UPI - MDR பரிவர்த்தனையில் ரு.2000த்துக்கும் மேல் 0.4% கட்டணம் - விரிவான விளக்கம் இதோ!
MDR என்றால் என்ன? வணிகர்கள் மீது இதன் தாக்கம் எப்படி இருக்கும்? இந்த மாற்றம் நுகர்வோரை எவ்விதம் பாதிக்கும்? போன்ற முக்கிய கேள்விகளுக்கான விளக்கம் இதோ:
யுபிஐ பரிவர்த்தனைகளில், ரு.2000-த்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) விதிக்கப்பட்டுள்ளது தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுபிஐ சூழலின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நீடித்த தன்மைக்கு எம்.டி.ஆர் அவசியம், என போன்பே நிறுவனத்தின் சமீர் நிகம் போன்றவர்கள் கூறியுள்ள நிலையில், இலவச டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டுள்ள முன்னேற்றத்தை இந்த நடவடிக்கை பாதிக்கும், என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்.டி.ஆர் என்றால் என்ன? வணிகர்கள் மீது இதன் தாக்கம் எப்படி இருக்கும்? இந்த மாற்றம் நுகர்வோரை எவ்விதம் பாதிக்கும்? போன்ற முக்கிய கேள்விகளுக்கான விளக்கம் இதோ:

MDR என்றால் என்ன ?
எம்டிஆர் (வணிகர் தள்ளுபடி விகிதம்), கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்வதற்காக வங்கிகள், பேமெண்ட் சேவை நிறுவனம் அல்லது செயலாக்க நிறுவனத்திற்கு வர்த்தகங்கள் (வணிகர்கள்) செலுத்த வேண்டிய கட்டணமாகும்.
எம்டிஆர் கவனத்தை ஈர்ப்பது ஏன்?
யுபிஐ வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளில் ரூ.2,000க்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத எம்டிஆர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையான பூஜ்ஜியம் எம்டிஆர் செயல்முறைக்கு இது முடிவு கட்டுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையை பிரபலமாக்க இந்த சலுகை முன்னர் அளிக்கப்பட்டது.
2020 முதல் யுபிஐ மற்றும் ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான் எம்டிஆர் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் இது மாறும். அப்போது புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன.
எம்டிஆர் எவற்றுக்கு எல்லாம் பொருந்தும்?
வணிகர்களுக்கு செய்யப்படும் ரூ.2000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் பொருந்தும். இந்த கட்டணம் பணம் பெறும் வணிகர்களால் ஏற்கப்பட வேண்டும். 96 சதவீத பரிவர்த்தனைகள் ரூ,2000க்கும் குறைவானவை என்பதால் இந்த விகிதம் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது, என அரசு கூறுகிறது. இதன்படி, 4 சதவீத பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.
யாருக்கு பாதிப்பு?
தனிநபர்கள் இடையிலான பரிவர்த்தனைக்கு எம்டிஆர் பொருந்தாது. எனவே, தனிநபர்கள் கட்டணம் இல்லாமல் எப்போதும் போல் பரிவர்த்தனை செய்யலாம்.
தற்போதைய நிலையில் தனிநபர்கள் ஒரு லட்சம் மதிப்பு வரை நாள் ஒன்றுக்கு 20 பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை, என வரும் போது இந்த மதிப்பு அதிகம் இருக்கலாம்.
வணிகர்களுக்கும் ரூ.2000 வரையான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் பொருந்தாது. சிறு வணிகர்கள் யுபிஐ வாயிலாக மாதம் ஒரு லட்சம் வரை பெறுகின்றனர். யுபிஐ உடன் இணைந்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு இந்த கட்டணம் பொருந்தாது.
இதர கட்டணங்கள்
ரூ.75,000 மற்றும் அதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் ரூ.300 ஆக இருக்கும்.
ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் போன்ற குறைந்த லாப விகிதம் கொண்ட துறைகளில் ரூ.2000க்கு மேலான பரிவர்த்தனைகள் ரூ.5 எனும் தட்டையான கட்டணம் கொண்டிருக்கும். குறைந்த லாப விகிதத்தில் இயங்கும் பொது சேவைகளுக்கு தட்டையான கட்டணம் நிலைத்தன்மையை அளிக்கும், என அரசு தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் போன்றவற்றுக்கான பேமெண்டிற்கு 0.02 சதவீத எம்டிஆர் பொருந்தும். இது பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 ஆக இருக்கும். நிதிச்சந்தையில் சில்லறை முதலீட்டாளர் பங்கேற்பை தொடர்ந்து ஊக்குவிக்க இந்த குறைந்த விகிதம் என அரசு தெரிவித்துள்ளது.
எம்டிஆர் ஏன்?
யுபிஐ அமைப்பை மேலும் துடிப்பு மிக்கதாக மாற்ற, சில வணிகர் பரிவர்த்தனை பிரிவில் எம்டிஆர் அவசியம், என அரசு தெரிவித்துள்ளது. இந்த வருவாய், உள்கட்டமைப்பு உறுதி, புதுமையாக்கம், மற்றும் சைபர் பாதுகாப்பை அதிகரிக்க உதவும். எம்டிஆர் தொகை, இந்த சூழலில் உள்ள வங்கிகள், பேமெண்ட் நிறுவனங்களுக்கு பிரித்தளிக்கப்படும். யுபிஐ விரிவாக்கத்திற்கு இது உதவும்.

இதர அம்சங்கள்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக நுகர்வோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த கட்டணம் வணிகர் பேமெண்ட் சூழலுக்குள் வருகிறது.
வணிகர்கள் இந்த கட்டணத்தை நுகர்வோருக்கு மாற்றாமல் இருப்பதை உறுதி செய்ய வங்கிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. யுபிஐ சேவை நிறுவனங்கள் மேடை கட்டணம் அல்லது இதர மறைமுக கட்டணம் விதிக்க முடியாது.
யுபிஐ பத்தாண்டுகள்
யுபிஐ பரிவர்த்தனை முறை 2016ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி அமல் செய்யப்பட்டது. ஸ்மார்ட் போன் மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இது பிரதானமாக வழி வகுத்தது.
யுபிஐ மேடையை தேசிய பேமெண்ட் கவுன்சில் நிர்வகிக்கிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் சில்லறை பரிவர்த்தனையை நிர்வகிக்கிறது. இந்த அமைப்பு 2008ல் ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த அமைப்பு டிஜிட்டல் பேமெண்ட் சேவையாளர்களுக்கு விரிவாக்கப்பட்டது.
யுபிஐ பரிவர்த்தனைகள் 2016-17 ல் ரூ.2 கோடியில் இருந்து 2025-26 ல் ரூ.24,162 கோடியாக விரிவாகியுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகள் மதிப்பு ரூ.0.07 லட்சத்தில் இருந்து ரூ.314 கோடியாக உயர்ந்துள்ளது.
யுவர்ஸ்டோரி குழு, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

