சென்னை ‘ஐஸ்வர்யா கருத்தரித்தல்’ மையத்தில் OrbiMed Asia ரூ.350 கோடி முதலீடு!
சென்னையைச் சேர்ந்த செயற்கை கருத்தரித்தல் சேவை வழங்கும் Iswarya Fertility Center, உலக அளவில் முன்னணி சுகாதார நலன் முதலீடு நிறுவனம் ஆர்பிமெட் ஆசியாவிடம் இருந்து ரூ.350 கோடி (37 மில்லியன் டாலர்), நிதி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த செயற்கை கருத்தரித்தல் சேவை வழங்கும் 'ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம்' (Iswarya Fertility Center), உலக அளவில் முன்னணி சுகாதார நலன் முதலீட்டு நிறுவனம் ஆர்பிமெட் ஆசியாவிடம் (OrbiMed Asia) இருந்து ரூ.350 கோடி (37 மில்லியன் டாலர்), நிதி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கருத்தரித்தல் நலனை விரிவாக்கி, நாட்டின் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை எதிர்கொள்ள உதவும் நோக்கம் கொண்ட பயணத்தில் இந்த முதலீடு முக்கிய மைல்கல் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
1986ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மையம், எட்டு மாநிலங்களில் 85க்கும் அதிகமான கிளைகளோடு தென்னிந்தியாவின் மிகப்பெரிய செயற்கை கருத்தரித்தல் வலைப்பின்னலாக உருவாகியுள்ளது. இதன் நிர்வாக இயக்குனர் டாக்டர்.அருண் முத்துவேல், நிறுவன வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார். இந்த மையம் ஐவிஎப், ஐயுஐ, கருத்தரித்தல் பாதுகாப்பு, மரபணு சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
இந்த புதிய முதலீடு, ஐஸ்வர்யா ஏற்கனவே உள்ள சந்தைகள் மற்றும் புதிய சந்தைகளில் புதிய மையங்களை அமைக்க உதவும். மேலும், கிளினிகல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் திறன் ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவும்.

டாக்டர்.அருண் முத்துவேல்
"நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐஸ்வர்யா, தாய்மை அடைவதை சாத்தியமாக்கும் ஒற்றை நோக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எங்கள் அடுத்த கட்ட திட்டம் தெளிவாக இருக்கிறது. – இந்திய அளவிலான எங்கள் இருப்பை வலுவாக்க வேண்டும். கிளினிக்கல் பலனை மேம்படுத்த வேண்டும். இந்த பயணத்தில் ஆர்பிமெட் ஆதரவை வரவேற்கிறோம்,” என நிர்வாக இயக்குனர் டாக்டர்.அருண் முத்துவேல் கூறியுள்ளார்.
"1986ல் நாங்கள் துவங்கிய போது ஐவிஎப் பெரும்பாலான இந்திய குடும்பங்களுக்கு எட்டாமல் இருந்தது. எங்கள் மையங்கள் துவக்கம் முதல் கிளினிகல் திறன், பரிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறோம். கிளினிகல் ஈடுபாடு, தார்மீக செயல்முறை ஆகியவை எங்களை வழிநடத்துகின்றன,” என நிறுவனர் மற்றும் முதன்மை கிளினிகல் அதிகாரி டாக்டர்.எஸ்.சந்திரலேகா கூறியுள்ளார்.
“வலுவான கிளினிகல் பலன், நம்பகமான பிராண்ட், செயல்திறன் மிக்க செயல்பாடு, அனுபவம் மிக்க தலைமை ஆகிய அம்சங்களால் ஐஸ்வர்யா நாட்டின் முன்னணி கருத்தரித்தல் மையமாக உருவாகியுள்ளது. டாக்டர்.அருண் மற்றும் டாக்டர்.சந்திரலேகா மற்றும் அவர்கள் குழுவுடன் இணைந்து செயல்படுவதில் உற்சாகம் கொள்கிறோம்,” என்று ஆர்பிமெட் பாட்னர், மூத்த நிர்வாக இயக்குனர் டாக்டர்.சன்னி சர்மா மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் சதானந்தம் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan

