Zoho-வின் அரட்டை செயலியில் ஆதார் மூலம் சரி பார்த்தல் வசதி அறிமுகம்!
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ கார்ப்பரேஷனின் மேசேஜிங் சேவையான ‘அரட்டை’ செயலியில், ஆதார் மூலமான அடையாளம் சரிபார்த்தல் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ கார்ப்பரேஷனின் மேசேஜிங் சேவையான 'அரட்டை' செயலியில், ஆதார் மூலமான அடையாளம் சரிபார்த்தல் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனியுரிமை சார்ந்த அம்சங்களை வலுவாக்கும் வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை மேசேஜிங் செயலியை, ஜோஹோ நிறுவனம் 2021ல் அறிமுகம் செய்தது. தரவுகள் பின் தொடர்தல், இலக்கு விளம்பரங்கள், மறைமுக கண்காணிப்பு போன்றவை இல்லாத மேசேஜிங் சேவையாக இது உருவாக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

செயலி பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பான முறையில் கையாளப்படுவதையும் நிறுவனம் உறுதி செய்கிறது. ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட 10 இந்திய மொழிகளில் இந்த சேவை செயல்படுகிறது.
இந்நிலையில், ஆதார் சார்ந்த அடையாளம் சரிபார்த்தல் வசதியை அறிமுகம் செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது பயனாளிகள் சரி பார்க்கப்பட்ட கணக்குகளில் இருந்து மட்டும் தகவல்களை பெற மற்றும் ஸ்பேம் செய்திகளை தவிர்க்கவும் வழி செய்கிறது. பயனாளிகள் இந்த வசதியை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்களில் மற்றும் விணடோஸ், மேக் கம்ப்யூட்டர்களில் அணுகலாம்.
இத சரிபார்த்தல் செயல்முறையை இயக்க, பயனாளிகள் தங்கள் அறிமுக பக்கத்திற்கு சென்று, வெரிபிகேஷன் வாய்ப்பு மூலம் ஆதார் செயலி பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த சரி பார்த்தலுக்கு பிறகு பச்சை நிற பேட்ஜ் இடம்பெறும். இந்த அம்சம் பயனாளிகள் விருப்ப தேர்வுக்குறியது மற்றும் ஆதார் விவரங்கள் சேமிக்கப்படாது, என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வெரிபிகேஷம் திட்டம், கணக்குகள் தொடர்பான நிலையை காட்சி நோக்கில் உணர்த்துகிறது. வழக்கமான வெரிபிகேஷன் பக்கம் நீல பேட்ஜ் மற்றும் அரசுத் துறை பக்கங்கள் கிரே பேட்ஜ் கொண்டிருக்கும்.
மேலும், பல புதிய அம்சங்களையும் பாதுகாப்பு நோக்கில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உரையாடல்கள் என்கிரிப்ஷன் வசதி கொண்டதாக இருக்கும். என்கிரிப்ஷன் முறையிலான பேக்கப் வசதியும் இருக்கும். பயனாளிகள் தங்கள் போன் எண்ணை மறைக்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. மேலும் கூட்டங்கள் அல்லது சந்திப்புகளை திட்டமிடும் அம்சமும் அளிக்கப்படுகிறது.
"நுகர்வோர் மேசேஜிங் பரப்பு நம்பகத்தன்மை சார்ந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. நூதனமான மோசடிகள், டிஜிட்டல் மோசடி உள்ளிட்டவை அச்சுறுத்துகின்றன. அரட்டை செயலியை பொருத்தவரை, தனியுரிமை மற்றும் தொழில்நுட்ப இறையாண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். விருப்பத்தேர்வு கொண்ட் ஆதார் மூலம் சரி பார்க்கும் வசதியை அறிமுகம் செய்வதன் மூலம், நுகர்வோர் அனுபவம் பாதிக்கப்படாத வகையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறோம்,” என ஜோஹோ குலோபல் பிராடக்ட் ஹெட் ஜெரி ஜான் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

