அமேசான் விரிவாக்கம்: 2030க்குள் உலகளவில் 1 லட்சம் மின்சார டெலிவரி வேன்கள்!
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சந்தைகளில், மின்சார சரக்கு சைக்கிள்கள், மின்சார மோபெட்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மின்சார வாகன மாதிரிகளை நிறுவனம் சோதனை அடிப்படையில் இயக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 2030ஆம் ஆண்டுக்குள் தனது உலகளாவிய செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார டெலிவரி வேன்களின் எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 2025 இறுதிக்குள் உலகம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட மின்சார டெலிவரி வேன்களை நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்தியாவில் தனது மின்சார வாகனப் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மின்சார இலகுரக மற்றும் நடுத்தர ரக சரக்கு லாரிகளை அறிமுகப்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்திய சாலைகளில் 10,000-க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் அமேசானின் டெலிவரி சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சந்தைகளில், மின்சார சரக்கு சைக்கிள்கள், மின்சார மோபெட்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மின்சார வாகன மாதிரிகளை நிறுவனம் சோதனை அடிப்படையில் இயக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமேசானின் நிறைவேற்ற மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விநியோகிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்தியாவில் அமேசான் மேற்கொள்ளும் டெலிவரிகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவை இருசக்கர வாகனங்கள் மூலமாக நடைபெறுகின்றன. நகர்ப்புற போக்குவரத்து நெரிசலில் எளிதாகச் செல்லுதல், குறைந்த செலவு, எளிதான நிறுத்த வசதி மற்றும் வேகமான விநியோகம் போன்ற காரணங்களால் இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
2019ஆம் ஆண்டு அமேசான் இணைந்து தொடங்கிய ‘கிளைமேட் பிளெட்ஜ்’ முயற்சியின் கீழ், 2040ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இலக்கை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, Rivian நிறுவனத்துடன் கூட்டாண்மை ஏற்படுத்தி 1 லட்சம் மின்சார டெலிவரி வேன்களுக்கு ஆர்டர் அளித்துள்ளது.
இதுகுறித்து அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், ஒரு எளிய வரைபடமாக இருந்த யோசனை இன்று சாலைகளில் ஓடும் தனிப்பயன் மின்சார டெலிவரி வாகனங்களாக மாறியுள்ளது. 2030க்குள் உலகளவில் குறைந்தது 1 லட்சம் மின்சார டெலிவரி வேன்களை இயக்கும் எங்களது உறுதிப்பாட்டின் மூலம், ஆண்டுதோறும் பல மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.

