'சாலைக் குழி எச்சரிக்கை' வசதியை ஜென் 2 ஸ்கூட்டர்களில் அறிமுகப்படுத்திய ஏதர் எனர்ஜி!
இந்த புதிய வசதி, வழிகாட்டி (Navigation) பயன்படுத்தும் போது, சாலையில் முன்னால் இருக்கும் குழிகள், சேதமடைந்த சாலைப் பகுதிகள், மேடு–பள்ளங்கள் மற்றும் வேகத்தடைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும்.
மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி தனது ஜென் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக ‘சாலைக்குழி எச்சரிக்கை’ (Pothole+ Alerts) என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதி, வழிகாட்டி (Navigation) பயன்படுத்தும் போது, சாலையில் முன்னால் இருக்கும் குழிகள், சேதமடைந்த சாலைப் பகுதிகள், மேடு–பள்ளங்கள் மற்றும் வேகத்தடைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும். ஏதரின் இணைய இணைப்பு கொண்ட ஸ்கூட்டர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட சாலைத் தரவுகளின் அடிப்படையில் இந்த சாலை நுண்ணறிவு (Road Intelligence) உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் தற்போது Ather 450 Apex, 450X மற்றும் Rizta Z உள்ளிட்ட ஜென் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தகுதியான ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Ather Energy
ஏதர் எனர்ஜியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த வசதியை உருவாக்கும் முயற்சி சுமார் ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக தெரிவித்தார்.
"சவால் யோசனையில் இல்லை; அதற்குத் தேவையான தரவுகளைப் பெறுவதில்தான் இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.
ஏதரின் இணைய இணைப்புடன் இயங்கும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், இந்த வசதியை செயல்படுத்தத் தேவையான அளவிலான சாலைத் தகவல்களை நிறுவனம் சேகரிக்க முடிந்ததாகவும், அவர் தெரிவித்தார்.
ஏதரின் ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் உள்ளமைக்கப்பட்ட கணினி அமைப்பும் இணைய இணைப்பும் இருப்பதால், நீண்டகாலமாக பெருமளவு தரவுகளை சேகரித்து, மென்பொருள் சார்ந்த பல புதிய வசதிகளை உருவாக்க முடிந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழிகாட்டி பயன்படுத்தும் போது வரும் எச்சரிக்கைகள் ஸ்கூட்டரின் டாஷ்போர்டில் காட்டப்படுவதுடன், ஸ்கூட்டரின் ஒலியமைப்பு, Ather Halo ஸ்மார்ட் ஹெல்மெட் அல்லது புளூடூத் ஹெட்செட் மூலமாகவும் ஒலியாக அறிவிக்கப்படும். இதன் மூலம் ஓட்டுநர்கள் சாலையிலிருந்து கவனத்தைத் திருப்பாமல் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

