2025ன் இந்தியாவின் சுயமாக உருவாகிய தொழில்முனைவோர் பட்டியலில் தீபிந்தர் கோயல் முதலிடம்!
இந்த பட்டியலை IDFC FIRST Bank மற்றும் Hurun India இணைந்து வெளியிட்டுள்ளன. 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட, இந்தியாவில் தலைமையகமுள்ள நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
உணவு விநியோகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தளமான ‘எட்டர்னல்’ (Eternal) நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் (42), இந்தியாவின் ‘மில்லேனியல்’ காலத்தின் டாப் 200 சுயமாக உருவான தொழில்முனைவோர் – 2025 (Top 200 self-made entrepreneurs of the millennia) பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலை IDFC FIRST Bank மற்றும் Hurun India இணைந்து வெளியிட்டுள்ளன. 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட, இந்தியாவில் தலைமையிடமாக கொண்டுள்ள நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான சந்தை மூலதனம் மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கான மதிப்பீடு அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.3.2 லட்சம் கோடி மதிப்புடன், தீபிந்தர் கோயலின் எட்டர்னல் நிறுவனம், முதன்முறையாக டீமார்ட் நிறுவனர் ஆர்.கே. தாமானி (70யை (ரூ. 3 லட்சம் கோடி) முந்தியுள்ளது. எட்டர்னலின் மதிப்பு, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.42 லட்சம் கோடி ஆகும். இந்தியாவின் 51 நகரங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் இதில் இடம்பிடித்துள்ளனர்.
இன்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ) நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால், ரூ.2.2 லட்சம் கோடி மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இந்தியாவின் சுயமாக உருவான தொழில்முனைவோர் பட்டியலில் இண்டிகோ இடம்பெறுவது இதுவே முதல் முறை.

Deepinder Goyal, Founder & CEO, Zomato
பெரும் வளர்ச்சி கண்ட நிறுவனங்கள்:
இந்த ஆண்டின் முக்கிய வளர்ச்சியடைந்த நிறுவனங்களாக எட்டர்னல், Groww, Anthem Biosciences, Paytm, Lenskart ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மற்றவை:
அபய் சோய் – Max Healthcare Institute (#4, ரூ.1.11 லட்சம் கோடி)
ஸ்ரீஹர்ஷா மஜேட்டி & நந்தன் ரெட்டி – Swiggy (#5, ரூ.1.06 லட்சம் கோடி)
தீப் கல்ரா & ராஜேஷ் மாகோ – MakeMyTrip (#6, ரூ.94,500 கோடி)
யஷிஷ் தாஹியா & அலோக் பன்சால் – Policybazaar (#7, ரூ.80,300 கோடி)
விஜய் சேகர் சர்மா – Paytm (#8, ரூ.72,900 கோடி)
பல்குனி நாயர் & அத்வைதா நாயர் – நைகா (#9, ரூ.67,500 கோடி)
பேயுஷ் பன்சால் உள்ளிட்டோர் – லென்ஸ்கார்ட் (#10, ரூ.6,700 கோடி)
இளம் தொழில்முனைவோர்
Zepto நிறுவனத்தின் இணைநிறுவனர்கள் கைவல்ய வோஹ்ரா (22) மற்றும் ஆதித் பாலிச்சா (23), இந்தியாவின் மிக இளம் தொழில்முனைவோர்களாகத் திகழ்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து BharatPeயின் ஷஷ்வத் நக்ராணி (27) உள்ளார்.
32 வயதுக்குட்பட்ட டாப் 10 தொழில்முனைவோரில் ரிதேஷ் அகர்வால் (31) மற்றும் அங்குஷ் சச்ச்தேவா (32) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
பெண் தொழில்முனைவோரின் சாதனை
இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பெண்கள் தொழில்முனைவர்களில் ஃபல்குனி நாயர், அத்வைதா நாயர் (Nykaa), நேஹா பன்சால் (Lenskart), ருசி கல்ரா (OfBusiness), கவிதா சுப்ரமணியன் (Upstox), ருசி தீபக் (ACKO), ஸ்ரீவித்யா ஸ்ரீநிவாசன் (Amagi), கரிமா சாவ்னி (Pristyn Care), கஜால் அலாக் (Honasa Consumer), ராஜோஷி கோஷ் (Hasura) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மூத்த மற்றும் அனுபவமிக்க தொழில்முனைவோரில், அசோக் சூட்டா (82) – Happiest Minds Technologies (#1), வி. ஜகன்னாதன் (80) – Star Health Insurance (#2), நரேஷ் திரேஹன் (79) – Medanta (#3) ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

