அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘AGNI’ டெவலப்பர் போர்டு
இந்தக் கூட்டாண்மையின் கீழ், அடல் இன்னோவேஷன் மிஷனின் ஆதரவுடன், சென்னையில் உள்ள ஐந்து அரசு பள்ளிகளில் இந்த வாரம் முதல் AGNI போர்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்
ஐஐடி மெட்ராஸின் ஃபேப்லெஸ் செமிகண்டக்டர் நிறுவனமான 'மைன்ட்குரோவ் டெக்னாலஜீஸ்' (Mindgrove Technologies), சென்னையைச் சேர்ந்த கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான அடும்எக்ஸ் (AtumX) உடன் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘AGNI’ எனப்படும் உள்நாட்டு டெவலப்பர் போர்டுகளை வழங்குகிறது.
இந்தக் கூட்டாண்மையின் கீழ், அடல் இன்னோவேஷன் மிஷனின் ஆதரவுடன், சென்னையில் உள்ள ஐந்து அரசு பள்ளிகளில் இந்த வாரம் முதல் AGNI போர்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். தொடர்ந்து, வரும் மாதங்களில் இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
டெவலப்பர் போர்டு என்பது ஒரு பிராசஸர் அல்லது மைக்ரோ கண்ட்ரோலரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய சர்க்யூட் போர்டு ஆகும். இதன் மூலம் மின்னணு சாதனங்களுக்கான பயன்பாடுகளை உருவாக்கவும், சோதிக்கவும், முன்மாதிரிகளைத் தயாரிக்கவும் முடியும்.
“இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட சிப் மூலம் இயங்கும், இந்தியாவின் முதல் உள்நாட்டு டெவலப்பர் போர்டு AGNI. பொறியாளர்களும் அசல் சாதன உற்பத்தியாளர்களும் உண்மையான தயாரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்தும் அதே சிலிக்கான் தளம்தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கல்விக்காக எளிமைப்படுத்தப்பட்ட அல்லது பொம்மை போன்ற சாதனம் அல்ல,” என்று மைண்ட்குரோவ் டெக்னாலஜீஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சஷ்வத் டி.ஆர். தெரிவித்தார்.
AGNI மூலம் மாணவர்கள் நிரலாக்கம் மற்றும் மின்னணுவியல் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதுடன், செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களை உருவாக்கவும், ரோபோட்டிக்ஸ் சார்ந்த சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். இதன் மூலம் இந்தியாவின் எதிர்கால செமிகண்டக்டர் துறைக்குத் தேவையான திறமையான மனிதவளத்தை ஆரம்ப நிலையிலேயே உருவாக்குவதும் நோக்கமாக உள்ளது.
AGNI, மைண்ட்குரோவின் ‘Secure IoT SoC’ எனப்படும் சிஸ்டம்-ஆன்-சிப் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதில் பிராசஸர் உள்ளிட்ட முக்கிய கணினிச் செயல்பாடுகள் ஒரே சிப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது திறந்த மூலமான RISC-V கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இதனால் நிறுவனங்கள் தனியுரிமை கொண்ட சிப் வடிவமைப்புகளைச் சார்ந்திருக்காமல் தங்களுக்கான பிராசஸர்களை வடிவமைக்க முடியும்.
வகுப்பறைப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் AGNI போர்டை அடும்எக்ஸ் மாற்றியமைத்துள்ளது. மாணவர்களுக்கு எளிதில் புரியும் நிரலாக்கச் சூழல் இதில் வழங்கப்பட்டுள்ளது. முதலில் லெகோவைப் போல ‘டிராக் அண்ட் டிராப்’ முறையில் பிளாக் அடிப்படையிலான கோடிங் கற்றுக்கொண்டு, பின்னர் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை உருவாக்கும் வகையில் மாணவர்களின் கற்றல் படிப்படியாக மேம்படுத்தப்படுகிறது.
