சர்க்கரை இல்லா ஜீரோ கலோரி ‘ஸ்பார்கிளிங் வாட்டர்’ - சென்னை இளைஞரின் ஆரோக்கிய முயற்சி!
2021-ம் ஆண்டு இறுதியில் கௌரவ் கெம்காவால் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட Polka Pop ஸ்பார்கிளிங் வாட்டர் பிராண்ட் 2022-2023 நிதியாண்டில் 2 கோடி ரூபாய் வருவாயை எட்ட திட்டமிட்டிருக்கிறது.
பானங்கள் என்றாலே ஆரோக்கியமற்றது என்கிற எண்ணம் நம் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. இதற்குக் காரணம் அவற்றில் இருக்கும் சர்க்கரை அளவும் கலோரி அளவும்தான்.
குளிர் பானங்களை விரும்பிக் குடிப்பவர்கள் இந்தக் காரணங்களுக்காகவே இவற்றைத் தவிர்ப்பதுண்டு. அதிலும், குறிப்பாக சமீபத்திய கொரோனா பரவல், மக்களை ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்ட வைத்துள்ளது. நாம் என்ன உட்கொள்கிறோம் என்பதை உணர்ந்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். இந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில் ஆரோக்கியமற்ற பானங்களுக்கு மத்தியில் அவற்றிற்கு சிறந்த மாற்றாக சர்க்கரையோ கலோரியோ இல்லாத பானம் அறிமுகமானால் எப்படி இருக்கும்?
அப்படிப்பட்ட பானம்தான்
. இதன் நிறுவனர் கௌரவ் கெம்கா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். லயோலா கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார். அமெரிக்காவிலுள்ள உலகின் முன்னணி கல்லூரியான பாப்சன் கல்லூரியில் எம்பிஏ முடித்துள்ளார்.இவர் சிறு வயதில் உணவுப் பழக்கங்களில் அதிக அக்கறை காட்டவில்லை. இதன் விளைவு கொலஸ்ட்ரால், ஆஸ்துமா போன்ற நோய்கள் பள்ளிப் பருவத்திலேயே எட்டிப் பார்த்திருக்கின்றன.
ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நடு இரவில் தூக்கத்தில் இவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார்கள். அந்த அளவிற்கு உடல்நலன் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஒருகட்டத்தில் உடல் நலனில் அக்கறை காட்ட முடிவு செய்தார். ஜங்க் உணவுகளை தவிர்த்திருக்கிறார். வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தார். விரைவிலேயே இரண்டு நோய்களிலிருந்தும் மீண்டிருக்கிறார். இந்த சம்பவம்தான் ஆரோக்கியத்தின் பக்கம் அவரது கவனம் திசை திரும்ப்யிருக்கிறது.
Polka Pop பிறந்தது எப்படி?
கௌரவ் முதுநிலை படிப்பிற்காக அமெரிக்கா சென்றபோதுதான் அங்கிருக்கும் மக்கள் ஸ்பார்கிளிங் வாட்டர் (Sparkling water) குடிப்பதைப் பார்த்திருக்கிறார்.
“முதல்ல இதைப் பார்த்தப்ப இந்த பிராடக்ட் என்னன்னே எனக்குத் தெரியலை. புரிஞ்சுக்கவே கஷ்டமா இருந்துது. ஸ்வீட்னர், சுகர், கலோரி இதெல்லாம் இருக்கற ட்ரிங்க்ஸ்தான் நான் இந்தியால பார்த்திருக்கேன். ஹெல்தை அஃபெக்ட் பண்ணாத ஒரு ட்ரிங்க்ஸ் இருக்கான்னு ஆச்சரியமா இருந்துது,” என்கிறார்.
குடும்பத்தினரை சந்திக்க இந்தியா வந்தபோது இங்கு அதேபோன்ற ஸ்பார்கிளிங் வாட்டரை தேடியிருக்கிறார். எவ்வளவோ தேடியும் இந்திய சந்தையில் அப்படி ஒரு தயாரிப்பு கிடைக்கவில்லை. உடல்நலனை பாதிக்காத அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பு இந்தியாவில் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்துள்ளது.
“ஸ்பார்கிளிங் வாட்டர் பிராண்டோ தயாரிப்போ இந்திய சந்தையில் இல்லைன்னு தெரிஞ்சதும் நானே தயாரிக்க முடிவு பண்ணேன். இப்படித்தான் Polka Pop ஆரம்பிக்கப்பட்டுது,” என்கிறார்.
2018-ம் ஆண்டு கௌரவ் அமெரிக்கா சென்றிருக்கிறார். 2019-ம் ஆண்டில் ஸ்பார்கிளிங் வாட்டர் பற்றிய எண்ணமும் அது தொடர்பான ஆய்வும் தொடங்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் Polka Pop சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலீடு மற்றும் வருவாய்
கௌரவ், பாப்சன் கல்லூரியில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஸ்காலர்ஷிப் அவார்ட் வென்றிருக்கிறார். இந்தத் தொகையையே ஆரம்பத்தில் Polka Pop முயற்சிக்கு சீட் நிதியாக பயன்படுத்தினார். தற்போது சுயநிதியில் இயங்கி வரும் இந்த ஸ்டார்ட்-அப், முதல் சுற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
Startup TN வழங்கிய TANSEED 2.0 கிராண்ட் தொகையான 10 லட்ச ரூபாயை Polka Pop வென்றுள்ளது. இதற்காக 600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதிலிருந்து தேர்வான 19 ஸ்டார்ட் அப்களில் Polka Pop நிறுவனமும் அடங்கும்.
தற்போது மின்வணிக தளங்கள் மூலமாகவும் சொந்த வலைதளம் மூலமாகவும் மாதத்திற்கு 35,000-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மாதம் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள். 2022-2033 நிதியாண்டில் 2 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறுகிறார் கெளரவ்.
நிறுவனத்தின் விஷன்
“மக்களோட ஹவுஸ்ஹோல்ட் பிராண்டாக மாறணும். இதுதான் என்னோட விஷன். Polka Pop ஒரு கிளீன் பிராடக்ட், நம்ம உடம்புக்கு எந்த ஒரு கெடுதலும் வராதுன்ற நம்பிக்கையை மக்கள் மனசுல ஏற்படுத்தறதுதான் என் நோக்கம்,” என்றார் கெளரவ் கெம்கா.
அடுத்ததாக சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. Polka Pop இதில் அதிக அக்கறை காட்டுகிறது.
“ஒரு பிராண்டா ’பிளாஸ்டிக் நியூட்ரல்’ ஆகணும்னு விரும்பறோம். அதுக்கான வேலைகளையும் தொடங்கியிருக்கோம். ஏற்கெனவே மறுசுழற்சிக்காக ஒரு நிறுவனத்தோட கைகோர்த்திருக்கோம். இந்த நிறுவனம்கூட சேர்ந்து ஒரு மாசத்துல 100 கிலோவுக்கும் மேல பிளாஸ்டிக் ரீசைக்கிள் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்,” என்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு PET பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார். சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் PET மெட்டீரியல் ஓரளவிற்கு சிறந்தது என்கிறார் கௌரவ்.
தனித்துவமான பானம்
“நேச்சுரல் ஃப்ளேவர், கார்பனேட்டர் வாட்டர் யூஸ் பண்றோம். Polka Pop சுகர், ஸ்வீட்னர், பிரிசர்வேடிவ், கலோரி எதுவுமே இல்லாத க்ளீன் பிராடக்ட். டயாபடிக் இருக்கறவங்க, கீட்டோ, வீகன் மாதிரியான டயட்ல இருக்கறவங்க எல்லாருமே Polka Pop குடிக்கலாம். ஃபிஸ்ஸியா, ஃப்ளேவர்ஃபுல்லா குடிக்க பிடிக்கறவங்க தண்ணிக்கு பதிலா Polka Pop குடிக்கலாம். ஆல்கஹால் குடிக்கற பழக்கம் இருக்கறவங்க இதை மிக்ஸ் பண்ணியும் குடிக்கலாம்,” என்கிறார் கௌரவ். கௌரவ் Polka Pop பற்றி மேலும் விவரிக்கும்போது,
“இந்தியாவின் முதல் ஃப்ளேவர்ட் ஸ்பார்கிளிங் வாட்டர் பிராண்ட். ஃப்ளேவர் இல்லாத ஸ்பார்கிளிங் வாட்டர் இருக்கு. ஆனா, ஃப்ளேவர்ட் செக்டார்ல நாங்கதான் முதல்ல அறிமுகமாகியிருக்கோம். ஃப்ளேவர்ட் ஸ்பார்கிளிங் வாட்டர் தயாரிச்சு கொடுக்கற முதல் ’மேட் இன் இந்தியா’ பிராண்ட் Polka Pop. இதுல இயற்கையான பழங்கள்லேர்ந்து எடுக்கப்பட்ட நேச்சுரல் ஃப்ளேவர்தான் சேர்க்கப்பட்டிருக்கு,” என்கிறார்.
வாடிக்கையாளர்களின் ஏற்புத்தன்மை
இந்த பிராடக்ட் பற்றி ஏற்கெனவே தெரிந்தவர்கள் ஒரு பிரிவினர். ஸ்பார்கிளிங் வாட்டர் பற்றியே அறியாதவர்கள் மற்றொரு பிரிவினர்.
முதல் பிரிவினர் மத்தியில் உடனடியாக Polka Pop நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தயாரிப்பு பற்றியே தெரியாத இரண்டாவது தரப்பினருக்கு இதை புரியவைக்க வேண்டியிருந்தது என்கிறார் கௌரவ். மொத்தத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்.
தயாரிப்புப் பணிகள்
Polka Pop லெமன், ஆரஞ்சு, பீச், கிரான்பெர்ரி என நான்கு சுவைகளில் கிடைக்கின்றன.
Polka Pop பிராடக்ட்ஸ் ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பாளர்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக தொழிற்சாலை எதுவும் செயல்படவில்லை. இந்த ஒப்பந்த தயாரிப்பாளர்கள் மும்பையில் இருக்கின்றனர்.
விற்பனை
350 மி.லி Poplka Pop 60 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்சமயம் ஆன்லைன் விற்பனையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அமேசான், ஸ்விக்கி, Blinkit போன்ற தளங்களிலும் வலைதளம் மூலமாகவும் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் Polka Pop செயல்படுகிறது. ஸ்விக்கி, Blinkit போன்றவற்றின் மூலம் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. சில குறிப்பிட்ட ஸ்டோர்களில் மட்டும் ஆஃப்லைனில் கிடைக்கின்றன.
ஆன்லைனில் அதிக கவனம் செலுத்தி வருவதால் டிஸ்ட்ரிப்யூட்டர்களில் கவனம் செலுத்தவில்லை. டிஸ்ட்ரிபியூஷன் தொடர்பாக பலர் அணுகினாலும்கூட அதற்கு சற்று அவகாசம் தேவைப்படுவதாக கௌரவ் கருதுகிறார்.
ஆஃப்லைனில் செயல்பாடுகளில் முழுவீச்சில் இறங்குவதற்கு முன்பு ஆன்லைனில் மேலும் சிறப்பாக பிராண்டை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும் என்பது அவரது திட்டம்.
சவால்கள்
தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவால் என்கிறார். சுகர், ஸ்வீட்னர் போன்றவை கலக்கப்பட்ட பானங்களுக்கு மக்கள் பழகிப்போயிருக்கின்றனர். இவை எதுவுமே இல்லாத ஒரு கிளீன் பிராடக்டை மக்களுக்கு பரிச்சயப்படுத்துவது மிகப்பெரிய சவால் என்கிறார்.
ஒவ்வொரு ஸ்டார்ட் அப் முயற்சியிலும் இருப்பது போன்றே Polka Pop சவால்களைக் கடந்தே வந்திருக்கிறது.
“சவால்கள் எதுவுமே இல்லைன்னாதான் ஏதோ பிரச்சனை இருக்குன்னு அர்த்தம். சவாலோட சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதுதான் Fun,” என்கிறார்.
வருங்காலத் திட்டங்கள்
ஒரு மாதத்தில் 35,000 பாட்டில்கள் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் உள்ள காலகட்டத்திற்குள் விற்பனை அளவை 1 லட்சம் பாட்டில்களாக அதிகரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிளீன் பிராண்டாக Polka Pop பிராண்டை கொண்டுசெல்ல விரும்பும் கௌரவ், புதிய ஃபேளேவர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். அதேபோல், மற்ற பானங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.