Bharat Innovates 2026: உலகின் முதல் 3டி பிரின்டிங் ராக்கெட் இஞ்ஜின் உருவாக்க உதவிய ஐஐடி மெட்ராஸ்
Agnikul Cosmos 3டி பிரின்டிங் மூலமான இஞ்ஜின், மாடுலர் ராக்கெட் மற்றும் நாட்டின் முதல் தனியார் ஏவுதளம் ஆகியவை மூலம் மிகவும் வளைந்து கொடுக்க கூடிய ராக்கெட் ஏவும் வசதியை உருவாக்கி வருகிறது.
விண்வெளித் துறையில் முன்னிலை பெற வேண்டும் எனும் இந்தியாவின் லட்சியம் இனியும் அரசு மட்டும் சார்ந்தது அல்ல. இளம் தனியார் நிறுவனங்களும் இதில் பங்கேற்று வருகின்றன.
பிரான்ஸில் நடைபெறும் 'பாரத் இன்னவேட்ஸ் 2026' மூலம், கல்வி அமைச்சகம் மிக முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் புதிய தலைமுறை தனியார் ஆழ்நுட்ப நிறுவனங்களை ஆதரித்து, அவற்றின் சேவைகளை சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு காட்சிப்படுத்தியது இதற்கு சான்றாக அமைந்தது.
விண்வெளி, மேம்பட்ட கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர், பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் தொழில் 4.0 உள்ளிட்ட 13 முன்னணி துறைகளை சேர்ந்தவைகளாக இந்த முயற்சி அமைந்தது.
இந்தியா - பிரான்ஸ் புதுமையாக்க ஆண்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி ஆய்வு சார்ந்த 120 வர்த்தகங்களை தொழில் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் முன்வைத்தது.
பல ஆண்டுகளாக வலுப்பெற்று வரும் அடித்தளம் மீது இந்த லட்சியம் உருவாகியிருக்கிறது.
தேசிய கல்வி கொள்கை 2020 மூலமான சீர்திருத்தங்கள், SPARC மற்றும் இந்தியாவில் படிப்பது மூலம் சர்வதேச ஆய்வு கூட்டுறவு உள்ளிட்டவை இந்திய கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் விஷயங்கள் மற்றும் யாரை ஈர்க்கின்றன என்பதில் தாக்கம் செலுத்துகின்றன.
கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 2026-ல் 54 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஐஐடி மெட்ராஸ் 47 இடங்கள் முன்னேறி 180-வது இடத்தில் உள்ளது. ஐஐடி டெல்லி 123-வது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழக பிரதிநித்துவத்தில் இந்தியா உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் G20 நாடுகளில் வேகமாக வளரும் உயர் கல்வி அமைப்பாக உள்ளது.
பாரத் இன்னவேட்ஸ் 2026-ல், அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக, புதிய தலைமுறை செயற்கைகோள் திட்டங்களுக்கு விண்வெளியை சாத்தியமாக்கும் நுட்பத்தை உருவாக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் திகழ்கிறது.
சிறிய செயற்கைகோள் நிறுவனங்களுக்கு விண்வெளியை அணுகுவது என்பது சமரசங்கள் கொண்டதாகவே இருக்கிறது. பலரும் பெரிய ராகெட்களில் சிறிய இடத்தை பெற வேண்டியிருக்கிறது. பல மாதங்கள் காத்திருந்து தங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். எனவே, சிறிய நிறுவனங்களுக்கு இத்துறை செலவுமிக்கதாக, சிக்கல்கள் மிகுந்ததாக இருக்கிறது.
ஆனால், செயற்கைகோள்களை செலுத்துவதற்கான தேவை அதிகரிக்கும் நிலையில் அதற்கேற்ற வேகமான தீர்வுகள் அவசியமாகின்றன.
2017-ல் நிறுவப்பட்ட அக்னிகுல் இந்த இடைவெளியை போக்க உருவாக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் இருந்த இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.ஸ்ரீநாத் ரவிசந்திரன், சிறிய நிறுவனங்கள் பாதுகாப்பாக செயற்கைகோளை செலுத்துவது எத்தனை கடினமாக இருக்கிறது, என உணர்ந்த போது நிறுவனம் துவக்கும் எண்ணத்தை பெற்றார்.
ஏவுவதற்கான மேலும் ஏற்ற வாய்ப்புகளை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பை உணர்ந்தார், இணை நிறுவனர் மற்றும் சி.ஓ.ஓ. மொயின் எஸ்பிஎம் உடன் இணைந்தார். வல்லுநர்களை அணுகி இதற்கான வாய்ப்புகளை இருவரும் ஆய்வு செய்தனர். இதன் விளைவாக, ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் தங்களுக்கு ஏற்ற இடம் என உணர்ந்து, சென்னையில் தங்கள் நிறுவனத்தை உருவாக்கினர்.
ராக்கெட் உருவாக்கம்
700 கிமீ நீள்வட்ட பாதையில் 100 கிலோ வரையான பிளேலோடை கொண்டு செல்லக்கூடிய சிறிய ஏவு வாகனம் அக்னிபானை நிறுவனம் உருவாக்கத்துவங்கியது. ஆனால் ராக்கெட்டை விட, அதை உருவாக்கிய முறையில்தான் சிறப்பு உள்ளது.
வழக்கமாக ராக்கெட்களை உருவாக்க, நூற்றுக்கணக்கான சிறிய பாகங்கள் தேவை. இதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானது. அக்னிகுல் வித்தியாசமான வழியை தேர்வு செய்தது. ராக்கெட்டை ஒற்றை ஒருங்கிணைப்பாக முப்பரிமாண அச்சு முறையில் உருவாக்கி எளிமையாக்கியது.
இதன் விளைவாக உருவானதுதான், உலகின் முதல் 3-டி பிரின்ட் முறையில் உருவான அக்னிலெட் ராக்கெட் இஞ்ஜின். முழுவதும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செமி கிரயோஜெனிக் இஞ்ஜினாக விளங்குகிறது. பாதி குளிர்ந்த திரவ ஆக்சிஜன் மற்றும் விமான எரிபொருள் கொண்டு இயங்கும் இது இந்திய ராக்கெட் உற்பத்தியில் ஒரு முக்கிய பாய்ச்சலாக அமைந்தது.
அக்னிபான் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது. தேவைக்கேற்ப அதன் மாடுலர் முதல் நிலை நான்கு முதல் ஏழு இஞ்ஜின்களை கொண்டிருக்கும். இந்த ராக்கெட் டிரக்கில் கொண்டு செல்லக்கூடிய மொபைல் ஏவுதளத்துடன் பொருந்துவது என்பதால், பல இடங்களில் இருந்து செலுத்தலாம். இதன் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைக்கான காப்புரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.
சாதனை தினம்
2024 மே 30-ம் தேதி, காலை 7.15 மணி அளவில் அக்னிபான் SOrTeD ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளம் தனுஷில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இது பல மைல்கற்களை கொண்டது: ஒற்றை 3டி அச்சு என்ஜினால் இயக்கப்படும் உலகின் முதல் வாகனம். இந்தியாவின் முதல் செமி கிரயோஜெனிக் கொண்ட ராக்கெட் ஏவுதல் மற்றும் இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளம் அகியவை.
இந்த ராக்கெட் 20 கிமீ சென்று, அனைத்து திட்ட நோக்கங்களையும் நிறைவேற்றி, 7 கிலோ பிளேலோடை கொண்டு சென்று பின்னர் வங்காள விரிகுடா கடலில் இறங்கியது. இந்த ஏதுவதல் திட்டத்தில் லினக்ஸ் சார்ந்த விமான கம்ப்யூட்டர் மற்றும் ஈத்தர்நெட் சார்ந்த கட்டமைப்பு கொண்டிருந்தது.

ராக்கெட்டுக்கு மேல்...
துவக்கம் முதல் அக்னிகுல் இந்தியாவில் நீண்ட கால நோக்கிலான விண்வெளி உற்பத்திகான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. சென்னை ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில், நிறுவனம் அக்னிகுல் ராக்கெட் ஆலை-01 அமைத்தது. 'இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இஞ்ஜின்' ஆலையான இதில் 3டி பிரிண்டிங் இஞ்ஜின்களை பெரிய அளவில் உற்பத்தி செய்யலாம். லார்ஜ் பார்மெட் அடிட்டிவ் மெட்டல் உற்பத்தி ஆலையையும் அமைத்தது.
2020 டிசம்பரில் இன் - ஸ்பேஸ் திட்டம் மூலம் இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப்'பாக உருவானது. அதன் பின், 2023ல் பி சுற்று நிதி 26.7 மில்லியன் டாலர் உள்பட 40 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் டிட்கோ இந்த ஸ்டார்ட் அப்பில் ரூ.25 கோடி முதலீடு செய்தது. விண்வெளி ஸ்டார்ட் அப் ஒன்றில் அரசு நிறுவனம் முதல் முறையாக பங்கு பெறுகிறது.
தற்போது நிறுவனம் 500 மில்லியன் டாலருக்கு மேல் மதிப்பீடு கொண்டதாக கருதப்படுகிறது. 2028 வாக்கில் ஆண்டுக்கு 50 ராக்கெட் வரை செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக வளரும் வர்த்தக விண்வெளி பரப்பின் மைத்தில் இருக்க விரும்புகிறது.

நீண்ட கால திட்டம்
பத்தாண்டுகளுக்குள் அக்னிகுல் காஸ்மோஸ் இந்தியாவின் கவனிக்கப்படும் விண்வெளி நுட்ப ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக உருவாகி இருக்கிறது. உலக பொருளாதார மன்றத்தின் வளரும் 100 நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளது. ஃபோர்ப்ஸ் ஆசியாவின் 100 கவனிக்க வேண்டிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. 2020 ET ஸ்டார்ட் அப் விருது மற்றும் 2021 தேசிய ஸ்டார்ட் அப் விருது வென்றுள்ளது.
அக்னிகுல் இந்தியாவின் விண்வெளி லட்சியத்தின் புதிய அத்தியாயத்தை பிரதிபலிக்கிறது. அரசு அமைப்புகள் மட்டும் அல்லாமல், நவீன நுட்பத்தை உருவாக்கும் இளம் தனியார் நிறுவனங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் வர்த்தக விண்வெளி சூழல் முதிர்ச்சி அடைந்து வருவதையும் இது உணர்த்துகிறது.
அக்னிகுல் காஸ்மோஸ் போன்ற நிறுவனங்களை கல்வி அமைச்சகம் அங்கீகரிப்பது இந்தியா புதுமையாக்கத்தை நோக்குவதில் ஏற்பட்டிருக்கும் பரவலான மாற்றத்தையும் உணர்த்துகிறது.
புதுமையாக்கத்தை ஆய்வு மற்றும் சோதனையாக மட்டும் பார்க்காமல், உலக அளவில் போட்டி மிக்க தொழில்நுட்பத்தை உருவாக்கும் திறனை இது உணர்த்துகிறது.
ஆங்கிலத்தில்- கேண்டிடா டிசில்வா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan

