தீபிந்தர் கோயலின் 'Temple' - மூளையை கண்காணிக்கும் சாதனத்தின் முன்பதிவு விரைவில் தொடக்கம்!
மூளையைக் கண்காணிக்கும் அணியக்கூடிய சாதனமான 'டெம்பிள்' முன்பைவிட அளவில் குறைக்கப்பட்டு சிறிய சைசில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல், விரைவில் இந்த சாதனம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
மூளையைக் கண்காணிக்கும் அணியக்கூடிய சாதனமான(wearable device) 'டெம்பிள்' (Temple) -க்கான முன்பதிவுகளை நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளதாக, ஜொமேட்டோ மற்றும் எடெர்னல் நிறுவனரான தீபிந்தர் கோயல் வெள்ளிக்கிழமையன்று X மற்றும் LinkedIn தளங்களில் அறிவித்தார். இந்த சாதனம் அதன் முந்தைய பதிப்புகளை விட இப்போது பாதி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
"நீங்கள் இதுவரை பார்த்ததை விட டெம்பிள் இப்போது பாதிக்கும் குறைவான அளவிலேயே உள்ளது," என்று அவர் X மற்றும் LinkedIn இல் தெரிவித்தார்.
"அளவின் அடிப்படையில், சந்தையில் உள்ள அணியக்கூடிய சாதனங்களில் மிகவும் சிறியதும் மற்றும் அதிக திறன் கொண்டதும் டெம்பிள் தான். டெம்பிள் உடன் வாழ்வதும், பயிற்சி பெறுவதும் உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிறது."

லிமிடெட் லான்ச் எடிஷனின் ஒரு பகுதியாக இந்த சாதனம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனுப்பப்படும் என்றும், ஆர்வமுள்ள பயனர்கள் புதிய தகவல்களுக்கு டெம்பிளின் மெயிலிங் பட்டியலில் இணையுமாறும் அவர் கூறினார்.
இந்த சாதனம் மூளைக்குள் செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் ஏற்றத்தைக் கண்காணிக்கிறது. எனினும், இதன் விலை குறித்த விவரங்களை கோயல் இதுவரை வெளியிடவில்லை.
இந்த ஆண்டு மே மாதம், முதல் 100 சாதனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப பயனர்களுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக கோயல் அறிவித்தார். இது விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், நிறுவனர்கள், படைப்பாளிகள் மற்றும் இந்த சாதனம் குறித்து கருத்துகளை (Feedback) வழங்கக்கூடிய மற்றவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
தீபிந்தர் கோயலால் நிறுவப்பட்ட ’டெம்பிள்’ நிறுவனம், தோராயமாக 190 மில்லியன் டாலர் மதிப்பீட்டில், அதன் முதல் சுற்று நிதியாக்கத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப முதலீட்டாளர்கள் மூலமாக 54 மில்லியன் டாலர்களைத் திரட்டியுள்ளது.
தகவல் உதவி: யுவர்ஸ்டோரி

