‘முழுமையான இருதய நோய் சிகிச்சை’ மையமாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அமெரிக்க சான்றிதழ்!
இருதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் அமெரிக்க இருதய சங்கம் வழங்கிய இந்த உயரிய சான்றிதழ், மாரடைப்பு மற்றும் நெஞ்சு வலி நோயாளிகளுக்கு துரிதமான மற்றும் தரமான சிகிச்சையை வழங்குவதில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கடைப்பிடித்து வரும் சர்வதேச தரநிலைகளை அங்கீகரிக்கிறது.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை’, அமெரிக்க இருதய சங்கமான அமெரிக்கன் ஹார்ட் சங்கம் (The American Heart Association) வழங்கும் “முழுமையான இருதய நோய் சிகிச்சை மையம்” (Comprehensive Chest Pain Center) என்ற சான்றிதழை பெற்று, தமிழகத்தில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற முதல் மருத்துவமனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இருதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும் அமெரிக்க இருதய சங்கம் வழங்கிய இந்த உயரிய சான்றிதழ், மாரடைப்பு மற்றும் நெஞ்சு வலி நோயாளிகளுக்கு துரிதமான மற்றும் தரமான சிகிச்சையை வழங்குவதில் மருத்துவமனை கடைப்பிடித்து வரும் சர்வதேச தரநிலைகளை அங்கீகரிக்கிறது.
இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டதை ஒட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் டி.மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் உள்ளிட்டோர் மற்றும் இதயவியல் துறையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சர்வதேச அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தையும், உலகத் தரத்திலான இருதய சிகிச்சை சேவையை வழங்குவதற்கான மருத்துவமனையின் உறுதிப்பாட்டையும் அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் இதய நோய்கள் 30 முதல் 69 வயதுக்குட்பட்டோரின் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 36 சதவீதத்திற்குக் காரணமாக உள்ளன. மேலும், அண்மையில் கிடைத்த தரவுகளின்படி, மாரடைப்பு காரணமான உயிரிழப்புகள் ஆண்டுதோறும் 12.5 சதவீதம் அதிகரித்து வருகின்றன. இதனால், மிகக் கடுமையான மாரடைப்பு வகையான ST-Elevation Myocardial Infarction (STEMI) நோயாளிகளுக்கான சிகிச்சைத் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க இதய சங்கத்தின் முழுமையான நெஞ்சுவலி சிகிச்சை மையம் சான்றிதழ், மாரடைப்பு நோயாளிகளுக்கான சிகிச்சையில் கடுமையான தரநிலைகளை பூர்த்தி செய்யும் அல்லது அதையும் தாண்டிய சிறப்புடைமை பெற்ற மருத்துவமனைகளுக்கே வழங்கப்படுகிறது. மாரடைப்பை விரைவாகக் கண்டறிந்து, துல்லியமான மற்றும் மேம்பட்ட சிகிச்சையை வழங்கும் திறனை நிரூபித்த மருத்துவ நிறுவனங்களே இந்த அங்கீகாரத்தைப் பெறுகின்றன.
முழுமையான மார்பு வலி மையங்கள், மாரடைப்பு நோயாளிகளுக்கு அவசரகால சிகிச்சை வழங்க தேவையான நிபுணத்துவம், உள்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கப் பயன்படும் உயிர்காக்கும் Percutaneous Coronary Intervention (PCI) சிகிச்சையை உடனடியாக வழங்கும் திறன் அவற்றிடம் இருக்க வேண்டும். மேலும், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலான சிகிச்சை நடைமுறைகள், தொடர்ச்சியான தர மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த நோயாளர் பராமரிப்பு ஆகியவற்றிலும் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும்.
அமெரிக்க இதய சங்கத்தின் சர்வதேசக் குழுவின் வரவிருக்கும் இணைத் தலைவர்கள் கூறுகையில்,
“உலகளவில் இதய நோய் இன்னும் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணமாக உள்ளது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமானது. மருத்துவமனைகளும் சுகாதார சேவை வழங்குநர்களும் விரைவாகவும் திறமையாகவும் சிகிச்சையை ஒருங்கிணைக்கத் தயாராக இருக்க வேண்டும். அதற்காகவே முழுமையான நெஞ்சு வலி சிகிச்சை மைய சான்றிதழ் வழங்கல் திட்டத்தை உருவாக்கினோம். இது மருத்துவமனைகள் ஒருங்கிணைந்த இதய சிகிச்சை முறையை உருவாக்கவும், இதய நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளை மேம்படுத்தவும், மாரடைப்பு மற்றும் மாரடைப்பு அல்லாத மார்பு வலி நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையை வழங்கவும் உதவுகிறது,” என்றனர்.
இந்த சான்றிதழ் திட்டத்தின் மூலம் இதய நோய் தொடர்பான உயிரிழப்புகளை கணிசமாகக் குறைப்பதே அமெரிக்க இதய சங்கத்தின் நோக்கமாகும். அதற்காக மாரடைப்பின் அறிகுறிகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரித்தல், தாமதமின்றி மருத்துவ உதவியை நாட ஊக்குவித்தல், உயிர்காக்கும் சிகிச்சையைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்தல் மற்றும் சிகிச்சையின் துல்லியத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,
“இந்தச் சான்றிதழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். குறிப்பாக எங்கள் இதயவியல் துறைக்கு இது பெருமைக்குரிய சாதனையாகும். மேம்பட்ட தொழில்நுட்பம், மருத்துவத் திறமை மற்றும் சர்வதேச தரநிலைகளை ஒருங்கிணைக்கும் சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நோயாளியும் தகுந்த நேரத்தில், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், மிக உயர்ந்த தரத்திலான இதய சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதே எங்களின் முதன்மை இலக்காகும்,” என்று தெரிவித்தார்.
தகவல் உதவி: பிடிஐ, தமிழில்: முத்துகுமார்
