அதி நவீன முன்னோடி நுட்ப நிதிக்காக ரூ.400 கோடி நிதி திரட்டிய சென்னை Bluehill.VC
எரிசக்தி, மின்வாகனம், செமிகண்டக்டர், மேம்பட்ட பொருட்கள், பாதுகாப்பு, விண்வெளி, உற்பத்தி, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஸ்டார்ட் அப்'களில் முதலீடு செய்யும் ப்ளுஹில், அடுத்த ஆறு மாதங்களில் ரூ.80 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
அதி நவீன முன்னோடி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் சென்னையைச் சேர்ந்த வென்சர் கேபிடல் நிறுவனம் 'ப்ளுஹில்.விசி' (Bluehill.VC), அதன் ரூ.50 கோடி greenshoe வாய்ப்பிற்கான முழு அளவு சந்தாவுடன் ரூ.400 கோடி முதல் நிதியை நிறைவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
முதலீட்டாளர்களிடம் இருந்து போதிய ஆதரவு இருந்தால் திட்டமிட்டதை விட அதிக நிதி திரட்ட greenshoe வாய்ப்பு வழி செய்கிறது.
சிட்பி, கேரளா மற்றும் உத்தரப்பிரதேச அரசு உள்ளிட்ட நிறுவன கழக முதலீட்டாளர்கள் மற்றும் குடும்ப அலுவலகங்கள், அதிக நிகரமதிப்பு கொண்ட தனிமனிதர்களிடம் இருந்து அதிக பங்கேற்பு கிடைத்துள்ளது, என நிறுவனம் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் ரூ.80 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புளுஹில்.விசி நிறுவனம்; எரிசக்தி, மின்வாகனம், செமிகண்டக்டர், மேம்பட்ட பொருட்கள், பாதுகாப்பு, விண்வெளி, உற்பத்தி, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் உள்ள ஸ்டார்ட் அப்களில் விதை முதல் ஏ சுற்று நிதி வரை முதலீடு செய்கின்றன.
மறு பயன்பாடு ஏவுகனை அமைப்புகளை உருவாக்கி வரும் EtherealX, ட்ரோன் நுட்ப நிறுவனம் ஜெபு இண்டலிஜெண்ட் சிஸ்டம்ஸ், மரபணு சிறுநீரக நோயாளுகளுக்கான மேம்பட்ட சிகிச்சை வழங்கும் ஹெலெக்ஸ், செமிகண்டக்டர் ஸ்டார்ட் அப் Sophrosyne டெக்னாலஜிஸ், சிப் சேவை நிறுவனம் optoML உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
"புதிய நிதி; 15-16 நிறுவனங்கள் கொண்ட முதலீடு தொகுப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. முதலீடு மற்றும் வளர்ச்சி வழிகாட்டல் அணுகுமுறையோடு நிறுவனர்களோடு இணைந்து செயல்படும் அதே நேரத்தில், 1-2 மில்லியன் முதல் நிறுவன நிதிச் சுற்றில் சராசரியாக கவனம் செலுத்த உள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த இருபது ஆண்டுகளாக வென்சர் முதலீடு; நுகர்வோர், மென்பொருள் மற்றும் இணைய வர்த்தகத்தில் அதிகம் இருந்தன. பொறியியல் மற்றும் விஞ்ஞான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நிறுவனங்களால் அடுத்த கட்ட மதிப்பு உருவாக்கப்படும் என நம்புகிறோம்.
”பாதுகாப்பு, செமிகண்டகர், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உலக அளவில் போட்டியில் ஈடுபட தேவையான ஆற்றல், கொள்கை ஆதரவு, தொழில்முனைவு இலட்சியத்தை இந்தியா கொண்டுள்ளது,” என புளுஹில்.விசி இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பாட்னர் மனு ஐயர் கூறியுள்ளார்.
"எங்கள் முதல் நிதிக்கான இறுதி நிறைவு இந்த நம்பிக்கையை உறுதி செய்கிறது. பிரகாசமான நிறுவனர்களைக் கண்டறிந்து அவர்களோடு நீண்ட கால நோக்கில் செயல்படும் எங்கள் ஆற்றல் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உணர்த்துகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
"அதி நவீன முன்னோடி முதலீட்டிற்கு மாறுபட்ட நம்பிக்கை தேவை. இந்நிறுவனங்கள் உருவாக அதிக காலம் தேவை, ஆழமான தொழில்நுட்ப புரிதல் தேவை. ஆனால், இவை வெற்றி பெறும்போது, நகலெடுக்க கடினமான, உலக அளவில் போட்டி மிக்க, ஒரு துறையை வரையறுக்கும் திறன் கொண்ட தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன,” என இணை நிறுவனர் மற்றும் நிர்வாக பார்ட்னர் ஸ்ரீதர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.
"படிப்படியான முன்னேற்றங்களை விட, அடிப்படை கொள்கை மற்றும் தொழில்நுட்ப புதுமையில் நம்பிக்கை கொண்டுள்ள நிறுவனர்களில் கவனம் செலுத்துகிறோம். அதிநவீன முன்னோடி நுட்பம் சார்ந்த நிறுவனர்கள் ஆய்வகங்கள், உற்பத்தி மண்டலங்கள், பாதுகாப்பு திட்டங்கள், பல்கலைகளில் இருந்தும் உருவாவதாக நம்புகிறோம். இத்தகைய ஆரம்ப நிலை நிறுவனர்களை கண்டறிந்து ஆதரிக்கிறோம்,” என்றும் கூறினார்.
யுவர்ஸ்டோரி குழு
Edited by Induja Raghunathan

