HBOX முதலீட்டில் இருந்து 23 மடங்கு வருமானம் ஈட்டிய Arali Ventures
நான்கு ஆண்டுகளுக்கு முன் HBOX-இல் முதலீடு செய்த Arali Ventures, இந்த முதலீட்டின் மூலம் 120%-க்கும் அதிகமான Internal Rate of Return (IRR) பெற்றுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடக்க நிலை வென்ச்சர் கேபிட்டல் நிறுவனமான Arali Ventures, தொலைதூர டிஜிட்டல் சுகாதார சேவை நிறுவனமான HBOX-இல் செய்த முதலீட்டிலிருந்து முழுமையாக வெளியேறி 23 மடங்கு (23x) வருமானம் ஈட்டியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் HBOX-இல் முதலீடு செய்த Arali Ventures, இந்த முதலீட்டின் மூலம் 120%-க்கும் அதிகமான Internal Rate of Return (IRR) பெற்றுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. Charlesbank Technology Opportunities Fund நிறுவனத்திடமிருந்து HBOX புதிய முதலீட்டை திரட்டியதையடுத்து, Arali Ventures தனது முழு வெளியேற்றத்தை (full exit) நிறைவேற்றியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் Arali Ventures பெற்ற இரண்டாவது வெளியேற்றம் இதுவாகும்.
HBOX நிறுவப்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே முதலீடு செய்ததாக Arali Ventures தெரிவித்துள்ளது. சிறப்பு மருத்துவ சேவைகளை மாற்றியமைக்கும் AI-மையமான (AI-first) மெய்நிகர் சுகாதார தளம் என்ற நிறுவனர் குழுவின் நீண்டகால பார்வையே இந்த முதலீட்டிற்கு காரணம், என நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டுகளில் HBOX வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், செலவுக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறனை பேணியுள்ளதாகவும் Arali Ventures குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து Arali Ventures நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரரான ராஜீவ் ரகுநந்தன் கூறுகையில்,
“ஆரம்ப கட்டத்திலேயே உறுதியான நம்பிக்கையுடன் முதலீடு செய்வதும், நிறுவனர் குழுக்களுடன் நெருக்கமான கூட்டாண்மையை உருவாக்குவதுமே Arali-யின் அடிப்படை அணுகுமுறை. இந்தியாவில் உருவாகி, உலகளவில் வளரக்கூடிய மற்றும் துறையில் முன்னணி நிறுவனங்களாக மாறக்கூடிய எண்டர்பிரைஸ் நிறுவனங்களை ஆதரிப்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்,” என்றார்.
Arali Fund I மூலம், FinBox நிறுவனத்தில் பகுதி வெளியேற்றத்தையும், Wingman மற்றும் Insent நிறுவனங்களில் முழு வெளியேற்றத்தையும் Arali Ventures ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இதன் மூலம் மொத்தமாக 2 மடங்கு (2X) வருமானம் கிடைத்துள்ளது.
தற்போது $35 மில்லியன் மதிப்புள்ள Fund II மூலம் முதலீடு செய்து வரும் Arali Ventures, Pibit.ai, Protecto, DeepMatrix, 50Fin, FealtyX, Jidoka Technologies, Harvested Robotics, Bidaal, Ezobooks உள்ளிட்ட பல நிறுவனங்களை ஆதரித்து வருகிறது.
2018ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Arali Ventures, தனது முதல் நிதியாக $7 மில்லியன் திரட்டியது குறிப்பிடத்தக்கது.
