இந்தியாவின் 300 நகரங்களுக்கு விரிவடையும் Amazon Now ; இந்தியா வந்துள்ள CEO ஆன்டி ஜெஸி அறிவிப்பு!
இதன் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நுண் மையங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களின் எண்ணிக்கையை அமேசான் அதிகரிக்க உள்ளது.
அமேசானின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜெஸி இந்தியா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நிறுவனத்தின் க்விக் காமர்ஸ் சேவையான Amazon Now-வை நாட்டின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் வலைப்பதிவு தகவல்களின்படி, அமேசான் நவ் தற்போது பெங்களூரு, டெல்லி-என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத், அமிர்தசரஸ் மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களில் 15 இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதன் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நுண் மையங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களின் எண்ணிக்கையை அமேசான் அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் மளிகைப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், உறைபதன உணவுகள், தனிநபர் பராமரிப்பு பொருட்கள், ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், சிறிய மின்சாதனங்கள், வீட்டு மற்றும் சமையலறைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான பொருட்களின் கிடைக்கும் அளவு விரிவுபடுத்தப்படும்.

அமேசான் நவ் சேவை முதன்முதலாக ஜூன் 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமானதிலிருந்து ஒவ்வொரு காலாண்டிலும் ஆர்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் அமேசான் செயல்பாடுகளின் வரலாற்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் பிரிவாக இது மாறியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் இந்தியாவின் நாட்டுத் தலைவர் சமீர் குமார் கூறுகையில்,
“வாடிக்கையாளர்களிடமிருந்து, குறிப்பாக பிரைம் உறுப்பினர்களிடமிருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறோம். அமேசான் நவ்-ஐ பயன்படுத்தத் தொடங்கிய பிறகு அவர்கள் ஷாப்பிங் செய்யும் அளவு மூன்று மடங்காக அதிகரிக்கிறது. இதனால் எங்கள் விரிவாக்கத்தை மேலும் வேகப்படுத்தியுள்ளோம். இந்தியாவின் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டெலிவரி சேவையை வழங்க உள்ளோம்,” என்றார்.
மேலும், இந்த சேவையை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் பணியில் அமேசான் ஈடுபட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனுடன், டெலிவரி பணியாளர்களுக்கான நலத்திட்டமாக ‘Sammaan’ என்ற புதிய திட்டத்தையும் அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு, பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
அமேசான் இந்தியா சமீபத்தில் அறிவித்துள்ள 300 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஒரு பகுதி, இந்த Sammaan திட்டத்தை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெலிவரி பணியாளர்களுக்கான ஓய்வு மையங்களாக செயல்படும் அஷ்ரே மையங்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டுக்குள் 250 ஆக உயர்த்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. இந்த மையங்கள் அமேசான் மட்டுமின்றி, துறையில் உள்ள எந்த நிறுவனத்தின் டெலிவரி பணியாளர்களும் பயன்படுத்தும் வகையில் திறந்திருக்குமென நிறுவனம் தெரிவித்துள்ளது.

