சென்னை ஸ்டார்ட்அப் 'சாய்காந்த்'- டீக்கடையை தனி பிராண்டாக உயர்த்திய சுரேஷ் ராதாகிருஷ்ணன்!
2016ல் உயர்ரக தேநீர் தொழிலை ஒரு ஸ்டார்ட் அப்பாக தொடங்கி அதில் பின்னடைவு ஆனபோதும் மனம் தளராமல் ’சாய்காந்த்’ என்ற பிராண்டை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.
தொழில்முனைவு பாதை என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான முடிவு. எந்த ஒரு தொழில்முனைவும் எடுத்த எடுப்பில் வெற்றியை தந்துவிடாது, இரண்டு, மூன்று முறை முயற்சித்து பார்த்துவிட்டு அலுவலகப்பணிக்கே திரும்பி விடுபவர்களும் உண்டு. ஆனால் தொழில்முனைவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய 10 ஆண்டுகளில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் மனம் சோர்ந்து விடாமல் கஜினி முகமது போல தொடர்ந்து முயற்சித்து இறுதியில் தனது சொந்த முயற்சியின் பலனாக தேநீர் வியாபார சந்தையில் தனித்துவம் மிக்க பிராண்டாக ‘சாய்காந்த்’(Chaikanth)ஐ உருவாக்கியுள்ளார் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.
சாய்கிங்-கை தனித்து தொடங்கிய சுரேஷ், ‘சாய்காந்த்' என்று ரீப்ராண்ட் செய்ய முன்னிட்ட நேரத்தில் தனது பயணத்தில் உறுதுணையாக இருக்க ஒரு இணை நிறுவனரை தேடினார். அப்போது தன்னுடைய நண்பரும், மெட்ராஸ் பிரியாணி-ன் நிறுவனர் சங்கர் சுப்ரமணியனை சாய்காந்தின் செயல்பாடுகளில் உதவிட அவரை இணை நிறுவனராக்கிக் கொண்டார் சுரேஷ்.
“காபி பிரியர்களுக்காக பிரத்யேகமாக பல பிராண்டட் கடைகள் செயல்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் நாம் தினசரி இரு வேளை பழகிவிட்ட விஷயங்களில் ஒன்று காலையும் மாலையும் தேநீர் அருந்துவது. மனிதனின் அன்றாட வாழ்வியலில் சிறப்பு இடம் வகிக்கும் தேநீருக்கென பிரத்யேகமாக ஒரு பிராண்ட் கடையை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டதாகக் கூறுகிறார் பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த இளம் தொழில்முனைவர் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.
இதன் விளைவாக 2016ம் ஆண்டில் ரூ.10 லட்சம் முதலீட்டில் ’சாய்கிங்’ என்ற பிராண்ட் பெயரில் சென்னையின் முக்கியப் பகுதிகளில் உயர்ரக தேநீர் கடைகளை அமைத்து நடத்தி வந்துள்ளார். அலுவலகங்களுக்கு தேநீர் டெலிவரி, கடைகளுக்கு வந்து தேநீர் அருந்துபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக விதவிதமான சுவைகளில் கட்டுபடியாகும் விலையில் தேநீர் விற்பனை என தொடக்கம் செம பிக்அப்பையும் நற்பெயரையும் சுரேஷிற்கு கொடுத்துள்ளது.
எண்ணமும், தொழில்வடிவமும் புதிதாக இருந்த போதும் சாய்கிங்கை அடுத்த லெவலிற்கு வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் விதமாக மாற்றி வடிவமைக்க திட்டமிட்டார் சுரேஷ். இதனால்,
புதிதாக ஒரு துறையில் நுழைந்து ஓராண்டு பெற்ற அனுபவம் இதே உணவுத் துறையில் நிச்சயம் வெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. சாய்கிங்கை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக ரீட்டெய்ல் சந்தையில் கொண்டு வரவேண்டும் என திட்டமிட்டு செயல்படத் தொடங்கியதாக,” கூறுகிறார் சுரேஷ்.
தனது ஸ்டார்ட் அப்பை குழந்தையை வளர்ப்பது போல பார்த்து பார்த்து வளர்த்திருக்கிறார் சுரேஷ். “சாய்கிங்கில் என்னென்ன சவால்களை சந்தித்தோமோ அதற்கான தீர்வுகளுடன் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுப்பொலிவுடன் சாய்கிங் ‘சாய்காந்த்’ ‘Chaikanth' என ரீ பிராண்டு செய்யப்பட்டு அவுட்லெட்கள் திறக்கப்பட்டன.
தற்போது வரை ஷாப்பிங் மால்கள், ஐடி கம்பெனிகள் நிறைந்த பகுதிகள் என மொத்தம் 10 இடங்களில் சாய்காந்த் அவுட்லெட்கள் திறக்கப்பட்டுள்ளன.
“ஒரு மாஸான பெயராக இருக்க வேண்டுமே என ’Chaikanth’ என பெயர் மாற்றம் செய்தோம். பெயரில் மட்டும் மாஸாக இருக்கக் கூடாது சுவையிலும் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக தேநீரிலும் புதுமைகளை கொண்டு வந்தோம். சர்க்கரை, நாட்டு சர்க்கரை, தேன் என 3 வகை இனிப்பு கொண்டு தேநீர். கற்பூரவல்லி தேநீர், கருப்பட்டி தேநீர் என 21 வகை தனித்துவமான தேநீர்கள் சாய்காந்த் அவுட்லெட்களில் அறிமுகம் செய்துள்ளோம்,” என்று சொல்கிறார் சுரேஷ்.
மென்பொருள் பொறியியல் படித்து விட்டு 7 ஆண்டுகள் ஐடி துறை சார்ந்த ஸ்டார்ட் அப்பை செய்து வந்த சுரேஷிற்கு அதில் லாபம் பார்ப்பது சிரமமாக இருந்ததால் பரிட்சயமே இல்லாவிட்டாலும் உணவுத் துறை சார்ந்த தொழில்முனைவு வெற்றியைத் தரும் என்று நம்பி இந்தத் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். சமைத்தல் என்பது ஒரு கலை, உணவுத் துறையை பொருத்த வரையில் பெரிதாக எந்த தவறும் நடக்க வாய்ப்பு இல்லை. ஒரு நிலையான தரத்தை நாம் பிராண்ட் செய்யும் உணவுப் பொருளில் கொண்டு வந்துவிட்டால் வெற்றி பெறலாம் என நினைத்தேன். இந்த ஸ்டார்ட் அப்பில் நான் படித்த பொறியியல் நுணுக்கங்களை பயன்படுத்தி செயல்படுத்தினேன் என்கிறார் அவர்.
எங்களுடைய தேநீர் அவுட்லெட்களில் டீ மாஸ்டர்கள் என்ற கான்செப்டே கிடையாது. யார் வேண்டுமானாலும் வரலாம் அவர்களே கூட தேநீரை போட்டு அருந்தலாம். நாங்களாக தேநீர் போட்டுக் கொடுத்தாலும், அவர்களாகவே போட்டு குடித்தாலும் பால் உள்ளிட்ட இதர பொருட்கள் அனைத்தும் எந்த அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ஒரு ஃபார்முலா போல பின்பற்றப்படுவதால் சுவையில் குறை ஏற்பட வாய்ப்பே இல்லை.
மற்றொருபுறம் தேநீர் தூள் நேரடியாக தேயிலை எஸ்டேட்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சாதாரண டீக்கடைகளில் இடம் சுத்தமாக இருக்காது, டீ கிளாஸ்கள் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யப்படாது, தேயிலை தூள் தயாரித்த 6 மாதத்திற்கு பிறகே கடைக்காரருக்கு வந்து சேரும்.
ஆனால் சாய்காந்தில் கிடைக்கும் தேநீர் தனிச்சுவையோடு இருப்பதற்கு முக்கியக் காரணம் தேயிலையை பறித்த 18வது நாளில் அத்தூள் கடைக்கு கொண்டுவரப்படுவதால் அதன் சுவை, நிறம் மற்ற கடைகளின் டீயை பின்னுக்குத் தள்ளிவிடும். சாய்காந்த் ஓராண்டில் வெற்றி பெற்றதற்கான தொழில் ரகசியமும் இதுதான் என்கிறார் சுரேஷ்.
சாய்காந்த் பிராண்டை அடுத்த 5 ஆண்டிற்குள் நாடு முழுவதும் 300 அவுட்லெட்களை திறக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.
சாய்காந்த் ஸ்டார்ட் அப்பிற்கான தொழில் வடிவம் இருந்த போதும் முதலீடு செய்ய போதுமான நிதிஆதாரம் சுரேஷிடம் இல்லை. எனினும் நிதி இல்லாததை ஒரு காரணமாக நினைக்காமல் அவர் எடுத்து வைத்த அடி இன்று அவரது தன்னம்பிக்கைக்கான பலனை தந்துள்ளது.
“சாய்கிங் தொடங்குவதற்கு கையில் இருந்த சேமிப்புகள் அனைத்தும் செலவாகியது, எனினும் பணம் இல்லை என்ற காரணத்திற்காக சோர்ந்து விடக் கூடாது என்று சாய்கிங்கில் கற்ற பாடங்களை வைத்து புது பிசினஸ் மாடலை உருவாக்கினேன். ஒரு வழியாக சாய்காந்த் தொழில் வடிவம் பெற்றது ஆனால் முதலீட்டிற்கு நிதி இல்லை.”
எனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் சளைக்காமல் சாய்காந்த் தொழில்வடிவம் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் எடுத்துச் சொல்லி வந்தேன். பலருக்கு தொழிலில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும் ஆனால் அவர்களுக்கு நேரம் இருக்காது இப்படியானவர்களை சந்தித்து சாய்காந்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு என்ற முறையில் அணுகி இறுதியில் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைத்த நிதியை வைத்தே சாய்காந்த் தொடங்கப்பட்டது. எந்த ஒரு தொழிலைத் தொடங்கவும் நிதி என்பதே முதல் ஆதாரம் இல்லை, அது இரண்டாம் பட்சம் தான் நல்ல தொழில் வடிவத்தை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் சுரேஷ்.
பலருக்கு தொழிலில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும், ஆனால் அவர்களுக்கு நேரம் இருக்காது இப்படியானவர்களை சந்தித்து சாய்காந்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு என்ற முறையில் அணுகி இறுதியில் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைத்த நிதியை வைத்தே சாய்காந்த் தொடங்கப்பட்டது.
எந்த ஒரு தொழிலைத் தொடங்கவும் நிதி என்பதே முதல் ஆதாரம் இல்லை, அது இரண்டாம் பட்சம் தான் நல்ல தொழில் வடிவத்தை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் சுரேஷ்.
நாம் எதையாவது சாதிக்க நினைத்தால் அதற்கான விஷயங்கள் தானாக அமையும், அல்லது நம்மை அறியாமலே நாம் அதை அமைத்துக் கொள்வோம். உலகில் நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் நமக்கு சாதகமாக அமைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும் தளர்ந்து விடக்கூடாது.
என்னை பொருத்தவரை எவ்வளவு சீக்கிரம் தோல்வியடைகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நாம் ஒரு அனுபவப் பாடம் கற்றுக் கொள்கிறோம் என தான் கருதுவேன். ஜெயிக்க நினைப்பவர்களுக்கு தோல்வி தான் அதிகமாக இருக்க வேண்டும், வெற்றி மட்டுமே பெற்றால் அடுத்த கட்டத்திற்கு போகாமல் முடங்கி விடுவோம்.
Fail fast learn fast; செய்த தவறை திரும்பவும் செய்யாமல் தவறு செய்துவிட்டு அதில் இருந்து பாடம் கற்று அதனை தவிர்த்தாலே போதும் இலக்கை அடைந்துவிடலாம் என்கிறார் சுரேஷ்.
ரூ. 1.5 கோடி முதலீட்டில் சாய்காந்த் தொடங்கப்பட்ட நிலையில் ஓராண்டிற்குள் முதலீட்டிற்கு ஏற்ப லாபத்தையும் பிராண்ட் பெயரையும் பெற்றுவிட்டதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் சுரேஷ்.
சாய்காந்தை தனி பிராண்டாக உருவாக்கி சந்தையில் பிரபலப்படுத்திவிட்டோம். அடுத்த கட்டமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவுட்லெட்கள் அமைத்து சாய்காந்தை மேலும் வாடிக்கையாளர்கள் பிரெண்ட்லியாக மாற்ற திட்டமிட்டு அதற்கான முன்னெடுப்புகளில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் சுரேஷ்.
9 ஆண்டுகால தொழில்முனைவுப் பாதையில் தோல்விகள் மேல் தோல்வி கண்டாலும் தேநீர் கடைக்கு கார்ப்பரேட் ஸ்டைல் பிராண்டாக சாய்காந்தை சந்தையில் அறிமுகம் செய்து தலைநிமிர்ந்து நிற்கிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.
வலைதள முகவரி: Chaikanth