ரூ.260 கோடி கடனை அடைக்க பங்குகள் விற்பனை - ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் எடுத்த நடவடிக்கை!
முன்னதாக, தனது 3.93% பங்குகளை அடமானம் வைத்து பாவிஷ் அகர்வால் வாங்கியிருந்த 260 கோடி ரூபாய் கடனை அடைக்க, ஓலாவின் 2.6 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ரூ.91 கோடி கிடைத்துள்ளதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் பாவிஷ் அகர்வால், செவ்வாய்க்கிழமை அன்று பங்குச் சந்தையில் ஒரு 'பல்க் டீல்' (Bulk Deal) மூலம் தனது நிறுவனத்தின் 2.6 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ரூ.91 கோடி கிடைத்துள்ளதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. ஓலா நிறுவனத்தின் 'ப்ரோமோட்டர்' (Promoter) மட்டத்திலான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஓலா எலக்ட்ரிக் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பங்கு விற்பனையின் முக்கிய விவரங்கள்:
இந்த பங்குகள் ஓலா நிறுவனத்தின் மொத்த பங்குகளில் (Equity) சுமார் 0.6 சதவீதமாகும். இவை சராசரியாக ஒரு பங்கு 34.99 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பங்குச் சந்தை தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, பாவிஷ் அகர்வால் இந்நிறுவனத்தில் 30.02 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளார்.
முன்னதாக, தனது 3.93 சதவீத ஓலா எலக்ட்ரிக் பங்குகளை அடமானம் வைத்து பாவிஷ் 260 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். தற்போது திரட்டப்படும் நிதியைக் கொண்டு அந்த முழு கடனையும் திருப்பிச் செலுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அடமானம் வைக்கப்பட்ட பங்குகள் அனைத்தும் விடுவிக்கப்படும்.
இந்த விற்பனை நடவடிக்கைக்குப் பிறகும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் 'புரோமோட்டர்' குழுமத்தின் பங்கிருப்பு சுமார் 34 சதவீதமாகத் தொடரும். இதனால் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பங்குகள் அடமானத்தில் இருப்பதை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற அபாயங்கள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் தடுக்கப்படும். ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எந்தவித 'பங்கு அடமானச் சுமை' (Pledge overhang) இன்றி செயல்பட வேண்டும் என்பதே நிறுவனரின் நோக்கம்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருத்ரிம் AI மற்றும் சந்தை சரிவு:
பாவிஷ் அகர்வால் தனது ஓலா எலக்ட்ரிக் பங்குகளை அடமானம் வைத்து, 'கிருத்ரிம்' (Krutrim) என்ற தனது செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு நிதி திரட்டியிருந்தார். ஆனால், சமீபகாலமாக கிருத்ரிம் நிறுவனம் ஆட்குறைப்பு மற்றும் முக்கிய அதிகாரிகள் விலகல் போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகளும் தற்போது கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. டிசம்பர் 12 அன்று அதன் பங்கு விலை 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரூ.33.17-ஆகக் குறைந்தது. செவ்வாய்க்கிழமை முடிவில், அதன் பங்கு விலை 7.7% சரிந்து ரூ.34.5-ஆக நிலைபெற்றது.
விற்பனையில் தொய்வு:
மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் தனது முன்னிலையைத் தக்கவைக்கப் போராடி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் வெறும் 7,567 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து, மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அதன் சந்தைப் பங்கு (Market Share) 7.2%-ஆகக் குறைந்துள்ளது.
இந்த விற்பனை வீழ்ச்சி நிறுவனத்தின் வருவாயிலும் எதிரொலிக்கிறது.
கடந்த செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 43.1% சரிந்து ரூ.690 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.1,214 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
