விலை ரூ.10 முதல்... - ஐஸ்கிரீம் சந்தையில் களமிறங்கிய ரிலையன்ஸ் கன்ஸ்யூமர்!
தற்போது மேற்கு இந்தியாவில் பாம்பே க்ரீமரி ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. விரைவில் நாடு முழுவதும் விற்பனையை விரிவுபடுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் (RIL) நுகர்பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), ரூ.10 முதல் விலையிலான பொருட்களுடன் ஐஸ்கிரீம் சந்தையில் களமிறங்கியுள்ளது.
‘பாம்பே க்ரீமரி’ என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த ஐஸ்கிரீம் வகைகள், “மலிவான விலையில் உலகத்தரம்” என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. கோன், கப், டப், பார் மற்றும் ஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு வர உள்ளன.
தற்போது மேற்கு இந்தியாவில் பாம்பே க்ரீமரி ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. விரைவில் நாடு முழுவதும் விற்பனையை விரிவுபடுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் கூறுகையில், “பால் பொருட்களுக்கு எந்தவிதமான சமரசமும் தேவையில்லை என்ற எளிய எண்ணத்தின் அடிப்படையில் பாம்பே க்ரீமரியை உருவாக்கியுள்ளோம்.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் ஐஸ்கிரீம் சந்தைக்குள் நுழைவது மட்டுமல்ல; இந்தத் துறையில் நீண்டகால அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளது.
உண்மையான பால் கிரீமைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாம்பே க்ரீமரி, ஒவ்வொரு முறையும் உண்மையான ஐஸ்கிரீமின் சுவையை உறுதி செய்வதுடன், இந்தியக் குடும்பங்கள் வாங்கக்கூடிய விலையிலும் கிடைக்கும்” என்றார்.
நாடு முழுவதும் உள்ள தனது வலுவான விநியோக வலையமைப்பு, விரிவான சில்லறை விற்பனைத் திறன் மற்றும் நுகர்வோர் குறித்த புரிதல் ஆகியவை ஐஸ்கிரீம் சந்தையில் நீண்டகாலமாக நிலையான இடத்தை உருவாக்க உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் ஏற்கெனவே பானங்கள், உணவு மற்றும் சிற்றுண்டிகள், தனிநபர் பராமரிப்பு, வீட்டு மற்றும் துணி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.
வெகுஜன நுகர்வோரை இலக்காகக் கொண்டு போட்டித்தன்மை வாய்ந்த விலைகளில் பொருட்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது ஐஸ்கிரீம் சந்தையிலும் தனது தடத்தைப் பதிக்கத் தொடங்கியுள்ளது.

