ஜீரோ முதலீடு; 7 ஆண்டுகளில், 23 கடைகள், ரூ.30 கோடி டர்ன் ஓவர் - ‘லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ்’ மோகனின் வெற்றிக்கதை!
முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் தொழில்முனைவோர் மோகன் ஜீரோ முதலீட்டில் தொடங்ங்கிய ‘Lakshmi Krishna Naturals’, 7 ஆண்டுகளில் இத்தகைய மிகப் பெரிய பிராண்டாக மாறிய கதை இது.
பவானி அருகே சிறிய கிராமத்தில், குடும்பத்தின் வறுமை நிலையை மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வீட்டிற்கு அருகில் கிடைத்த கரிசலாங்கண்ணி உள்ளிட்ட சில பொருட்களை வைத்து ஹேர் ஆயில் தயாரித்து, தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய மோகன், இன்று 23 நேரடி கடைகள், வெப்சைட், ஆப் மற்றும் அமேசான், ஃப்ளிட்கார்ட் போன்ற தளங்களில் விற்பனை செய்து, ‘லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ்’ என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கி இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அம்மாவுக்காக எடுத்த முடிவு
மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தொழிலில் வெற்றி, சுமார் 200 ஊழியர்களுக்கு சம்பளம் தரும் முதலாளி, கடந்த ஆண்டு ரூ.30 கோடி டர்ன் ஓவர் செய்த லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ் பிராண்டின் நிறுவனர், ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற பெயரில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சமூகசேவை என மோகனை பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
“பவானி அருகே சிறிய கிராமத்தில், வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்தவன் நான். வீட்டில் கஷ்டப்பட்டுத்தான் பொறியியல் படிக்க வைத்தார்கள். நான் முதல் தலைமுறை பட்டதாரி. 2013ம் ஆண்டு பி.டெக் ஐடி முடித்து விட்டு, நானும் மற்றவர்களைப் போல் சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால், சொல்லிக் கொள்வது போல் பெரிய நிறுவனமோ, பெரிய சம்பளமோ எதுவும் அமையவில்லை. வெப்சைட் டிசைனிங் போன்ற சிறுசிறு வேலைகள் செய்து வந்தேன். மாதம் பத்தாயிரம் சம்பளம் சென்னை வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. தினமும் ஒரு வேலைதான் சாப்பாடு,” என்று தன் ஆரம்ப காலத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
தனியாக சென்னையில் நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, ஊரில் என் அம்மாவும் தனியாக வசித்தது மனதிற்கு நெருடலாக இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த வேலையே வேண்டாம் என்று தூக்கிப் போட்டு விட்டு, அம்மாவுக்குத் துணையாக சொந்த ஊருக்குச் சென்று விட்டேன். குடும்பத்தின் வறுமையான சூழலால், நான் ஏதாவது செய்து பணம் சம்பாதித்தே ஆக வேண்டிய நிலை. என்னால் முடிந்த அளவிற்கு ஏதேதோ தொழில் செய்து பார்த்தேன். ஆனால், எதுவும் சரிப்பட்டு வரவில்லை.
2017ம் ஆண்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு மக்களுக்கு ஆர்கானிக் பொருட்கள் மீது கவனம் திரும்பியது. ஆனால் அப்போது ஆர்கானிக் பொருட்கள் என்றால் செக்கு எண்ணெய்யும், நாட்டுச் சக்கரையும்தான் பெரிதாக தெரிந்தது. அழகு சாதனப் பொருட்கள் மீது அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை.
அந்த சூழ்நிலையில்தான், 2018ம் ஆண்டு நான் தொழில் தொடங்கினேன். தொழில் தொடங்க முடிவு செய்தபோது, கையில் பெரிய முதலீடு எதுவும் இல்லை. சொல்லப் போனால் ஜீரோ முதலீட்டில்தான் இந்தத் தொழிலைத் தொடங்கினேன். எங்கள் ஊரிலேயே கிடைத்த கரிசலாங்கண்ணி, கற்றாழை போன்றவற்றைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த எண்ணெய்யை வைத்துத்தான் முதன்முதலில் ஹேர் ஆயில் தயாரித்தேன். ஃபேஸ்புக் மூலம்தான் அதனை விளம்பரம் செய்தேன்.
”இப்போது இருப்பது போல், அப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய, சமூகவலைதளப் பக்கங்கள் எதுவும் இல்லை. ஃபேஸ்புக் மட்டும்தான் அப்போது எனக்கு உதவியாக இருந்தது. நம்பிக்கையை மூலதனமாக வைத்துத்தான் இந்தத் தொழிலுக்குள் வந்தேன்,” என நினைவு கூர்கிறார் மோகன்.

ஏற்றத்தோடு, இறக்கமும் தந்த கொரோனா
இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளப் பக்கங்கள் அவ்வளவாக பிரபலமடையாத அந்தக் காலகட்டத்தில், ஃபேஸ்புக்கில் மட்டுமே தனது பிராண்டை வளர்த்திருக்கிறார் மோகன்.
“நான் இந்தத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில், பியூட்டி பொருட்களில் ஆர்கானிக் என்ற விழிப்புணர்வு அவ்வளவாக மக்கள் மத்தியில் இல்லை. ஒன்று அவர்கள் மிகவும் காஸ்ட்லியான பொருட்களை நம்பினார்கள் அல்லது 10 ரூபாய்க்கு கிடைக்கும் கிரீம்களை நம்பினார்கள். என்னைப் போல் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கும் மக்களுக்கென, நடுத்தர விலையில் தரமான பொருட்கள் மார்க்கெட்டில் இல்லை. எனவே இதுதான் சரியான களம் என நான் முடிவு செய்தேன்.”
டயர் 2 மற்றும் 3 மக்கள்தான் எனது டார்க்கெட் கஸ்டமர்கள் என தெளிவாக சிந்தித்தேன். அதோடு, தலைமுடி உதிர்வு, முகத்தில் பரு என பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாக எனது தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தேன். தென்னிந்தியாவில் இப்படிப்பட்ட சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்ட முதல் கம்பெனி என்னுடையதுதான்.
ஃபேஸ்புக்கில் சீரியல் நடிகைகள் மூலம் எனது பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தேன். கொரோனா ஊரடங்கு சமயம் எனக்கு மிகவும் சாதகமானது என்றுதான் கூற வேண்டும். அனைவரும் வீட்டிலேயே இருந்ததாலும், ஆரோக்கியம், ஆர்கானிக் போன்ற புதிய இயல்புநிலைக்கு மக்கள் மாறத் தொடங்கியதாலும், எனது வியாபாரம் நல்ல வளர்ச்சியை கண்டது.
ஆனால், அதே சமயத்தில் எனக்கு போட்டியும் இந்தக் காலகட்டத்தில்தான் அதிகமானது. 2021ம் ஆண்டில் என்னைப் போலவே நிறைய பிராண்டுகள் புதிதாக ஆரம்பமாகின. கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கம்பெனிகள் மார்க்கெட்டில் வந்ததால், எங்களது பிசினஸ் சரிவை சந்தித்தது.
”எனவே, இனி ஆன்லைனை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என 2021ல் சென்னையில் நேரடிக் கடையை ஆரம்பித்தோம்,” என தான் கடந்து வந்த பாதைகளையும், அதில் சந்தித்த ஏற்ற இறக்கங்களையும் விவரிக்கிறார் மோகன்.

காலத்துக்கு ஏற்ற அறிமுகம்
காலத்திற்கு ஏற்பவும், மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவும் தயாரிப்புகளையும், தங்களது வியாபார யுக்திகளையும் மாற்றுவதுதான் மோகனின் வெற்றிக்கான சூட்சுமமாம். மார்க்கெட்டில் தன்னைப் போலவே, ஹேர் ஆயில், பேஸ்கிரீம் போன்றவற்றை மற்ற கம்பெனிகள் அறிமுகம் செய்யத் தொடங்கியதும், மக்களின் தேவை என்னவென்பதை ஆராய்ந்து, அதை எப்படி கொண்டு சேர்த்தால், வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதையும் திட்டமிட்டுஜெயித்திருக்கிறார் மோகன்.
“சரிந்து கொண்டிருந்த எங்கள் வியாபாரத்தை தூக்கி நிறுத்தியது எங்களது கம்மீஸ் அறிமுகம் தான். அன்றைக்கு நாங்கள் அப்படி ஒரு தயாரிப்பை அறிமுகப் படுத்தாமல் விட்டிருந்தால், இன்று லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ் என ஒரு பிராண்ட் இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.”
2021ம் ஆண்டு எங்களுக்கு நிறைய போட்டிக் கம்பெனிகள் உருவானதும், எங்களது வியாபாரம் சரியத் தொடங்கியது. அப்போது ஏதாவது புதுமையாக செய்து எங்களை நாங்கள் மார்க்கெட்டில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அப்போதும் நான் கையில் எடுத்தது தலை முடி வளர்ச்சியைத்தான்.
தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி வளரும் என உறுதியாக நம்பினாலும், இந்தக் கால இளைஞர், இளைஞிகளுக்கு தலைக்கு எண்ணெய் வைக்க பிடிக்கவில்லை. தலையில் எண்ணெய் வைத்தால் பிசுபிசுவென இருக்கிறது, முகத்தில் வடிகிறது என ஆயிரத்தெட்டு கம்ப்ளெயிண்ட். எண்ணெயும் வைக்கக்கூடாது. ஆனால், முடியும் வளர வேண்டும் என்ற அவர்களது ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் நாங்கள் அறிமுகப்படுத்தியதுதான் சத்துக்கள் நிரம்பிய கம்மீஸ்.
”கெமிக்கல் பேஸ் இல்லாமல், பிளாண்ட் பேஸில் நாங்கள் அறிமுகப்படுத்திய கம்மீஸுக்கு நல்ல வரவேற்பு. தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப பொருட்களை அறிமுகப் படுத்தியதால், சந்தையில் மீண்டும் எங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கினோம்,” என்கிறார் மோகன்.

தனது குழுவினருடன் லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ் நிறுவனர் மோகன்
7 ஆண்டுகளில் 23 கடைகள்
ஆரம்பிக்கப்பட்ட 7 ஆண்டுகளில் ஆண்டிற்கு ரூ.30 கோடி டர்ன் ஓவர் செய்யும் பிராண்டாக வளர்ந்திருக்கிறது லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ். இணையதளம், ஆப் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 23 நேரடி கடைகளும் இயங்கி வருகிறது. இந்தியா மட்டுமின்றி 22 நாடுகளில் லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். தயாரிப்பு, விற்பனை என சுமார் 200 பேர் இந்நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர்.
“எங்களுடையது ஸ்கின்கேர் பொருட்கள் இல்லை. இது லைப்ஸ்டைல் தயாரிப்புகள். உடலில் வரும் பிரச்சினைகளுக்கு, அதற்கான தீர்வை குறைந்த விலையில் தரமானதாக தர வேண்டும். அதுதான் எங்களது வெற்றிக்கான தாரக மந்திரம்.”
ஆரம்பத்தில் நான் இப்படி ஒரு பிராண்ட் ஆரம்பித்தபோது, வீட்டுமுறையில், யுடியூப் பார்த்துத்தான் தயாரித்தேன். ஆனால் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இதுபற்றி கோர்ஸ் எல்லாம் படித்துத்தான், அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தினேன். அனுபவங்களில் இருந்துதான் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டேன்.
அடுத்ததாக, நியூட்ரிசியன் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். உதாரணத்திற்கு நமது சாப்பாடு மற்றும் பழக்கவழக்கங்களால் ஆண்மைக் குறைபாடு, கல்லீரல் பிரச்சினை, குடல் பிரச்சினை மற்றும் உடல்பருமனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயனுள்ளதாக சில பொருட்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
எங்களது தயாரிப்புகள் இந்த உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்தில் சரி செய்யும். அதோடு, அடுத்த கட்டத்திற்கு இந்தப் பிரச்சினைகள் சென்று விடாமல் தடுக்கும் என்பதை உறுதியாக கூறலாம், என்கிறார் மோகன்.

அடையாளமாக இருக்க ஆசை
குறைந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பிராண்டாக லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸை வளர்த்துள்ள மோகன், 2021ம் ஆண்டு ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன் விருது, 2024ம் ஆண்டு உதய் ரத்தன் நேஷனல் விருது, சிறிய வயதில் தென்னிந்தியாவின் ஐகானாக இருப்பதற்காக, யங்கஸ்ட் இந்தியன் ஆண்ட்ரோபிரனர் விருது என ஏராளனமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
வாய் மொழி விளம்பரங்களால் மட்டுமே இந்தளவு தனது நிறுவனம் வளர்ந்துள்ளது எனப் பெருமிதத்துடன் கூறும் மோகன்,
“விளம்பரங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை உள்ளே வர வைக்க மட்டுமே உதவும். ஆனால் தொடர்ந்து அவர்கள் நம் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், நம் தயாரிப்புகள் தரமானவையாக இருக்க வேண்டும். நாங்கள் அப்படி தரமானவற்றைத் தருவதால் மட்டுமே சந்தையில் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம்,” என்கிறார்.
தனது தொழிலை பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்காமல், தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தனது லாபத்தில், ‘ஹேப்பி ஹேண்ட்ஸ்’ என்ற பெயரில் மாதந்தோறும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் மோகன். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹேப்பி ஹேண்ட்ஸ் மூலம் பயனடைந்துள்ளனர்.
“நான் கடந்து வந்த பாதையில், என்னுடைய இந்த வளர்ச்சிக்கு, எனக்கு அறிமுகமில்லாத, நான் பார்த்திராத யார் யாரோ உதவி செய்திருப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நம்பி என் தயாரிப்புகளை வாங்குபவர்கள் மூலம் தான் நான் இந்தளவிற்கு வளர்ந்துள்ளேன். அதனால்தான் என்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஹேப்பி ஹேண்ட்ஸ் கம்யூனிட்டியை வழி நடத்தி வருகிறேன். இது சிஎஸ்ஆர் மாதிரியெல்லாம் கிடையாது.”
கையில் பணம் இல்லாமல், சாப்பிட சாப்பாடு இல்லாமல் என வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதோடு, என் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி, முதல் தொழில்முனைவோர் என பல முதல்களுக்குச் சொந்தக்காரன். அதனால் என்னைப் பார்த்து வளருபவர்களுக்கு நான் நல்லதொரு முன்மாதிரியாக, அடையாளமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னைப் பார்த்து அவர்களும் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை,” என புன்னகையோடு பேட்டியை முடித்துக் கொண்டார் மோகன்.

