவான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. பொறியியல் மற்றும் விளம்பரத் தயாரிப்புகளுக்கு நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2026-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்நாப்பின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 19 சதவீதம் அதிகரித்தது. அதே வேளையில், அதன் உலகளாவிய பயனர் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியது. ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகளான ‘Specs’-ஐ நுகர்வோருக்கு அறிமுகப்படுத்துவதற்கான தயாரிப்புகளிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஸ்நாப்பில் இணைவதற்கு முன்பு, மோகன் சுமார் நான்கு ஆண்டுகள் மெட்டாவின் இந்தியா வர்த்தகத்தை வழிநடத்தினார். அதற்கு முன்பு ஹாட்ஸ்டாரின் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து, அந்த ஸ்ட்ரீமிங் தளத்தை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாக உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
தனது அடுத்த தொழில்முறை பயணம் குறித்து மோகன் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. புத்தகம் எழுதலாம், திரைப்படங்களை உருவாக்கலாம் அல்லது செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆராயலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது சிறிது காலம் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஸ்நாப் நிறுவனத்தின் பங்குதாரராக தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவளிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

