கடனில்லா நிறுவனமானது ஏபிஐ ஹோல்டிங்ஸ்!- ரூ.1,050 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது!
தைரோகேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் தமக்கிருந்த பங்குகளில் ஒரு பகுதியை சமீபத்தில் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை மற்றும் நிறுவனத்தின் உள்நாட்டு வருவாய் மூலம் இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சுகாதாரத் தளமான ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனம், ரூ.1,050 கோடி மதிப்பிலான நிலுவைக் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தி தற்போது கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளது. ஃபார்ம்ஈஸி, தைரோகேர் மற்றும் டோகான் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமாக ஏபிஐ ஹோல்டிங்ஸ் செயல்பட்டு வருகிறது.
தைரோகேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் தமக்கிருந்த பங்குகளில் ஒரு பகுதியை சமீபத்தில் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை மற்றும் நிறுவனத்தின் உள்நாட்டு வருவாய் மூலம் இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

Image: Shutterstock
ஏபிஐ ஹோல்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, தைரோகேரின் விளம்பரதாரரும் (Promoter), ஹோல்டிங் நிறுவனமுமான Docon Technologies பிரைவேட் லிமிடெட், தைரோகேரின் 1,57,69,696 பங்குகளை சந்தைப் பரிவர்த்தனைகள் மூலம் விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் சுமார் 9.90 சதவீதமாகும். இந்த விற்பனைக்குப் பிறகும், தைரோகேரின் விளம்பரதாரர் மற்றும் ஹோல்டிங் நிறுவனமாகத் தொடரும் டோகானிடம் 51.02 சதவீதப் பங்குகள் உள்ளன.
கடனைத் திருப்பிச் செலுத்தியதன் மூலம், டோகான் வசமுள்ள மீதமுள்ள தைரோகேர் பங்குகளுக்கு வைக்கப்பட்டிருந்த அடமானமும் (pledge) முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடனுடன் தொடர்புடைய அனைத்து அடமானங்களும் நீக்கப்பட்டு, தைரோகேரில் டோகான் வைத்துள்ள 51.02 சதவீதப் பங்குகளும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத பங்குகளாக மாறியுள்ளன.
இதுகுறித்து ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும் குழும தலைமை நிதி அதிகாரியுமான அலோக் குமார் ஜக்னானி கூறுகையில்,
“எங்களது காலக்கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளோம். அதையும் தைரோகேரில் எங்களது பங்கு 51 சதவீதத்துக்குக் கீழ் குறையாமல் செய்துள்ளோம். வளர்ச்சிக்கும் நிதி ஒழுக்கத்துக்கும் இடையே சமரசம் செய்யாத எங்களது மூலதன ஒதுக்கீட்டுக் கொள்கையை இது பிரதிபலிக்கிறது. குழுமத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் விரைவில் லாபகரமாக மாறவுள்ள நிலையில், லாப-நஷ்டக் கணக்கில் இனி எந்தச் சுமையும் இல்லை. இதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம் உருவாகியுள்ளது,” என்றார்.
காலக்கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதுடன், குழும நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நிலைக்கு நகர்ந்து வருவதால், அடுத்தகட்டமாக லாபகரமான வளர்ச்சி, நிதி ஒழுக்கத்துடன் கூடிய செயல்பாடு மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போவதாக ஏபிஐ ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏபிஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான சித்தார்த் ஷா கூறுகையில்,
“தைரோகேரை கையகப்படுத்தியது ஏபிஐ நிறுவனத்துக்கு சிறப்பாக அமைந்துள்ளது. 2021 ஜூலையில் நாங்கள் அறிவித்த திறந்த சலுகையில் ஒரு பங்குக்கு ரூ.433 என்ற விலையில் பங்குகளை விற்பனை செய்யாமல் தொடர்ந்து வைத்திருந்த பங்குதாரர்கள், போனஸ் பங்கு சரிசெய்தலுக்குப் பிறகு, 2026 ஆகஸ்ட் 14-ஆம் தேதி வர்த்தகம் முடிவடைந்தபோது ஒரு பங்கின் மதிப்பு ரூ.653 என்ற நிலையில் உள்ளனர். இதில் கிடைத்த டிவிடெண்ட் தொகையையும் சேர்த்தால், அவர்களுக்கு 51 சதவீத வருமானம் கிடைத்துள்ளது,” என்றார்.

