முப்பதே நிமிடங்களில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லலாம்... இந்தியாவிற்கு வருகிறது ’ஹைப்பர்லூப்’
எலன் மஸ்க்; தொழில்நுட்பம் மற்றும் தொழில் உலகத்தின் பிரபலமான பெயர். SpaceX, PayPal, Tesla Motors ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் மற்றும் தனது மாபெரும் தயாரிப்பான ’ஹைப்பர்லூப் ஒன்’ Hyperloop One இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் இந்தியாவில் நுழைவதற்கான பணிகளை தொடங்கிவிட்டனர். அதற்காக சாலைப்போக்குவரத்து மத்திய அமைச்சகத்திடம் தனது திட்ட மாதிரியை அளித்துள்ளது.
ஹைப்பர்லூப் ஒன், என்பது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மக்களை ஏற்றிச்செல்லும் ஒரு வாகனம் ஆகும். இது கான்க்ரீட் பில்லர்களால் கட்டப்பட்ட சுரங்கம் போன்ற இடைவேளியில் செல்லக்கூடிய வாகனம். இது மணிக்கு 1200 கிமி வேகத்தில் பயணிக்கக்கூடியது. சுரங்கங்களில் உள்ள வெற்றிடத்தின் காரணமாக, இது அதிவேகமாக செல்லும். சோலார் பேனல்கள் கொண்டு இது இயங்குவதால் இதற்கான செயல்பாடுகள் செலவும் குறைவாக இருக்கும்.
சென்னை மற்றும் பெங்களுரு தடங்கள் இடையே இந்த ஹைப்பர்லூப் ஒன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதைத்தவிர சென்னை-மும்பை, பெங்களுரு-திருவனந்தபுரம், மும்பை-டெல்லி என்று பிற தளங்களிலும் இது அமைக்கப்படும் என்று தெரிகிறது.
ரயில்வே துறையில் புதிய முயற்சியாக அறிமுகமாகியுள்ள இந்த வாகனம், துபாய்-அபுதாபி இடையே ட்ராக் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளில் இயக்கத்துக்குவரும் என்று தெரிகிறது. 90 நிமிடங்களில் இந்த இரு இடங்களிடையே ஆகும் பயண நேரம் ஹைப்பர்லூப்பில் சென்றால் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே ஆகுமாம். இருப்பினும் இந்திய பொறியாளர்கள் இந்த திட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவை இன்னமும் தரவில்லை என்று தெரிகிறது. இது பற்றி ரயில்வேத்துறை அதிகாரி டைம்ஸ் ஆப் இந்தியா இடம் கூறுகையில்,
“அதிவேக இணைப்பு வரவேற்கக்கூடியது. ஆனால் பல காரணங்களால் இது சாத்தியப்பட குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். இதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் மேலும் அரசின் அனுமதிகள் வாங்கவும் காலம் எடுக்கும். அதே சமயம் பயணத்துக்கான டிகெட் விலையை நிர்ணயிப்பதிலும் மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அரசு குறைந்த கட்டணத்தை வலியுறுத்தும். தற்போது உள்ள திட்டத்தின் படி கட்டுமானப் பணிகளின் செலவுகளின் அடிப்படையில் பெங்களுரு செல்ல ரூ.6000 ஆகும் என தெரிகிறது. இது பின்னடைவை தரலாம்,” என்றார்.
சென்னை-பெங்களுரு விமான டிகெட் விலை தற்போது 2000 முதல் 3000 ரூபாய் வரை உள்ளது. ஆனால் ஹைப்பர்லூப்பில் செல்ல 6000 ரூபாய் ஆகும் என்றால் அது மக்களிடம் எவ்வாறு சென்றடையும் என்று பார்க்கவேண்டும். அரசு கட்டண விலையின் அடிப்படையிலே இதற்கான அனுமதியளிப்பது பற்றி முடிவெடுக்கும்.
கேட்பதற்கு உற்சாகமாக இருக்கும் இத்திட்டத்தை அமல்படுத்த, பயண பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள், கட்டிடங்களை அகற்ற வேண்டிவரும். இது இந்தியாவில் நினைவாவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் ஆகும், பெருத்த செலவும் பிடிக்கும். ஹைப்பர்லூப் ஒன், ஒரு சிறந்த முயற்சி, இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றாலும் இதிலுள்ள சில குறைபாடுகள் நீக்கப்பட்டால் மட்டும் பொது மக்களிடம் சென்றந்து வெற்றியடையும்.
கட்டுரை: Think Change India