பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடம்; சென்னை 2ம் இடம் - அவதார் அறிக்கை!
பெண்கள் பணிபுரிவதற்கும், வாழ்வதற்கும் ஏற்ற சிறந்த இந்திய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.
பெண்கள் பணிபுரிவதற்கும், வாழ்வதற்கும் ஏற்ற சிறந்த இந்திய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு மீண்டும் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அவதார் குழுமம் வெளியிட்டுள்ள "இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்" (Top Cities for Women in India - TCWI) என்ற அறிக்கையின் நான்காவது பதிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் 10 இடங்கள்:
பெண்கள் பணிபுரிவதற்கும், வாழ்வதற்கும் ஏற்ற இடமாக பெங்களூருவைத் தொடர்ந்து சென்னை, புனே, ஹைதராபாத், மும்பை, குருகிராம், கொல்கத்தா, அகமதாபாத், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் சிறந்த 10 இடங்களைப் பிடித்துள்ளது.
தென்னிந்தியாவின் தொடர் ஆதிக்கமாக முதல் 10 இடங்களில் 5 நகரங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.வட இந்தியாவிலிருந்து குருகிராம் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

தரவரிசை விவரங்கள் (Top Rankings)
இந்தத் தரவரிசையானது அனைத்தையும் உள்ளடக்கிய நகர மதிப்பெண் (City Inclusion Score - CIS) அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இது சமூக உள்ளடக்கம் (பாதுகாப்பு, வாழ்வாதாரம்) மற்றும் தொழில்துறை உள்ளடக்கம் (பெண்களுக்கு வேலைவாய்ப்பு) ஆகியவற்றை உள்ளடக்கியது.
பெங்களூரு (மதிப்பெண்: 53.29): தொழில்துறை உள்ளடக்கம் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை எளிதாக்குதலில் தொடர்ந்து முன்னிலை வகித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை (மதிப்பெண்: 49.86): பட்டியலில் இரண்டாம் இடம். பாதுகாப்பு வழிமுறைகள், பொது சேவைகள், போக்குவரத்து வசதிகள், சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகல் போன்ற சமூக உள்ளடக்கக் காரணிகளில் (Social Inclusion) சென்னை சிறந்து விளங்குகிறது.
புனே (46.27), ஹைதராபாத் (46.04) மற்றும் மும்பை (44.49) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
குருகிராம்: கடந்த ஆண்டு 9-வது இடத்திலிருந்த குருகிராம், இம்முறை முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மண்டல மற்றும் பிற நகரங்களின் நிலை
சமச்சீர் நகரங்கள்: ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் புனே ஆகியவை சமூக மற்றும் தொழில்துறை காரணிகளில் சமச்சீரான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
மும்பை: தொழில்துறையில் வலுவாக இருந்தாலும் (IIS: 69.00), சமூக உள்ளடக்கத்தில் (SIS: 38.44) சற்று பின்தங்கியுள்ளது.
டெல்லி, குருகிராம், நொய்டா: இங்குத் தொழில் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற சமூகக் காரணிகளில் இவை பின்தங்கியுள்ளன.
திருவனந்தபுரம், திருச்சி, சிம்லா: இந்நகரங்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வியல் சூழலில் மிகச் சிறப்பாக உள்ளன. ஆனால் பெரிய அளவிலான முறையான வேலைவாய்ப்புகளில் இவை பின்தங்கியுள்ளன.
இரண்டாம் கட்ட நகரங்கள் (Tier-2 Cities): பெருநகரங்களைத் தாண்டி, இரண்டாம் கட்ட நகரங்களும் பெண்கள் பணிபுரிய ஏற்ற இடங்களாக வளர்ந்து வருவது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tier-2 நகரங்களின் முன்னேற்றம்
2025 TCWI தரவரிசையில் Tier-2 நகரங்கள் முன்னணி இடங்களில் இடம்பெறுதல். இது பெண்களுக்கு ஏற்ற நகர வளர்ச்சி பெரிய மெட்ரோ நகரங்களைத் தாண்டிமற்ற நகரங்களுக்கும் பரவுவதை காட்டுகிறது
- பிராந்திய (Regional) பகுப்பாய்வில் தெற்கு இந்தியா (Southern Region) அனைத்து குறியீடுகளிலும் முதலிடம். இந்த முடிவுகள், சமூக அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும்; கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வாய்ப்புகளில் பெண்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைந்த கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் அணுகுமுறை அங்கு இருப்பதை உணர்த்துகின்றன.
- சமூக அமைப்புகள், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளில் ஒருங்கிணைந்த கொள்கை செயல்பாடு மேற்கு இந்தியா (Western Region) முன்னிலை - தொழில் சேர்க்கையில் முதலிடம்.
- மத்திய மற்றும் கிழக்கு இந்தியா சமூக மற்றும் தொழில் சேர்க்கை இரண்டிலும் பின்தங்கிய நிலை; குறிப்பாக தொழில் சேர்க்கையில் மிகக் குறைவு என்பதை காட்டுகிறது.
இது தொடர்பாக, அவதார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் கூறுகையில்,
"ஒரு பெண் ஒரு நகரத்தில் உண்மையாகவே செழிக்க முடியுமா? என்பதே இந்த ஆய்வின் அடிப்படை கேள்வி. வேலைக்குச் செல்வது, பாதுகாப்பாக உணர்வது மற்றும் தலைமைப் பண்புகளுடன் வளர்வது ஆகியவற்றை நகரங்கள் எந்த அளவுக்கு சாத்தியமாக்குகின்றன என்பதை இந்த அறிக்கை அளவிடுகிறது," என்று தெரிவித்தார்.
இந்த அறிக்கையின்படி, சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற தமிழக நகரங்கள் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.

